National Security Advisor Ajit Doval meets Chinese Foreign Minister Wang Yi in delhi
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே கடந்த 30 ஆண்டுகள் மேலாக எல்லைகள் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. இதனிடையே 2024ஆம் ஆண்டுக்கான பிரிக்ஸ் அமைப்பின் 16வது உச்சிமாநாடு ரஷ்யாவில் நடைபெற்றது. இந்த மாநாட்டின் இடையே, பிரதமர் மோடிக்கும், சீன அதிபர் ஷி ஜின்பிங்குக்கும் இடையே சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பின் போது, இந்திய-சீன எல்லை பிரச்சனை குறித்து பேசப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில், இரு நாடுகளுக்கு இடையேயான எல்லை பிரச்சனையில் தீர்வு காண ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகச் சொல்லப்பட்டது.
இந்த சூழ்நிலையில், வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி முதல் செப்டம்பர் 1ஆம் தேதி சீனாவில் நடைபெறும் ‘ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு’ உச்சிமாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி ஒரு நாள் பயணமாக ஜப்பான் நாட்டிற்கு செல்லும் பிரதமர் மோடி, அதனனை தொடர்ந்து ஆகஸ்ட் 31ஆம் தேதி சீனாவுக்குச் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இரண்டு நாள் அரசு பயணமாக சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ நேற்று (18-08-25) டெல்லிக்கு வந்தார். அதனை தொடர்ந்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த நிலையில், இன்று (19-08-25) வாங் யீ, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சனை குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, “நாங்கள் குறிப்பிட்ட இலக்குகளை அடையாளம் கண்டு, ஒரு செயல்பாட்டு கட்டமைப்பை உருவாக்கினோம். எல்லைகளில் தற்போது நிலைத்தன்மை மீட்டெடுக்கப்பட்டுள்ளதைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடம் கூறினார். மேலும் அவர், “எங்கள் அழைப்பின் பேரில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமரின் சீனா வருகைக்கு சீனத் தரப்பு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது. தியான்ஜினில் நடைபெறும் வெற்றிகரமான உச்சிமாநாட்டிற்கு இந்தியத் தரப்பும் பங்களிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று கூறினார்.
முன்னதாக கடந்த ஜூன் 25ஆம் தேதி சீனாவில் நடந்த ‘ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு’ உச்சிமாநாட்டில் பங்கேற்ற மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பஹல்காம் தாக்குதல் குறித்தும் பாகிஸ்தானால் ஆதரிக்கப்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் தொடர்பான இந்தியாவின் கவலை குறித்தும் எதுவும் குறிப்பிடவில்லை என்று கூறி கூட்டமைப்பில் முடிவெடுத்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் கையெழுத்திட மறுப்பு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.