கடந்த ஏப்ரல் 22 ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் காட்டுமிராண்டித்தனமானத் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 அப்பாவி பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினரின் முன்னே கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த பயங்கரவாத தாக்குதலையடுத்து ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா பதிலடி கொடுத்தது. இந்த ஆபரேஷன் சிந்தூரில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஆகிய பகுதிகளில் இருந்த பயங்கரவாதிகளின் முகாம்கள் அழித்தொழிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. பயங்கரவாதிகளின் பயிற்சி மையங்களும் இந்திய ராணுவத்தால் தாக்கி அழைக்கப்பட்டதாகவும்  கூறப்பட்டது.

Advertisment

இதைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இருநாட்டு இராணுவங்களுக்கு இடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் பாகிஸ்தான் ஏவிய அனைத்து ட்ரோன்களையும் இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியது.  இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரு நாடுகளுக்கு இடையிலான தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அதனை தொடர்ந்து, இரு நாடுகளும் கடந்த மே 10ஆம் தேதி மாலை 5 மணியளவில் தாக்குதல் நிறுத்தியுள்ளதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தது.

Advertisment

இதற்கிடையில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான தாக்குதலை நிறுத்தியது அமெரிக்கா தான் என்றும், வர்த்தகத்தை முன்னிறுத்தி தான் இந்தியா - பாகிஸ்தானுடனான தாக்குதலை நிறுத்தினேன் என்றும் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் செல்லும் இடங்களில் எல்லாம் தொடர்ந்து பேசி வருகிறார். இந்த விவகாரம் ஒட்டுமொத்த நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்கா அதிபர் விட்ட எச்சரிக்கைக்கு கட்டுப்பட்டு பாகிஸ்தானுடனான தாக்குதல் நிறுத்தத்துக்கு இந்தியா ஒப்புக்கொண்டதா? என்ற எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். டிரம்ப்பின் கூற்றை இந்தியா மறுத்தபோதிலும், அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து பேசி வருகிறார்.

இந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான தாக்குதலை நிறுத்த சீனா சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகக் சீன அமைச்சர் தெரிவித்துள்ளார். பெய்ஜிங்கில் நடைபெற்ற சர்வதேச நிலைமை மற்றும் சீனாவின் வெளியுறவு உறவுகள் குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, “இரண்டாம் உலகப் போரின் முடிவிற்குப் பிறகு எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு பல நாடுகளில்  உள்ளூர் போர்களும், எல்லை தாண்டிய மோதல்களும் நிகழ்ந்த  வண்ணம் உள்ளன. புவிசார்ந்த  அரசியல் சிக்கல்களும் தொடர்ந்து பரவி வருகின்றன. சர்வதேச அளவில் பல நாடுகளுக்கிடையே ஏற்படும் மோதல்களைக் கையாள்வதில் சீனா பொறுப்பான முறையைக் கையாள்கிறது. சீனா, உலகில் நீடித்த அமைதியை உருவாக்க, ஒரு நல்ல நோக்கம் மற்றும் நியாயமான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது.

Advertisment

பிற நாடுகளுக்கிடையிலான பிரச்சனைக்குரிய சிக்கல்களைத் தீர்ப்பதற்கான சரியான அணுகுமுறையை சீனா பின்பற்றியது. வடக்கு மியான்மர், ஈரானிய அணுசக்திப் பிரச்சினை, பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிற்கு இடையிலான பதற்றங்கள், பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான பிரச்சினைகள், மற்றும் கம்போடியா மற்றும் தாய்லாந்திற்கு இடையிலான மோதல் ஆகிய பிரச்சனைகளில் தலையிட்டு சமாதானப் பேச்சுவார்த்தையை சீனா நடத்தியது” என்று கூறினார்.

ஏற்கெனவே இந்தியா - பாகிஸ்தான் தாக்குதலை அமெரிக்கா தான் நிறுத்தியது என்று அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறி வரும் நிலையில், தற்போது இருநாட்டு இடையிலான மோதலில் சீனா பேச்சுவார்த்தை நடத்தியதாக சீன அமைச்சர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. சீன அமைச்சரின் கருத்துக்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. ஆபரேஷன் சிந்துருக்குப் பிறகு மே 10 அன்று ஏற்பட்ட போர் நிறுத்தம், புது டெல்லிக்கும் இஸ்லாமாபாத்திற்கும் இடையே நடந்த நேரடிப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு தான் எட்டப்பட்டது என்று இந்தியா அரசு தெரிவித்துள்ளது.