நெல்லை மாவட்டம் பாப்பாக்குடியில் போலீசார் மீது தாக்குதலில் ஈடுபட்ட இருவர் சிறார்கள் எனக் கூறப்பட்ட நிலையில் ஒருவர் சிறார் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

நெல்லை மாவட்டம் பாப்பாக்குடியில் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர்களிடம் இரண்டு சிறுவர்கள் மிரட்டலில் ஈடுபட்டு ரவுடித்தனம் செய்ததாகக் கூறப்படுகிறது.  இது தொடர்பாக  ரஸ்தாவூரைச் சேர்ந்த சக்திகுமார் என்பவர் போலீஸாருக்கு தகவல் அளித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த  இருவரும் புகாரளித்த சக்திகுமாரை மிரட்டியதோடு அவர் வசிக்கும் ஊருக்குள் சென்று அரிவாளால் தாக்க முயன்றனர்.

இருவரும் ஊருக்குள் அரிவாளுடன் ரகளை செய்தது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இது போலீசாருக்கு தெரியவந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரையும் பிடிக்க முயன்றனர். அப்பொழுது உதவி காவல் ஆய்வாளரை இருவரும் வெட்ட முயன்றனர். இதனால் காத்துக் கொள்வதற்காக போலீசார் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டு இருவரையும் பிடித்தனர்.

இருவரையும் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்க திட்டமிட்டனர். இருவரும் சிறார் எனக் கருதப்பட்டதால் பெயர்களும் வெளியிடப்படாமல் இருந்தது. ஆனால் விசாரணையில் துப்பாக்கிச்சூட்டில் காயம் பட்ட சண்முகசுந்தரம் என்பவர் 18 வயது பூர்த்தியானவர் என்பது அவரது பள்ளி சான்றிதழ் மூலம் தெரிய வந்துள்ளது. எனவே அவர் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்படுவார். நீதிமன்ற காவல் மற்றும் போலீஸ் கஸ்டடியில் வைத்து விசாரிப்பது என அனைத்து நடைமுறைகளும் செயல்படுத்தப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.