கோவை அருகே இருகூர், ராவுத்தர் தரைப்பாலம் அருகே ரயில் தண்டவாளத்தில் ஆண் குழந்தையின் உடல் கிடந்தது குறித்து தகவல் வந்துள்ளது. அதன்படி போத்தனூர் ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையின் உடல் அருகே வெட்டப்பட்ட கோழி, மஞ்சள், மற்றும் எலுமிச்சம்பழம் ஆகியவை கிடந்ததால், இது நரபலியா, காதல் விவகாரமா, அல்லது வேறு காரணத்தால் உடல் வீசப்பட்டதா என்று காவல்துறையினர் தீவிரமாக விசாரித்தனர்.
சென்னை ரயில்வே இயக்குநர் வன்னிய பெருமாள் உத்தரவின் பேரில், காவல் துறைத் தலைவர் பாபு மேற்பார்வையில், கண்காணிப்பாளர் ஈஸ்வரன் நேரடி கண்காணிப்பில், கோவை ரயில்வே காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். சென்னை ரயில்வே சைபர் கிரைம் காவல்துறையினருடன் இணைந்து, பல்வேறு ரயில் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த மரிய லூயிஸ், அவரது மனைவி ராதாமணி, பிரவீன் குமார், அவரது மனைவி கீர்த்திகா, நீலிகோணம் பாளையம் பகுதியைச் சேர்ந்த அக்சய், மற்றும் அவரது மனைவி வைஷாலி ஆகியோர் சந்தேகத்திற்கு இடமாக அப்பகுதியில் சுற்றித்திரிந்தது தெரியவந்தது. இவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில், மரிய லூயிஸ் மற்றும் ராதாமணி தம்பதியருக்கு திருமணமாகி 23 ஆண்டுகள் ஆனபோதிலும் குழந்தை இல்லாததால், மகாராஷ்டிராவிற்கு சென்று வைஷாலியின் தங்கை மூலம் தெரிந்த ஒரு தம்பதியரிடம் குழந்தையைப் பெற்று, கடந்த 13-ம் தேதி காலை கோவைக்கு வந்துள்ளனர். அன்று குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்ததாகவும், அதனை மறைக்க ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் உடலை வீச முடிவு செய்ததாகவும் தெரிவித்தனர். மரிய லூயிஸ், ராதாமணி, அக்சய், பிரவீன் குமார், கீர்த்திகா ஆகியோர் சேர்ந்து காரில் இருகூர் ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள தண்டவாளத்தில் இறந்த குழந்தையின் உடலை வைத்துவிட்டு சென்றதாகவும், குழந்தை இறந்தது சனிக்கிழமை என்பதால், சம்பிரதாயப்படி கருப்பு கோழியை வெட்டி, மஞ்சள் கலந்த மசாலாப் பொடி தூவியதாகவும் ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து, காவல்துறையினர் ஆறு பேர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர். குழந்தை தத்தெடுக்கும் சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல், சட்டவிரோதமாக குழந்தையை வாங்கியது, இறந்த குழந்தையின் உடலை ரகசியமாக மறைத்து தண்டவாளத்தில் வைத்தது, குழந்தையின் இறப்பை முறையாகத் தெரிவிக்காமல் மறைத்தது, மற்றும் உடலை முறைப்படி அடக்கம் செய்யாமல் அவமரியாதை செய்த குற்றங்களுக்காக, அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.