சென்னையில், சளி தொல்லையால் பாதிக்கப்பட்ட எட்டு மாத குழந்தைக்கு தைலத்துடன் கற்பூரத்தை சேர்த்து பெற்றோர்கள் தேய்த்ததால் குழந்தை உயிரிழந்ததாக கூறப்பட்ட சம்பவத்தில் பிரேதப் பரிசோதனை அறிக்கை திருப்பத்தை தந்துள்ளது.

சென்னை அபிராமபுரத்தைச் சேர்ந்தவர் தேவநாதன். இவருடைய எட்டு மாத குழந்தை சளியால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 13ஆம் தேதி பெற்றோர்களே கை வைத்தியம் பார்த்துள்ளனர். விக்ஸ் தைலத்தையும் கற்பூரத்தையும் சேர்த்து குழந்தையின் மூக்கில் தேய்த்துள்ளனர். தேய்த்த சிறிது நேரத்திலேயே மூச்சுத்திணறல் ஏற்பட்டு குழந்தையானது எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. இறுதியில் சிகிச்சைப் பலனின்றி குழந்தை இறந்து போனது.

குழந்தை உயிரிழப்பு தொடர்பாக அபிராமபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் குழந்தையின் பிரேதப் பரிசோதனை அறிக்கை தற்போது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் பிறக்கும் பொழுதே குழந்தைக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பு இருந்தது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தைலத்துடன் கற்பூரம் கலந்து தேய்த்ததன் காரணமாக உயிரிழப்பு ஏற்படவில்லை என பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்திருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.