சென்னை அருகே உள்ள குன்றத்தூர் 3ஆம் கட்டளை பகுதியைச் சேர்ந்தவர் விஜய். தனியார் வங்கியில் பணியாற்றி வந்த இவருக்கு அபிராமி என்ற மனைவியும், அஜய் மற்றும் கார்னிகா என்ற இரு குழந்தைகள் இருந்தனர். இத்தகைய சூழலில் தான் விஜய் குடும்பத்துடன் அவ்வப்போது குன்றத்தூரில் உள்ள பிரியாணி கடைக்குச் சென்று மனைவிக்கும், குழந்தைகளுக்கும் விரும்பியவற்றை வாங்கி கொடுத்து வந்துள்ளார். அப்போது அந்த பிரியாணி கடையில் வேலை பார்த்த மீனாட்சி சுந்தரம் என்பவருடன், அபிராமிக்குப் பழக்கம் ஏற்பட்டது. அதன் பின்னர் இந்த பழக்கம் திருமணத்தை மீறிய உறவாக மாறியது. 

Advertisment

இதனையடுத்து மீனாட்சி சுந்தரத்துடன் சேர்ந்து வாழ்வதற்காக, கடந்த 2018ஆம் ஆண்டு தனது குழந்தைகள் மற்றும் கணவனுக்குக் கொடுக்கும் நோக்கில் அபிராமி பாலில் அதிக அளவு தூக்க மாத்திரைகளைக் கலந்துகொடுத்து இரவு உறங்குவதற்கு முன்பு 2 குழந்தைகளுக்கும் கொடுத்துள்ளார். பாலில் விஷம் கலந்திருப்பது தெரியாமல் குழந்தைகள் இருவரும் குடித்தனர். அதே சமயம் அன்றிரவு கணவன் விஜய் வீட்டிற்கு வராததால் அவர் மட்டும் உயிர் தப்பினார். இதனையடுத்து மறுநாள் காலையில் வீட்டிற்கு வந்த விஜய், தனது 2 குழந்தைகளும் இறந்து கிடப்பதைப் பார்த்துக்  கதறி அழுதார்.

அச்சமயத்தில் விஜய்யின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்குக் கூடினர். இது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தவுடன், அபிராமியைத் தேடி வந்தனர். அப்போது மீனாட்சி சுந்தரத்தைக் கைது செய்த போலீசார், தலைமறைவாக இருந்த அபிராமியை நாகர்கோவிலில் வைத்து கைது செய்தனர். அதன் பின்னர் இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக இந்த வழக்கின் விசாரணை காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

அதன்படி இந்த வழக்கில் கடந்த ஜூலை மாதம் 24ஆம் தேதி (24.07.2025) தீர்ப்பு அளித்த நீதிமன்றம், திருமணத்தை மீறிய உறவுக்காகத் தனது 2 குழந்தைகளைக் கொன்ற வழக்கில், தாய் அபிராமி மற்றும் அவரது ஆண் நண்பர் மீனாட்சி சுந்தரம் ஆகிய இருவரும் குற்றவாளிகள் என உத்தரவிட்டது. மேலும் அபிராமிக்கும்,  மீனாட்சி சுந்தரத்திற்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி செம்மல் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் தனது இரு குழந்தைகளைக் கொன்ற வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்ககோரியும், தண்டனையை ரத்து செய்யக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அபிராமி மேல்முறையீடு செய்துள்ளார்.