ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அதிவேகத்தில் சென்ற பேருந்தில் ஓட்டுநர் திடீரென பிரேக் அடித்ததால் ஒரு வயது குழந்தை சாலையில் தவறி விழுந்த காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முத்துலிங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மதன் குமார். இவர், தனது சகோதரி மற்றும் அவரது இரு குழந்தைகளை அழைத்துக்கொண்டு மதுரையில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி தனியார் பேருந்து ஒன்றில் சென்றுகொண்டிருந்தார். பேருந்தின் முன் பக்கப் படிக்கு அருகாமையில் உள்ள இருக்கையில் மதன் குமாரும், அவரது சகோதரியும் ஆளுக்கு ஒரு குழந்தையை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தனர்.
இந்த நிலையில் மீனாட்சிபுரம் விளக்கு அருகே தனியார் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்துள்ளார். அப்போது பேருந்து சட்டென நின்றதால், மதன் குமாரும் அவரது கையில் இருந்த 2 வயது குழந்தையும் நிலைதடுமாறி பேருந்தினுள்ளே விழுந்தனர். அதே சமயம், சகோதரியின் கையில் இருந்த ஒரு வயது குழந்தை திடீரென பேருந்திற்கு வெளியே தவறி விழுந்தது. இதனைப் பார்த்து சாலையில் இருந்தவர்கள் குழந்தையை மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர். நல்வாழ்வாக இரு குழந்தைகளும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
அதே சமயம் கீழே விழுந்ததில் மதன் குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்துள்ளது. இந்தக் காட்சி பேருந்தில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியிருக்கிறது.