Child abducted in broad daylight after father was sprayed with chilli powder - shock in Vellore Photograph: (vellore)
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் பட்டப்பகலில் தந்தை கண்முன்னே நான்கு வயது குழந்தை மிளகாய்ப் பொடி தூவி காரில் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்தில் இரண்டு மணி நேரத்தில் குழந்தை மீட்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் உள்ள காமாட்சி அம்மன் பேட்டை பகுதியை சேர்ந்தவர் வேணு- ஜனனி தம்பதி. இவர்களுக்கு நான்கு வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. அருகே உள்ள பள்ளியில் ப்ரீகேஜி பயின்று வரும் நிலையில் இன்று மதியம் 12.30 மணியளவில் பள்ளி முடிந்து வீட்டுக்கு குழந்தையை இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்த தந்தை வேணு வீட்டின் வாசற்படியில் இறக்கிவிட்டார்.
அப்போது திடீரென அங்கு வந்து நின்ற கர்நாடகா பதிவு எண் கொண்ட காரில் இருந்து ஹெல்மெட் அணிந்த படி இறங்கி நபர்கள் திடீரென வேணு மீது மிளகாய் பொடியைத் தூவி விட்டு குழந்தையை காரில் போட்டு கடத்தி சென்றனர். வேணு சுதாரித்துக் கொண்டு பிடிக்க முயன்றும் அவர்கள் கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி வைரலானது. இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் நகர காவல்துறையினர் தனிப்படை அமைத்து குழந்தை கடத்திய நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் சென்னை- பெங்களூரு சாலையில் குழந்தை விடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. கடத்தலுக்கான காரணம் மற்றும் கடத்தியவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.