வேலூர் மாவட்டம், குடியாத்தம் காமாட்சியம்மன் பேட்டை பவளக்காரத் தெருவைச் சேர்ந்தவர் வேணு (33) - ஜனனி தம்பதியினர். வேணு ஐ.டி. துறையில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு நான்கு வயதில் யோகேஷ் என்ற ஒரே ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், தனியார் பள்ளியில் பிரி-கே.ஜி. படிக்கும் தனது குழந்தையை, தந்தை வேணு பள்ளி முடிந்து வீட்டுக்கு அழைத்து வந்தபோது, அங்கு வீட்டு வாசலில் காரில் காத்துக்கொண்டிருந்த நபர்கள், வேணு மீது மிளகாய் பொடி தூவி, குழந்தையைக் கடத்தி சென்றனர்.
இது குறித்து கிடைத்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்தும், 7 தனிப்படைகள் அமைத்தும், காவல்துறை விசாரணையைத் துரிதப்படுத்தியது. பின்னர், 2 மணி நேரம் கழித்து, குழந்தை மாதனூர் பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரம் இருப்பதாகத் தகவல் தெரிந்து, தனிப்படை காவல்துறையினரால் குழந்தை பாதுகாப்பாக மீட்கப்பட்டது. இந்நிலையில், காமாட்சியம்மன் பேட்டை அதே பவளக்காரத் தெருவைச் சேர்ந்த பாலாஜி என்பவரை காவல்துறை கைது செய்து விசாரணை மேற்கொண்டது. அப்போது, குழந்தையின் தந்தை வேணுவின் தங்கை, சில ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்துகொண்டுள்ளார். இதற்கு தற்போது கைதான பாலாஜி உதவியதாகக் கூறி, இரு வீட்டாருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதே சமயம், அரசு போக்குவரத்துக் கழகத்தில் தற்காலிக ஓட்டுநராகப் பணியாற்றி வரும் பாலாஜி, வாடகைக்கு கார் ஓட்டும் வேலையையும் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், இனோவா காரை ஓட்டுச் செல்லும்போது, சென்னை சுங்குவாரிய சத்திரம் அருகே விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 8 லட்சம் செலவு ஆனதாகவும், இதில் 4 லட்சத்தை இன்சூரன்ஸ் மூலம் பெறப்பட்ட நிலையில், மீதம் உள்ள 4 லட்சத்தை விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் பாலாஜிதான் தர வேண்டும் எனக் கார் உரிமையாளர் பாலாஜிக்கு அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், ஏற்கனவே இருந்த முன்விரோதம் மற்றும் வசதியான குடும்பம் என்பதால், 4 லட்சம் பணம் கேட்டு குழந்தையைக் கடத்தத் திட்டம் தீட்டி, தனது கூட்டாளி விக்ரம் என்பவரோடு சேர்ந்து குழந்தையைக் கடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், போலீஸ் போன்ற கர்நாடகப் பதிவு எண் கொண்ட காரில் குழந்தையைக் கடத்திக்கொண்டு மாதனூரைக் கடக்கும்போது, குழந்தை கடத்தல் செய்தி அனைத்து ஊடகங்களிலும் வருவதை அறிந்தும், காவல்துறை தீவிரம் காட்டுவதையும் அறிந்து, குழந்தையை மாதனூர் அருகே பெங்களூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரம் விட்டுச் சென்றுள்ளார். இதோடு இல்லாமல், ஒன்றும் தெரியாதது போல், குழந்தையின் தந்தை நண்பர்களுக்கு போன் பண்ணி, "குழந்தை மாதனூர் அருகே இருப்பதாக எனக்குத் தகவல் வந்ததாகவும்" கூறியுள்ளார். இதனை அடுத்தே, காவல்துறையினர் குழந்தையைப் பெற்றோரோடு சென்று மீட்டுள்ளனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரைப் பறிமுதல் செய்து, தலைமறைவாக உள்ள பாலாஜியின் கூட்டாளி விக்ரம் என்பவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் வேலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது