தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் (S.I.R.) எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகளுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இதுதொடர்பாக வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு அவசர உயர்மட்டக் குழுக் கூட்டத்தை நடத்தியது. அதில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளை தற்போது அறிக்கையாக வெளியிட்டுள்ளனர். அதில், 'SIR பணிகள் உரிய திட்டமிடலின்றி, பயிற்சிகள் அளிக்காமல், கூடுதல் பணியிடங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு ஏதும் வழங்காமல் அவசரகதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணியை மேற்கொள்ள நிர்பந்திக்கப்படுவதால், அனைத்து நிலை வருவாய்த் துறை அலுவலர்களுக்கும் கடுமையான பணி நெருக்கடிகள் மற்றும் மனஉளைச்சல் ஏற்பட்டுள்ளது.
இதனை களைந்திட வலியுறுத்தி, தமிழக தலைமைத் தேர்தல் அலுவலரிடம் ஏற்கெனவே முறையீடு செய்யப்பட்டது. இருப்பினும், பணி நெருக்கடிகள் அதிகரித்துதான் வருகின்றன. அதோடு, சில மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு கூட்டம் என்ற பெயரில் சார்நிலை அலுவலர்களை வதைத்து வருகின்றனர். அதனை அவர்கள் உடனடியாக கைவிட வலியுறுத்தி, இரண்டு கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதென்று வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு ஒருமனதாக முடிவு செய்துள்ளது.
அதன்படி, அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடமும் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று மாலை பெருந்திரள் முறையீடு செய்து மாவட்ட, வட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். இரண்டாம் கட்டமாக நாளை முதல் SIR தொடர்பான அனைத்து பணிகளையும் புறக்கணிப்பு செய்வது. படிவங்கள் பெறுதல், இணையத்தில் பதிவேற்றம் செய்தல், S.I.R. ஆய்வுக் கூட்டங்கள் என வாக்காளர் பட்டியல் தொடர்பான அனைத்து பணிகளையும் முற்றிலும் புறக்கணிக்க உள்ளோம். இந்த போராட்டத்தில் அனைத்து கிராம உதவியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், நில அளவர், ஆய்வாளர், அலுவலக உதவியாளர், வட்டாட்சியர் என 42,000 கிராம நிர்வாக மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள், 32,000 சத்துணவு ஊழியர்கள் உள்பட 74,000 அரசு ஊழியர்கள் ஈடுபட உள்ளனர்.
அதுமட்டுமின்றி வாக்குச்சாவடி நிலை அலுவலர், சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், நகராட்சி, மாநகராட்சி பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் கண்காணிப்பாளர் பணி மேற்கொள்ளும் அனைத்து துறை அலுவலர் சங்கங்களையும் ஒருங்கிணைந்து இந்தப் போராட்டத்தை நடத்த உள்ளோம்” என்று இந்த கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், 'SIR பணிக்கு உரிய கால அவகாசம் வழங்கிட வேண்டும். அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர், கண்காணிப்பாளர் உள்ளிட்ட அனைத்து நிலை அலுவலர்களுக்கும் உரிய பயிற்சி அளிக்கப்பட வேண்டும். தமிழக தலைமைத் தேர்தல் அலுவலர் மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் இதில் உடனடியாக தலையிட்டு, சுமூகமான சூழலை ஏற்படுத்த வேண்டும்' என்று இந்த கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த சூழலில், திடீர் திருப்பமாக SIR நடவடிக்கைக்கு எதிராக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என்று தலைமை செயலாளர் முருகானந்தம் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதுமட்டுமின்றி, நாளைய தினம் தற்செயல் காரணங்களுக்கும் விடுமுறை எடுக்கக்கூடாது என அறிவுறுத்தியுள்ளார்.
Follow Us