சென்னை கலைவாணர் அரங்கத்தில் இசை முரசு நாகூர் ஹனிபாவின் நூற்றாண்டு நினைவு நூல் வெளியீட்டு விழா நேற்று (24-12-25) நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, நூலை வெளியிட்டார்.

Advertisment

அதன் பிறகு அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “திமுகவின் வளர்ச்சிக்கு ஹனிபாவில் குரல் உதவியாக இருந்தது. கலைஞர், பேராசிரியர் அன்பழகன் தோளில் கைப்போட்டு கம்பீரமாக படம் படக்கும் எடுக்கும் துணிச்சலும், நட்பும் ஹனிபாவிடம் இருந்தது. அதே போல் ஹனிபாவுக்கு ஒலிபெருக்கியே தேவையில்லை என்று தந்தை பெரியார் சொன்னார். அப்படி ஒரு குரல்வளம் ஹனிபாவுக்கு இறுதிவரை அதே உறுதியோடு இருந்தது.அவர் தொடக்கம் முதல் இறுதிவரை திராவிட இயக்கத்தில் பங்கெடுத்து கலையை வளர்த்து இயக்கத்தையும் கொள்கையையும் வளர்த்தார்.

Advertisment

கலைஞருக்கும் ஹனிபாவுக்கும் வயதில் ஓராண்டு தான் இடைவெளி. இது தவிர அவர்கள் இரண்டு பேருக்கும் இடைவெளி என்பதே கிடையாது. அந்த அளவுக்கு அவர்கள் இருவரும் நகமும் சதையும் போல் நட்போடு பழகினார்கள். ஓடி வருகிறான் உதய சூரியன் என்று ஹனிபாவின் குரல் ஒலிக்காத கழகத்துடைய நிகழ்ச்சிகள் தொடங்கியதே இல்லை. கள்ளக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே, மக்கள் உள்ளம் குடிகொண்ட உண்மை தலைவர் வாழ்கவே என்று பட்டித்தொட்டி எல்லாம் கொண்டுபோய் சேர்த்தார். அவருடைய குரல் தான் கழகத்தோடு வளர்ச்சிக்கு ஹனிபாவின் குரல் துணை நின்றது. அழைக்கின்றார் அண்ணா அருமைமிகு திராவிட துயர் துடைக்க இன்றே என்று ஹனிபா பாடுவதை கேட்டால் உணர்ச்சி பொங்காமல் ஒரு தமிழராலும் இருக்க முடியாது. முறையாக சங்கீதம் கற்றுக்கொள்ளவில்லை என்றாலும் ஆயிரக்கணக்கான மேடையில் கோடிக்கணக்கான மக்களை குரலால் அவர் ஈர்த்தார். சிறைக்கு போகவும் தயங்காதவர் தான் அவருடைய குணம்.

இப்படி கழகத்துக்காக போராட்டங்களில் பங்கெடுத்து 10 முறைக்கு மேல் சிறைக்கு சென்றிருக்கிறார். 1957 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த ஹனிபாவை, கலைஞர் முதலமைச்சரான பிறகு எம்எல்சி ஆக்கி மேடையில் அமர வைத்து அழகுபார்த்தார் கலைமாமணி விருது கொடுத்தார், வக்ஃபு வாரிய தலைவராக நியமித்தார். ஒரு முறை ஹனிபா, கழக நிகழ்ச்சிகளுக்கு என்னிடம் தேதி கூட கேட்காமல் என்னுடைய இசைக்கச்சேரியை கலைஞர் வைத்துவிடுவார், ஏனென்றால் நான் கச்சேரிக்காரன் கிடையாது, கட்சிக்காரன் என்று சொன்னார். ஹனிபாவை போல் ஏராளமானோர் திமுகவை வலுப்படுத்த வேண்டும், உங்களுடைய திறமையை அறிவு கூர்மையை பயன்படுத்தி கழகத்தை சமூகத்தை வளர்த்தெடுக்க திமுக எப்போதும் தயாராக இருக்கும்” என்று கூறினார். 

Advertisment