Chief Minister's Mk stalin says cannot incite communal hatred among the people of Tamil Nadu
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று (26-12-25) நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் உரையாற்றினார்.
அதில் அவர் பேசியதாவது, “திராவிட மாடல் அரசு என்பது சாதனை திட்டங்களுடைய அரசு. சிலர் வாயிலேயே வடை சுடுகிறார்கள். அவர்களைப் போல் இந்த அரசு அல்ல, மக்களுக்கு நேரடியாக பயன் தரக்கூடிய திட்டங்களை நிறைவேற்றி மக்களை நேரடியா சந்திக்கிற திறன் கொண்ட அரசு. எல்லா மாவட்டங்களுக்கும் மக்களுடைய எதிர்பார்ப்புகளை விருப்பங்களை கோரிக்கைகளை நிறைவேற்றுகிற ஆட்சியாக நம்முடைய திராவிட மாடல் அரசு இன்றைக்கு செயல்பட்டு கொண்டிருக்கிறது. அதற்கு சாட்சியாக தான் இந்தியாவிலேயே தமிழ்நாடு 11.19 விழுக்காடு என்ற இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி அடைந்திருக்கிறது.
இந்தியாவிலேயே விளையாட்டு மேம்பாட்டில் சிறந்த மாநிலம் என்று ஸ்போர்ட்ஸ் ஸ்டார் என்ற விருதையும் தமிழ்நாடு தான் பெற்றிருக்கிறது. வேலைக்கு சென்றுகொண்டிருக்கக்கூடிய பெண்களுக்கு தோழி விடுதிகள், முதியோர்களை பாதுகாக்க அன்பு சோலை இல்லங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் இட ஒதுக்கீடு என்ற சாதனை திட்டத்தை நிறைவேற்றி இந்தியாவுக்கு முன்மாதிரியாக நம்முடைய திராவிட மாடல் அரசு திகழ்கிறது. இதை எதையுமே திராவிட மாடல் அரசுக்கு எதிரானவர்கள் கூட மறுத்து பேச முடியாது. எல்லாமே ஆதாரத்தோடு இருக்கிறது. எந்த துறை எடுத்துக்கொண்டாலும் சாதனைகள் தான். ஒன்றிய அரசு வெளியிடக்கூடிய தரவரிசை எல்லாவற்றியும் நம்பர் 1 ரேங்க் நாம் தான். உலக அளவில் நாம் காலரை தூக்கி நடக்கிற மாதிரி தமிழ்நாடு இன்றைக்கு முன்னேறி வருகிறது. இதில் 5 சதவீதமாவது அதிமுக ஆட்சியில் நடந்ததா? அவர்களால் சொல்ல முடியுமா? இது என்னுடைய சவால், தைரியம் இருந்தால் சொல்லுங்கள்.
10 ஆண்டு அதிமுக ஆட்சியில் பாழ்போன தமிழ்நாடு திராவிட மாடல் அரசுடைய நான்காண்டில் துள்ளி குதித்து இன்றைக்கு எழுந்திருக்கிறது. எப்போதும் ஏறுமுகம் தான். ஒன்றிய அரசின் வஞ்சகத்தை மீறி அவர்களுடைய உதவி இல்லாமல் இன்னும் சொல்லப்போனால் தமிழ்நாடு வளரவே கூடாது என்று அவர்கள் போடுகிற தடைகளை எல்லாம் தாண்டி இந்த இடத்தில் நாம் நிற்கிறோம். ஆனால், இது எதையும் பார்க்க மாட்டோம், செய்திகளை படிக்க மாட்டோம், உண்மையை பேச மாட்டொம், தமிழ்நாட்டு சாதனைகளை பற்றி வாய் திறக்க மாட்டோம் என்று சிலர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். இப்படியே கண்ணை மூடிக்கொண்டு இருங்கள், நாங்கள் அடித்து தூள் கிளப்பிட்டு போயிட்டே இருக்கோம். நான் சொன்ன தமிழ்நாட்டு சாதனைகள் வளர்ச்சி நிறைந்த ஒரு இந்தியா என்றால், பா.ஜ.க ஆளக்கூடிய மாநிலங்களில் வேறு ஒரு இந்தியா இருக்கிறது. வறுமை, மத வன்முறை, படுகொலைகள், கல்வியை கெடுக்கக்கூடிய முயற்சிகள், வேலைவாய்ப்பின்மை இது தான் பா.ஜ.கவின் இந்தியா.
கிறிஸ்துமஸ் அன்றைக்கு கூட மாற்றுத் திறனாளிகளை, குழந்தைகளை தாக்கக்கூடிய மோசமான சூழலை பா.ஜ.க அரசு உருவாக்கி வைத்திருக்கிறது. இந்த மாடலை தான் தமிழ்நாட்டிலும் கொண்டு வரவேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால், நம் மக்கள் ரொம்ப உஷாராக இருக்கிறார்கள். எம்மதமும் சம்மதம் என்ற தமிழ்நாட்டு மக்களுடைய இந்த ஒற்றுமை, மதவாத அரசியல் செய்து மக்களை பிளவுப்படுத்த நினைக்கிற பா.ஜ.கவின் கண்களை உறுத்திக்கொண்டு இருக்கிறது. அவர்கள் எத்தனை அடிமைகளை சேர்த்துக்கொண்டு அந்தர் பல்டி அடித்தாலும், ஒற்றுமையாக வாழக்கூடிய தமிழ்நாட்டு மக்களிடம் மதவெறியை தூண்ட முடியாது. இந்த ஸ்டாலின் இருக்கிற வரைக்கும் எங்கள் திராவிட மாடல் அரசு இருக்கிற வரைக்கும் உங்களுடைய மதவெறி ஆட்டத்திற்கு இங்கு இடம் கிடையாது. தமிழ்நாட்டு மக்கள் உங்களை ஓட்டுக்களாக் விரட்டி அடிப்பார்கள். நீங்கள் என்ன செய்தாலும் சரி, என்ன நாடகம் நடத்தினாலும் சரி, தமிழ்நாட்டில் உங்கள் வித்தை வேலைக்கு ஆகாது, பாட்ஷா பழிக்காது” என்று பேசினார்.
Follow Us