பொங்கல் பண்டிகையையொட்டி, ஆண்டுதோறும் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். இந்த போட்டியை காண பல பகுதிகளில் இருந்தும் மக்கள் ஆர்வத்துடன் வருகை தருவார்கள். அந்த வகையில் மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று முன்தினம் (15-01-26) விறுவிறுப்பாக நடைபெற்றது. வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளைகளை, வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர்.
தொடர்ந்து இரண்டாம் நாளான நேற்று (16-01-26) மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். காலையிலிருந்து விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டி மாலை நிறைவடைந்தது. பாலமேடு ஜல்லிக்கட்டில் 16 காளைகளை பிடித்து பொந்துபட்டியை சேர்ந்த அஜித் மற்றும் பொதும்பு பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் ஆகிய இரண்டு மாடுபிடி வீரர்கள் சம நிலையில் இருந்தனர். இருவரும் சமநிலையிலேயே இருந்ததால் குலுக்கல் முறையில் அஜித் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு முதல் பரிசான கார் பரிசு வழங்கப்பட்டது.
இந்நிலையில் மூன்றாம் நாளான காணும் பொங்கல் தினமான இன்று (17-01-26) அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்த இப்போட்டியில் சுமார் 1,000 காளைகளும், 5,00 மாடுபிடி வீரர்களும் பங்கேற்க உள்ளனர். மதுரை ஆட்சியர் பிரவீன் தலைமையில் உறுதிமொழி கூற அதை காளையர்கள் ஏற்று காளைகளை பிடிப்பதற்காக களம் கண்டுள்ளனர். முதலிடம் பிடிக்கும் மாடுபிடி வீரருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட இருக்கிறது. சிறப்பாக விளையாடும் காளையின் உரிமையாளருக்கு டிராக்டர் பரிசாக வழங்கப்பட இருக்கிறது. 2ஆம் இடம் பிடிக்கும் காளைகளுக்கு பைக்கும், காளையர்களுக்கு இ-ஸ்கூட்டரும் பரிசாக வழங்கப்பட இருக்கிறது.
உலகப் புகழ்பெற்ற இந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வருகை தந்தார். வாடிவாசலில் இருந்து வெளியே வரும் காளைகளின் திமிலை மாடுபிடி வீரர்கள் அடக்கி விளையாடி வரும் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசித்து மகிழ்ந்தார். அதனை தொடர்ந்தும் போட்டியின் போதே எழுந்து நின்று அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது, “மதுரை மண் என்பது வீரம் நிறைந்த மண்ணாகும். அப்படிப்பட்ட வீரம் நிறைந்த மண்ணில் உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்கும் போது நமக்கெல்லாம் வீரம் வருகிறது. அதனை அடக்குகிற காளையர்களை பார்க்கும் போது நமக்கு பெருமையாக இருக்கிறது.
ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க வந்திருக்கும் நான் ஏதாவது அறிவிப்புகளாஇ வெளியிட்டு போனதால் உங்களுக்கும் திருப்தி எனக்கும் திருப்தியாக இருக்கும். அதனால் இரண்டு அறிவிப்புகளை நான் மகிழ்ச்சியோடு அறிவிக்க விரும்புகிறேன். முதல் அறிவிப்பு, பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கு பெற்று அதிக காளைகளை அடக்கி சிறந்து விளங்கக்கூடிய வீரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கால்நடை பராமரிப்பு துறையில் உரிய அரசு பணியிடங்களுக்கு பணியமர்த்தி வழிவகை செய்யப்படும். இரண்டாவது அறிவிப்பு, உலகப் புகழ்பெற்ற தமிழ்நாட்டின் ஜல்லிக்கட்டு காளைகளுக்கான அலங்காநல்லூரில் சிறந்த உயர்தர சிகிச்சை மற்றும் பயிற்சி மையன் ரூ.2 கோடி செலவில் அமைக்கப்படும்” என்று தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/17/mkstalinalanga-2026-01-17-12-33-39.jpg)