Advertisment

“எடப்பாடி பழனிசாமியை டெல்லி ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை” - முதல்வர் விமர்சனம்

edapmks

Chief Minister's criticzes Delhi does not respect Edappadi Palaniswami at all

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் எம்.எல்.ஏ திட்ட நிதியில் ரூ.3.75 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்ட பல்வேறு பணிகளை தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நேற்று (22-12-25) தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, “100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாளாக மாற்றி அமைக்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. இது வரைக்கும் அவர்கள் நிறைவேற்றவில்லை. ஆனால் மத்திய அரசு 100 நாள் வேலை திட்டத்தை 125 நாட்களாக உயர்த்தி இருக்கிறது. அதை திமுகவுக்கு பாராட்ட மனம் இல்லை.

Advertisment

ஆனால், அந்த திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயர் தொடர வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்திருக்கிறோம். இந்த திட்டத்தால் மாநில அரசுக்கு நிதிசுமை அதிகமாகும் என்று சொல்கிறார்கள். அதை திமுகவினர் நாடாளுமன்றத்தில் தான் வாதாட வேண்டும். நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டியது அங்கு தான் விவாதிக்கப்பட வேண்டும். அதற்கு தானே திமுக கூட்டணிக்கு 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஆனால், நாடாளுமன்றத்தில் அவர்கள் முழுமையான அழுத்தம் கொடுக்கவில்லை. தமிழ்நாட்டு மக்களுடைய பிரச்சனையை தீர்க்க வேண்டுமென்றால், நாடாளுமன்றத்தில் தான் பேச வேண்டும். சும்மா வெற்று அறிக்கை விட்டுட்டு மழுப்பலான பதிலை கொடுத்து மக்களை ஏமாற்றக் கூடாது” என்று பேசினார்.

Advertisment

எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பதிலளித்துள்ளார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “விக்‌ஷித் பாரத் ஜி ராம் ஜி (விபி-ஜி ராம் ஜி) திட்டத்தால் 125 நாட்கள் வேலை கிடைக்கப் போகிறதா? அதைப் பாராட்ட எங்களுக்கு மனமில்லையா? மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் முடக்கப்பட்டுள்ளதை எதிர்த்துக் குரல் கொடுக்கத் துணிவின்றி, மீண்டும் மீண்டும் பச்சைப் பொய்யை அவிழ்த்துவிடுகிறார் பழனிசாமி. ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை என்பது சட்டமாக இருந்தபோதே அதை நிறைவேற்றாமல், சம்பளமும் வழங்காமல் அலைக்கழித்த பா.ஜ.க. அரசு இப்போது 1008 நிபந்தனைகளுடன் நிறைவேற்றும் புதிய திட்டத்தில் 125 நாட்கள் வேலை தரப்போகிறதா?

உண்மையைச் சொன்னால், ஒருநாள் வேலைக்குக் கூட இனி ஒன்றிய அரசு உத்தரவாதம் கொடுக்காமல் கடமையைக் கைகழுவியுள்ளது. மகாத்மா காந்தி பெயரை நீக்கக்கூடாது என்று உங்கள் ஓனருக்கு வலிக்காமல் அழுத்தம் கொடுத்தீர்களே, என்ன ஆனது? உங்களை ஒரு பொருட்டாகவே டெல்லி மதிக்கவில்லையே. மாநில அரசின் மீது 40% நிதிச்சுமையை ஏற்றும் எதேச்சாதிகாரமும் கைவிடப்படவில்லையே?. டெல்லியை எதிர்த்துக் கேள்வி கேட்கும் துணிவு உங்களுக்கு இருக்குமென்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் முட்டுகளையாவது தவிர்க்கலாம். வறுமையை ஒழித்து, மக்களின் மாண்பை உயர்த்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் பா.ஜ.க. அரசால் குழிதோண்டி புதைக்கப்படுவதற்கு வக்காலத்து வாங்கி, உங்களது அரசியல் வாழ்க்கையின் முடிவுரையை நீங்களே எழுதிக் கொள்கிறீர்கள் என்பதை மட்டும் நினைவூட்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

edappadi palanisami mk stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe