கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் விவசாய கூலி தொழிலாளர்களான தம்பதிகள் கமலக்கண்ணன் -வசந்தி. இவர்களுக்கு 24 வயதான லாவண்யா, 21 வயதான ரீனா, 17 வயதாகும் ரிஷிகா என்ற மூன்று பெண் பிள்ளைகளும் 13 வயதாகும் அபினேஷ் என்ற ஒரு ஆண் மகனும் உள்ளனர். கமலக்கண்ணனின் மனைவி வசந்தி ஏழு ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை குறைவால் உயிரிழந்தார். ஒற்றை பெற்றோராக இருந்து கமலக்கண்ணன் அதே கிராமத்தில் கூலி வேலைக்குச் சென்று தனது மூன்று பெண் பிள்ளைகளையும் ஒரு ஆண்மகனையும் வளர்த்து வந்தார். வேலைக்கு சென்றால் தான் இவர்களுக்கு சாப்பாடு என்ற நிலையில் குடும்பத்தை நடத்தி வந்தார் கமலக்கண்ணன்.

Advertisment

தாய் வசந்தி இறக்கும்போது கல்லூரியில் சேர்ந்த லாவண்யா படிக்க முடியாத சூழ்நிலை, கல்வி கட்டணம் கட்ட முடியாத நிலை ஏற்பட்டதால் தனது படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளார். அதனை தொடர்ந்து 10 ஆம் வகுப்பு படித்து வந்த ரீனாவும், 8ஆம் வகுப்பு படித்து வந்த ரிஷிகாவும் படிப்பை நிறுத்திவிட்டு குடும்பத்துக்காக வேலைக்கு செல்லத் துவங்கியுள்ளனர். சகோதரிகள் மூவரும் வறுமையால் படிக்க முடியாத நிலை ஏற்பட்டாலும், தங்களது தம்பியை நன்றாக படிக்க வைத்துவிட வேண்டும் என அவனை மட்டும் தொடர்ந்து பள்ளிக்கு அனுப்பிக் கொண்டுள்ளனர். தற்போது 8ஆம் வகுப்பு அபினேஷ் படித்துவருவதாக கூறப்படுகிறது.

Advertisment

இதற்கிடையே கமலக்கண்ணனுக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதற்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று வந்துள்ளார். கமலக்கண்ணனுக்கு சிறுநீரக கோளாறு பாதிப்பு ஏற்பட்டுள்ளதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். இதனால் அவர் கடந்த நான்கு மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். வருமானம் இல்லாமல் குடும்பம் தத்தளிக்க தொடங்கியது. இந்நிலையில் கமலக்கண்ணன் சிகிச்சை பலனின்றி நவம்பர் 14 ஆம் தேதி உயிரிழந்துள்ளார்.

சிறிய வயதில் தாயை இழந்தார்கள் தற்போது தந்தையும் இழந்து மூன்று பெண் பிள்ளைகளும் ஒரு ஆண் மகனும் என்ன செய்வது என்று தெரியாமல் நிற்கதியாய்  நின்றுள்ளனர். அப்பாவின் இறுதி சடங்கு  செய்யக்கூட பணம் இல்லாமல் அழுதபடி அநாதையாக நின்றுள்ளார்கள் அக்குழந்தைகள். இதனைப்பார்த்த அந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் நாங்கள் இருக்கிறோம் எங்களை உங்கள்  குடும்பத்தில் ஒருவராக நினைத்து கொள்ளுங்கள், உங்கள் அப்பாவின் இறுதிச் சடங்கை நாங்கள் நடத்துகிறோம் எனச்சொல்லி ஆண்கள் முதல் பெண்கள் வரை ஒன்று கூடி வீடு வீடாக சென்று பண வசூல் செய்து அந்தப் பணத்தை கொண்டு தாரை தப்பட்டை மாலை மரியாதையோடு இறுதிச் சடங்கை கிராம மக்களே முன்னெடுத்து நடத்தி முடித்துள்ளனர். மீதிருந்த பணத்தை தாய் – தந்தையை இழந்து நிற்கும் பிள்ளைகளிடம் குடும்ப செலவுக்கு வைத்துக்கொள்ளுங்கள் என 70 ஆயிரம் ரூபாய் கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. தாயையும் இழந்து தந்தையும் இழந்து ஒரு குடும்பத்தை தத்தெடுத்த கிராம மக்களுக்கு சுற்று வட்டார கிராம மக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

தற்போது தாய் தந்தையை இழந்து ஆதரவில்லாமல் அநாதையாக நிற்கும் நான்கு பிள்ளைகளின் நலனையும், எதிர்காலத்தையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்தில் கொண்டு உதவி செய்யவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். அந்த பிள்ளைகளும் கண்ணீர் மல்க தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கை செய்திகள் வழியாகவும், அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் வழியாக முதலமைச்சர் ஸ்டாலின் கவனத்துக்கு இச்சம்பவம் சென்றதும் உடடியாக நடவடிக்கையில் இறங்கினார்.

அந்த பிள்ளைகளின் வீட்டுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினரை உடனே அனுப்பி வைத்த முதலமைச்சர், கைபேசி வழியாக அப்பிள்ளைகளிடம் உரையாடினார். அதில் அவர், ‘நீங்கள் தைரியமாக இருக்கவேண்டும், நிறுத்தப்பட்ட கல்வியை தொடர நடவடிக்கை எடுக்கச்சொல்லி கலெக்டரிடம் சொல்லியிருக்கேன். கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் உங்களுக்கு வீடு கட்டித்தரச் சொல்லி உத்தரவிட்டுயிருக்கேன். உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை ஆட்சியரிடம் கூறுங்கள், நான் அதை ஃபாலே அப் செய்து செய்து தரச் சொல்கிறேன். நீங்கள் கவலைப்படாமல், தைரியமாக இருக்கனும்’ என அக்கறையாக விசாரித்து ஆறுதல் கூறினார். இனி இவர்கள் அரசின் குழந்தைகள் எனக் கூறியுள்ளார்.