“மூத்த அண்ணனுக்குப் பிறந்தநாள்...” - முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

104

‘மாணவன் நேசன்’ என்ற கையெழுத்துப் பத்திரிகையைத் தொடங்கிய திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞர், 1942-ஆம் ஆண்டு ‘முரசொலி’ இதழைத் தொடங்கினார். இந்த நிலையில், முரசொலி தொடங்கப்பட்டு இன்றோடு 84 ஆண்டுகள் ஆன நிலையில், திமுக தலைவர்கள் அதுகுறித்த நினைவுகளையும் கருத்துகளையும் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில், முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “மூத்த அண்ணனுக்குப் பிறந்தநாள்! நெருப்பாறுகள் பலவற்றை நீந்தி, கழகத்தின் மனச்சாட்சியாகவும், தமிழ்நாட்டின் உரிமைக் குரலாகவும் ஒலிக்கும் முரசொலிக்கு அகவை 84. அரசியலில் தெளிவு, வரலாற்றில் ஆழம், இன உணர்வில் தீரம், கலை-இலக்கியத்தில் செழுமை எனச் செயல்படும் தலைவர் கலைஞரின் மூத்த பிள்ளையை வாழ்த்துகிறேன். இன்றைய செய்திகளைப் பதிவு செய்து, கருத்தாழமிக்க கட்டுரைகளால் சிந்தனையூட்டி, நாளைய வரலாற்றை எழுத உணர்வளிக்கும் முரசொலியின் பயணம் என்றென்றும் தொடரட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதையடுத்து, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “கலைஞர் அவர்களின் மூத்த பிள்ளையும், கழகத்தின் கொள்கை முரசமுமான நம் முரசொலிக்கு 84-ஆம் ஆண்டு பிறந்தநாள் இன்று. கலைஞரின் ‘உடன்பிறப்பே’ தொடங்கி, தலைவர் ஸ்டாலின் அவர்களின் ‘உங்களின் ஒருவன்’ வரை, கடைக்கோடித் தொண்டர்களுக்கும் கழகத்துக்கும் முரசொலி என்றும் அசைக்க முடியாத பாலமாக உள்ளது. நம் இளைஞர் அணி சார்பில், முரசொலியில் தொடங்கப்பட்ட முரசொலி பாசறை, திராவிட இயக்கக் கொள்கைகளின் வீச்சை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்த்து வருவதில் பெருமை கொள்கிறோம்.

காலத்துக்கு ஏற்ப தன்னைப் புதுப்பித்துக்கொண்டு, டிஜிட்டல் தளங்களிலும் முரசொலி முன்வரிசையில் நிற்கிறது. கலைஞர் அவர்கள் பெயரிலான மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தில், இளம் தலைமுறையைத் தயாரிக்கும் பயிற்சிக் களமாகவும் இன்று பரிணாமம் பெற்றுள்ளது. அரசியல் பத்திரிகை என்ற எல்லையைத் தாண்டி, தமிழினத்தின் உணர்ச்சிப் பிழம்பாகத் திகழும் நம் முரசொலியை வாழ்த்தி மகிழ்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

dmk mk stalin murasoli
இதையும் படியுங்கள்
Subscribe