தமிழக அரசில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றி வந்த பீலா வெங்கடேசன் (56) நேற்று (24-09-25) உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார்.
கொரோனா தொற்று நோய் காலத்தில் தமிழக அரசின் சுகாதாரத்துறைச் செயலாளராகச் சிறப்பாக பணியாற்றி மக்கள் மனதில் கவனத்தை ஈர்த்த பீலா வெங்கடேசன், தமிழக அரசின் எரிசக்தி துறையில் முதன்மைச் செயலாளராகப் பணியாற்றி வந்தார். இந்த சூழ்நிலையில், அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 2 மாதங்களாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்த அவர் சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்தார். பீலா வெங்கடேசன் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் எனப் பலரும் இரங்கல் மற்றும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை-கொட்டிவாக்கத்தில் வைக்கப்பட்ட பீலா வெங்கடேசன் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (25-09-25) நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், கூடுதல் தலைமைச் செயலாளர் அமுதா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். பீலா வெங்கடேசனின் உடல் இன்று பிற்பகல் பெசண்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.