Chief Minister M.K.Stalin says This is not the rule of a party, but the rule of a race
தமிழக மக்களை நேரில் சந்தித்து அவர்களது கனவுகளை அறியும் வகையில், ‘உங்க கனவை சொல்லுங்க’ என்ற திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (09-01-26) திருவள்ளூர் பொன்னேரியில் தொடங்கி வைத்தார். 50,000 தன்னார்வலர்கள் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 1.91 கோடி குடும்பங்களை நேரில் சந்தித்து அவர்கள் பயன்பெற்ற திட்டங்கள் மற்றும் அவர்களை கனவுகளை கண்டறிந்து பணிகள் மேற்கொள்வதற்காக இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தை இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்த பின் உரையாற்றியதாவது, “உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கூடிய இந்த அரசு, மக்களான உங்களிடம் கனவை கேட்டு நிறைவேற்றும் நாளாக இந்த நாள் அமைந்திருக்கிறது. உங்கள் கனவை சொல்லுங்க, அதை நிறைவேற்றி கொடுப்பதற்காக நான் இங்கு வந்திருக்கிறேன். திருச்சியில் மாநாடு நடந்த போது என்னுடைய கனவுகள் என்று கூறி 7 வாக்குறுதிகளை கொடுத்தேன். இதையெல்லாம் இப்போது நான் நிறைவேற்றி இருக்கிறோம். சொன்னால் சொன்னதை செய்பவன் தான் நான். இன்றைக்கு தமிழ்நாடு தான் 11.19% வளர்ச்சியோடு இந்தியாவில் சிறந்த மாநிலமாக இருக்கிறது. இந்தியாவுக்குள், முதலீடு செய்ய வேண்டும் என்று எந்த நிறுவனங்களாவது நினைத்தால் அவர்களுடைய முதல் தேர்வு தமிழ்நாடு தான் இருக்கிறது. விவசாயமும் லாபம் தரக்கூடிய தொழிலாக மாறியுள்ளது. இந்தியாவிலேயே கல்விக்காக தமிழ்நாடு செய்கிற அளவுக்கு எந்த மாநிலமும் செய்யவில்லை.
நாம் ஆட்சிக்கு வந்தபோது கொரோனா என்ற கொடுமையான பாதிப்பு உச்சத்தில் இருந்தது. நல்லது எதற்குமே ஒத்துழைக்காத, தமிழ்நாட்டுக்கும், தமிழ் மக்களுக்கும் எதிராக சிந்தித்து செயல்படக்கூடிய பா.ஜ.க தொடர்ந்து ஒன்றிய அரசாக இருக்கிறது. ஆட்சி பொறுப்பில் இருந்து தமிழ்நாட்டு உரிமைகளை எல்லாம் ஆமாம் சாமி போட்டு அடகு வைத்த அதிமுக ஒரு பக்கம். இப்போது எதிர்க்கட்சி ஆனதற்கு பிறகு உண்மைக்கு புறம்பான போலி செய்திகளை எல்லாம் உருவாக்கி அவதூறு செய்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டுக்கும் ஒன்றிய அரசுக்கும் பாலமாக இருக்க வேண்டிய ஆளுநர், என்ன செய்கிறார் என்பது உங்களுக்கே தெரியும். உங்களுடைய எண்ணங்களை பிரதிபலித்து சட்டமன்றத்தில் நான் நிறைவேற்றக்கூடிய சட்டங்களுக்கு முட்டைக்கட்டை போடுவதை தன்னுடைய முதல் வேலையாக ஆளுநர் செயல்படுகிறார். இத்தனையும் மீறி மக்களான நீங்கள் எங்களுடன் இருப்பதால் தான் 2021இல் கொடுத்த 505 வாக்குறிதிகளில் 404 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம். இந்த சாதனையை செய்தது திராவிட மாடல் அரசு. ஒன்றிய அரசு நிதியை மறுத்தும் புறக்கணித்தும் அவர்கள் வெளியிடக்கூடிய புள்ளிவிவரங்களில் தவிர்க்க முடியாத அளவுக்கு முதலிடத்தில் இருந்து சாதனை படைத்தது நமது திராவிட மாடல் அரசு. தமிழ்நாட்டின் கஜானாவை சுரண்டிய கடந்த கால அதிமுக ஆட்சியாளர்கள் மக்களால் விரட்டி அடிக்கப்பட்ட பின்னர் என்னவெல்லாமோ சொன்னார்கள்.
தேர்தல் வாக்குறுதிகள் சொல்லாத திட்டங்களையும் தமிழ்நாட்டுக்கு தேவை என்பதால் அதை நிறைவேற்றினோம். நாளைக்கு நம்ம பிள்ளைகள், வளர்ந்து மாணவர்களாக படித்து பெரிய பெரிய வேலைகளில் உட்காரும் போது இந்த திட்டங்களை செயல்படுத்தியதற்காக நமது திராவிட மாடல் அரசை பாராட்டுவார்கள். அதிமுக ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டுக்கு வந்த பல தொழில் நிறுவனங்கள் பின்னங்கால் பிடலில் அடிபட்டு தலைதெறிக்க ஓடினார்கள். ஆனால் நமது திராவிட மாடல் ஆட்சியில் 10 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை நாம் எடுத்திருக்கிறோம். ரெக்கார்ட் செய்தால் ரெக்கார்டை பிரேக் செய்ய முடியாத அளவுக்கு ரெக்கார்ட் செய்ய வேண்டும். இது தான் என் பாலிசி. ஒரு கட்சியின் ஆட்சியாக இல்லாமல் ஒரு இனத்தின் ஆட்சியாக இந்த திராவிட மாடல் ஆட்சியை நாம் நடத்திட்டு இருக்கோம். ஆட்சி என்பது முதலமைச்சரான என்னுடைய கனவுகளை மட்டுமல்ல, வாக்களித்த வாக்களிக்காத உங்கள் எல்லாருடைய கனவுகளை நிறைவேற்றுகிற கருவி. அப்படி உங்கள் கனவுகளை நிறைவேறினால், தமிழ்நாடு முன்னேறும், வளர்ச்சி அடையும்” என்று கூறினார்.
Follow Us