Chief minister m.k.stalin advice to Dmk executives add members more in oraniyil tamilnadu
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு 2026இல் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ள தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயுத்தமாகி வருகின்றனர். அதன்படி, தி.மு.க தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் அதே கூட்டணியில் இணைந்து சட்டமன்றத் தேர்தலை சந்திக்கவிருக்கிறது.
சட்டமன்றத் தேர்தலில், ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தீவிர முனைப்பு காட்டி வருகிறார். இதனால், பல்வேறு கட்டமாக திமுக நிர்வாகிகளைச் சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக, ‘உடன்பிறப்பே வா’ என்ற பெயரில் தொகுதிவாரியாக நிர்வாகிகளை சந்திக்கும் நிகழ்வை முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (28.06.2025) மாலை 6 மணிக்கு காணொளி காட்சி வாயிலாக திமுக மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக சார்பு அணிச் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ‘ஓரணியில் தமிழ்நாடு - உறுப்பினர் சேர்க்கை’ என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு என்பது திமுகவுக்கான உறுப்பினர் சேர்க்கைக்காக மட்டுமல்ல. தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி. ஊதினால் அணைய நாம் என்ன தீக்குச்சியா? நாம் உதயசூரியன்.
நம்மை அணைக்க நினைத்தால் நம் மண், மொழி, மானத்தை காப்பாற்ற ஒன்றாக நின்று எதிர்ப்போம். இது தான் தமிழர்களின் தனி குணம். ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் நோக்கமும் இதுதான். வாட்ஸ் அப், எக்ஸ் தளம், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற லோகோவை டிபி (DP) ஆக கட்டாயமாக வைக்க வேண்டும்” என்று பேசியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.