சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர் நல்லகண்ணு (101) வயது மூப்பு காரணமாகவும், மூச்சுத் திணறல் காரணமாகவும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று (25-02-26) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
அவரது உடல் சென்னை தியாகராயர் நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு வைக்கப்பட்டுள்ள தோழர் நல்லகண்ணுவின் உடலுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்திற்கு நேரில் சென்று தோழர் நல்லகண்ணுவின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “பொது வாழ்க்கையில் ஈடுபடக்கூடியவர்கள், அரசியல்வாதிகளாக இருக்கக்கூடியவர்கள் இவர்களுக்கெல்லாம் பாடமாக விளங்கியவர் நம்முடைய நல்லகண்ணு. அவருடைய மறைவு, அவரது குடும்பத்தார், கட்சிக்காரர்களுக்கு மட்டுமல்ல பொதுவாழ்வில் ஈடுபடக்கூடிய அனைவருக்குமே இது வருத்தப்படக்கூடிய செய்தி. அவரை இழந்து வாழக்கூடிய அவரது குடும்பத்தாருக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் திமுக சார்பில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.
முன்னதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, கனிமொழி எம்.பி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் தோழர் நல்லகண்ணுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/25/mknalla-2026-02-25-19-39-31.jpg)