Advertisment

“நிதிஷ்குமாருக்கு நடந்ததுதான் எடப்பாடி பழனிசாமிக்கும் நடக்கும்”- முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

mkstamad

Chief Minister M.K. Stalin's speech in Madurai and he criticized Edappadi Palaniswami

தமிழக சட்டமன்றத் தேர்தல் விரைவில் வரவுள்ள சூழ்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் முன்னாள் முதல்வரும், அதிமுக மூத்த தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். மேலும் அதிமுக முன்னாள் எம்.பி.யும், ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ஓ.பி. ரவிந்தரநாத், ஓ.பன்னீர்செல்வத்தின் அவரது ஆதரவு எம்.எல்.ஏ. ஐயப்பனும் திமுகவில் இணைத்துக் கொண்டனர். அதனை தொடர்ந்து, போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார்.

Advertisment

இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி மதுரையில் இன்று (07-03-26) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது, “சில காலத்துக்கு முன்பு வரை நம்முடைய அன்புக்குரிய சகோதரர் ஓபிஎஸ் இந்த மேடையில் இருப்பாரென்று அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார். ஆனால் லேட்டாக இருந்தாலும், எம்ஜிஆர் இருந்த தாய் கழகமான திராவிட முன்னேற்ற கழகத்திற்கு தான் திரும்பி இருக்கிறார். எம்ஜிஆருக்கு நீங்கள் மட்டுமல்ல நானும் ரசிகன் தான். கழகம் எம்ஜிஆரை வளர்த்தது, அவரும் கழகத்தை வளர்த்தார். முத்தமிழறிஞர் கலைஞரை தலைவராக ஏற்றுக் கொண்டார். அப்படிப்பட்ட தாய் கழகத்துக்கு, தாயின் மடிக்கு நீங்கள் எல்லாம் திரும்பி இருக்கிறீர்கள். எம்ஜிஆர் உருவாக்கின அதிமுக யாருக்கோ அடிமை சேவகம் செய்ய போனதால் உரிமைக்குரல் எழுப்பி தாய் கழகத்திற்கு திரும்பி இருக்கிறீர்கள். தடம் மாறாமல் திராவிட பாதையில் பயணத்தை தொடரும் உங்களையெல்லாம் நான் என்று வரவேற்கிறேன். பேரறிஞர் அண்ணாவின் பெயரை தாங்கியுள்ள இயக்கம், அவரையும் அவரது கொள்கைகளை மறந்து துரோகத்தின் உடைய முழு உருவம் ஆனதால் பேரறிஞர் அண்ணா தொடங்கி இயக்கத்திற்கு நீங்கள் எல்லாம் வந்திருக்கிறீர்கள். சுயமரியாதையின் கோட்டையான அண்ணா அறிவாலயத்திற்கு வந்திருக்கிறீர்கள். அண்ணாவின் தம்பியாக, கலைஞரின் உடன்பிறப்பாக உங்களை எல்லாம் மீண்டும் மீண்டும் வரவேற்கிறேன். 

Advertisment

2008ல் கலைஞர் முதலமைச்சராக  இருந்தபோது  ஓபிஎஸ் சட்டமன்ற  எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருந்தார்.  அப்போது நவம்பர் 11 ஆம் தேதி இலங்கை தமிழர் பிரச்சனை குறித்து சட்டமன்றத்தில் நடந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீதான விவாதத்தில ஓபிஎஸ் பேசினார். மறுநாள் காலையில் முரசொலியில், பச்சை தமிழர் பன்னீர்செல்வம் குறிப்பிட்டு செய்தியை வெளியிட்டார்கள். ஓபிஎஸ்ஸும் முரசொலி செய்தியை குறிப்பிட்டு அவையில் பேசினார். உடனே கலைஞர், பச்சை தமிழர் பன்னீர்செல்வம் அதற்காக கவலைப்படக்கூடாது. பச்சை தமிழர், தந்தை பெரியார் காமராசருக்கு பட்டமே கொடுத்திருக்கிறார். அதைத்தான் முரசொலி அடித்துக் கொடுத்திருக்கிறது என்று கலைஞர் சொன்னார். இப்படி தலைவர் கலைஞரால் பாராட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் திராவிட  முன்னேற்ற கழகத்தில் இணைந்ததை  நினைத்து நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நம்ம ஓபிஎஸ்ஸின் ஸ்பெஷாலிட்டி என்னவென்றால், எப்போதுமே சிரித்த முகமாகத்தான் இருப்பார். அதுதான் அவருடைய பண்பு. பொதுவாக ஒருத்தரை ஒருத்தர் முறைச்சுகிட்டா தான் பிரச்சனை ஆகும். ஆனா நம் ஓபிஎஸ்ஸுக்கு அவருடைய சிரிப்பே ஒரு காலத்தில் அவருக்கு பிரச்சனை ஆனது. ஒருமுறை சட்டமன்றத்தில் அவர் என்னை பார்த்து சிரித்துவிட்டார். உடனே ஸ்டாலினை பார்த்து ஓபிஸ்  சிரித்துவிட்டார் என்று ஏதோ ரெண்டு நாட்டுக்குள் போர் வந்த  மாதிரி பிரச்சனை ஆக்கிவிட்டார்கள்.

அரசியலில் ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம், ஆனால் சட்டமன்றத்திலும் பொதுவெளியிலும் ஒருத்தரை ஒருத்தர் சந்திக்கும் போது நலம் விசாரிக்கிறது அரசியல் மாண்பு, அதுதான் பண்பாடு.  அப்படித்தான் தான் அப்போது முதலமைச்சராக இருந்த சகோதரர் ஓபிஎஸ்ஸை பார்த்து மரியாதைக்காக வணக்கம் வைத்தேன், அவரும் சிரித்தார். உடனே இதை குற்றச்சாட்டாக ஆக்கிவிட்டார்கள். ஆனால் யார் என்ன சொன்னாலும் தன்னுடைய பண்பை மாற்றிக்கொள்ளாமல் அமைதியோடவும் அன்போடவும் அதே சிரித்த முகத்தோடு இன்றைக்கும் இருக்கிறார். அமைதியும் புன்னகை மட்டுமல்ல, ஓபிஎஸ் என்று சொன்னால் ஞாபகத்துக்கு வரக்கூடிய ஒரே சொல் விசுவாசம். மறைந்த ஜெயலலிதா, தான் அமர்ந்த முதலமைச்சர் இருக்கையில் நம்முடைய ஓபிஎஸ்ஸை இரண்டு முறை அமர வைத்தார். தன்னிடம் ஒப்படைத்த அந்த அரசாட்சியை எந்த துரோகமும் இல்லாமல் திருப்பி ஒப்படைத்த நேர்மைக்கு சொந்தக்காரர் தான் ஓபிஎஸ். அதனால்தான் ஜெயலலிதாவே, சகோதரர் ஓபிஎஸ்ஸை பற்றி புகழ்ந்து பேசியிருக்கிறார். விசுவாசத்திற்கு ஒரு ஓபிஎஸ் என்றால், துரோகத்திற்கு அடையாளமாக இருக்கிறவர் தான் பழனிச்சாமி. கூவத்தூரில்  சசிகலா காலில் ஊர்ந்து தவழ்ந்து போய்  முதலமைச்சர் ஆகிவிட்டு சசிகலாவை நோக்கியே, நீ எனக்கு பதவி வாங்கி தந்தாயா? என்று ஒருமையில் கேட்டவர்தான் பழனிச்சாமி. அவர் இன்னும் என்னவெல்லாம் சொல்லி இருப்பார் என்று நம்முடைய சகோதரர் ஓபிஎஸ்ஸுக்கு நன்றாக தெரியும். பழனிச்சாமியை பொறுத்தவரைக்கும் தன்னை காப்பாற்றிக் கொள்ள எது வேண்டுமானாலும் செய்வார். அவருடைய உச்சக்கட்ட துரோகம் என்ன தெரியுமா? தன்னை காப்பாற்றிக்கொள்ள எம்ஜிஆர் உருவாக்கிய, ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்டிருக்கக்கூடிய இயக்கத்தையே இன்றைக்கு அடமானம் வைத்திருக்கிறார்.

பழனிச்சாமி என்ன நினைக்கிறார் என்றால், பாஜக தனக்கு நல்லது செய்யும் என்று நினைக்கிறார். உண்மையிலேயே பாஜக யாருக்கும் நல்லது செய்யாது. நாளைக்கு மகளிர் தினத்தை அடிப்படையாக வைத்து இன்றைக்கு சிலிண்டர் விலையை 60 ரூபாய் உயர்த்தி மகளிருக்கு பரிசு கொடுத்திருக்கிறார்கள். கடந்த 2024ஆம் ஆண்டு  100 ரூபாய் குறைத்தது தேர்தலுக்கான பம்மாத்து என்று நிரூபித்திருக்கிறார் பிரதமர் மோடி. 2024ல் கோடிக்கணக்கான குடும்பங்களுடைய நிதி சுமையை குறைக்கிறோம் என்று 100 ரூபாய் குறைக்கிறோம் என்று சொன்னவர், இன்றைக்கு எதற்கு சுமையை ஏற்றி இருக்கிறார். மக்களுக்காக பார்த்து பார்த்து திட்டங்களை தீட்டி நன்மைகளை செய்து மக்களுக்கு கொடுத்தால் அதுதான் திமுக. மக்களைப் பற்றி கவலைப்படாமல் மக்களிடம் இருந்து எல்லாத்தையும் பறித்தால் அது பாஜக. இப்படி யாருக்குமே நன்மை செய்யாத பாஜக, அதிமுகவுக்கு நன்மை செய்யப்போகிறது? அதிமுகவுடைய இரத்தத்தைதான் உரிஞ்சி எடுக்கும், அதுதான் நடக்கப்போகிறது. இதில் பழனிச்சாமிக்கு ஏதாவது டவுட் இருந்தால் அவர் கொஞ்சம் தலையை தூக்கி பீகாரில் நடக்கிறதை பார்க்க வேண்டும். பத்து முறை முதலமைச்சராக இருந்த நிதிஷ் குமாரை, பாஜக பந்தாடியது. பீகாரில் நிதிஷ் குமார் அவருடைய ஐக்கிய ஜனதா தலைமையில் நடக்கிற என்டிஏ ஆட்சியில் ஐக்கிய ஜனதா தளத்தினுடைய தலைவர் நிதிஷ்குமார் முதலமைச்சர் பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டு இன்றைக்கு மாநிலங்களவை எம்பியாக போகிறார். கடந்த நவம்பர் மாதம்தான் சட்டமன்ற தேர்தல் முடிந்து நிதிஷ்குமார் சிஎம் ஆனார். அதுக்குள் அவர் பதவி விலகுகிறார் என்ற செய்தி அதிர்ச்சியாக இருக்கிறது. நிதிஷ்குமாருக்கு பதிலாக  பாஜக சார்பில் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்க இருக்கிறதாக தகவல்கள் ஆதாரத்தோடு வருகிறது. இன்றைக்கு நிதிஷ் குமாருக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய கதிதான், நாளைக்கு பழனிச்சாமிக்கும். அதற்கு அவர் முதலில் வெற்றி பெற வேண்டும் என்று நீங்கள் நினைப்பது எனக்கு கேட்கிறது. எனக்கு கிடைத்த தகவல் படி  அதிமுகவில் பழனிசாமிக்கு பதிலாக ஆல்ரெடி வேறு ஒருவரை பொதுச் செயலாளராக பாஜக தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறது. பழனிச்சாமியை இந்த தேர்தல் வரைக்கும் தான் பாஜக வைத்திருக்கும். பிறகு அவரையே தூக்கி விடுவாங்க, அதுதான்  நடக்கப்போகிறது. ஒருவேளை பாஜக கூட கூட்டணி வைக்க மறுத்திருந்தால் இப்பவே மாற்றி இருப்பார்கள். அந்த அளவுக்கு அதிமுக, பாஜகவுடைய கண்ட்ரோலுக்கு போய்விட்டது.

அதிமுக தொண்டருடைய வாக்குகளை வாங்கி தன்னை வளர்த்தெடுக்க பாஜக போட்டிருக்கக்கூடிய திட்டத்திற்கு துணை போயிருக்கிறார் பழனிச்சாமி. என்டிஏ சார்பில் இப்போது நடைபெறக்கூடிய தேர்தலுக்கான கூட்டங்களை பார்க்கிறீர்கள். அதிமுக கூட்டணி என்று சொல்ல மாட்டார்கள். என்டிஏ கூட்டணி தான் சொல்லுவார்கள் ஏன் பிரதமர் மோடியே அதிமுக பெயரையே சொல்ல மாட்டார். ரெண்டு விரல் காட்ட படத்தை கூட மாத்திடுவார்கள். மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு நடந்த மாதிரி பீகாரில் நிதிஷ் குமாருக்கு நடக்கிற மாதிரிதான் தமிழ்நாட்டில் பழனிச்சாமிக்கு நடக்கப்போகிறது. இதையெல்லாம் முன்கூட்டியே சரியாக கணித்த காரணத்தால்தான் எம்ஜிஆர் பாதையில் உண்மையான திராவிட இயக்கத்திற்கு திரும்ப வேண்டும் என்று முடிவெடுத்து அதிமுகவுடைய உண்மை தொண்டர்கள் எல்லாம் தாய் கழகமான திராவிட முன்னேற்ற கழகத்திற்கு வந்திருக்கிறார்கள்” என்று கூறினார். 

edappadi k palaniswami O Panneerselvam ops mk stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe