தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் வரும் 15ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை மக்கள் கொண்டாடத் தயாராகி வருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில், இன்று (10-01-26) தனது தொகுதியான கொளத்தூர் சட்டமன்ற அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தொகுதி மக்களுடன் பொங்கல் விழாவை கொண்டாடினார். முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், அமைச்சர் சேகர்பாபு மற்றும் மேயர் பிரியா உள்ளிட்ட பலர் இந்த விழாவில் பங்கேற்றனர்.

Advertisment

அதன் பின்னர், இந்த விழாவில் பங்கேற்ற மாணவிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசுகளை வழங்கினார். அதனை தொடர்ந்து முதல்வர் பேசியதாவது, “தமிழர் திருநாளாக இருக்கக்கூடிய பொங்கல் திருநாளை கொண்டாடும் இந்நாளில், நம் தொகுதி மக்களுடன் பொங்கல் கொண்டாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. நம்முடைய தொகுதி என்றாலே மகிழ்ச்சி, எழுச்சி, ஆரவாரம் உள்ளத்தில் புலங்காகிதம் இருக்கும். என்னதான் நான் முதலமைச்சராக இருந்து பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது ஏற்படும் மகிழ்சியைவிட கொளத்தூரில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது அதிகமாக மகிழ்ச்சி கிடைக்கிறது.

நம்முடைய திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற பிறகு என்னென்ன சாதனைகள் எல்லாம் செய்திருக்கிறது என்று உங்களுக்கு நான் எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஆனால், நீங்கள் மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். ஏற்கெனவே தேர்தல் களத்தில் ஆற்ற வேண்டிய பணிகள் 50 சதவீதத்தை முடித்துவிட்டீர்கள். இன்னும் 50 சதவீதம் தான் இருக்கிறது. இன்றைக்கு பல்வேறு கட்சிகளைச் சார்ந்தவர்கள், ஏன் பா.ஜ.கவில் இருப்பவர்கள் கூட திமுககாரன் மாதிரி வேலை செய்ய முடியாது என்று புகழ்ந்து பேசுகிறார்கள். 200 தொகுதிக்கு குறையாமல் வெற்றி பெறுவோம் என்று ஏற்கெனவே நான் சொல்லிருந்தேன். ஆனால், இன்றைக்கு நாம் ஆற்றிருக்கும் பணிகளை பார்க்கும் போது 200க்கு மேல் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்று பேசினார். 

Advertisment