Chief Minister M.K. Stalin's speech at the inauguration of Vaiko's Equality Walk
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ‘சமத்துவ நடைப்பயணம்’ என்ற தலைப்பில் இன்று (01-01-26) முதல் வரும் 12ஆம் தேதி வரை நடைப்பயணம் மேற்கொள்கிறார். திருச்சியில் இருந்து மதுரை வரை மேற்கொள்ளும் இந்த நடைப்பயணம், திருச்சி தென்னூர் அண்ணா நகர் உழவர் சந்தை அருகில் உள்ள மாநகராட்சி திடலில் இன்று காலை தொடங்கியது. இந்த நடைபயணத்தை தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த துவக்க விழாவை காங்கிரஸ் புறக்கணித்திருந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், அமைச்சர் கே.என்.நேரு, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன், மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் அருணாச்சலம் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, “2026ஆம் ஆண்டு எனது முதல் நிகழ்ச்சியாக வைகோவின் நடைப்பயண நிகழ்ச்சி அமைந்திருக்கிறது. தன்னுடைய பொது வாழ்க்கையில் தமிழ்நாட்டுடைய குறுக்கும் நெடுக்குமாக தன்னுடைய காலடி படாத இடமே இல்லை என்று சொல்கிற அளவுக்கு மக்கள் பிரச்சனைகளுக்காக நடைப்பயணம் செய்தவர் அண்ணன் வைகோ. அவருடைய நெஞ்சுரத்தையும், ஸ்டாமினாவையும் பார்க்கும் போது அவருக்கு 82 வயதா அல்லது 28 வயதா என்று நமக்கெல்லாம் ஆச்சரியப்பட வைக்க தோன்றும். ஒரு இளைஞருக்குரிய வேகத்தையும், உத்வேகத்தையும் அவரிடம் இன்றைக்கு நாம் பார்க்கிறோம். இளைஞர்களுக்கு நல்வழி காட்டிட, இளைஞர்களுடன் ஒன்று சேர்ந்து இந்த சமத்துவ நடைப்பயணத்தை தொடங்குகிற வைகோ வாழ்த்துகள் பாராட்டுக்கள்.
திராவிட இயக்கத்தை பொறுத்தவரைக்கும், காலந்தோறும் இளைய தலைமுறையுடைய நலனுக்காகவும் எதிர்காலத்தினுடைய நன்மைக்காகவும், வளர்ச்சிக்காகவும் செயலாற்றிக் கொண்டிருக்கக்கூடிய இயக்கமாக நம்முடைய இயக்கம் இருந்து கொண்டிருக்கிறது. தள்ளாத 95 வயதிலே, தளராம தொண்டு செஞ்சவர் தந்தை பெரியார். தமிழ்நாட்டு இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் கல்வி உள்ளிட்ட எல்லா உரிமைகளும் பெற்றிட கிடைக்க வேண்டும், அதுக்கு சாதி மதம் உள்ளிட்ட தடைகள் அகற்றப்பட வேண்டும், தகர்க்கப்பட வேண்டும் என தன்னுடைய இறுதி மூச்சு வரைக்கும் பாடுபட்டவர் தந்தை பெரியார். அவர் வழிவந்த கலைஞர், 80 ஆண்டு கால பொது வாழ்க்கைக்கு சொந்தமானவர். சக்கர நாற்காலியில் உட்கார்ந்த வண்ணம் ஓவியில்லாமல் உழைத்தார்.
16 வயதில், மாணவநேசன் பத்திரிகையை ஆரம்பித்து இளைஞர்களுடைய உறைவாடைய அவர் 89 வயதிலையும் பேஸ்புக் ட்விட்டரில் இளைஞருடைய அரசியல் செய்தார். அப்படிப்பட்ட திராவிட இயக்க யூனிவர்சிட்டியில் படித்தவர் தான் வைகோ. ஏன் இந்த ஸ்டாலினும் அதே யூனிவர்சிட்டி மாணவன் தான். வைகோ, கலைஞருக்கு பக்கத்தில் இருந்து அரசியல் கற்றுக்கொண்டவர். கலைஞர் மதுரையில் இருந்து திருச்செந்தூருக்கு நீதி கேட்டு நடைப்பயணத்தை நடத்திய நேரத்தில் அவருக்கு பாதுகாவலராக கூடவே நடந்தவர் தான் அண்ணன் வைகோ. இன்றைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கக்கூடிய இளைஞர் படையோடு சமத்துவ நடைப்பயணத்தை நடத்துகிறார். இந்த நடைபயணத்தில் பங்கேற்கக்கூடிய பலரையும் நேரில் அவரே தேர்வு செய்திருக்கிறார். அவர்களுடைய உடல் திறன் என்ன, மன உறுதி எப்படி இருக்கிறது எல்லாவற்றையும் உறுதி செய்துவிட்டு தான் அந்த இளைஞர் படையை அவர் தேர்ந்தெடுத்திருக்கிறார்” என்று பேசினார்.
Follow Us