தி.மு.க. இளைஞரணியின் தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு இன்று (07-02-26) விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சி கலைஞர் திடலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் சுமார் ஒரு லட்சம் இளைஞரணி நிர்வாகிகள் பங்கேற்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டை, திமுக இளைஞரணிச் செயலாளரும் தமிழக துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் நடத்தினார். இந்த மாநாட்டில் கனிமொழி எம்.பி, திருச்சி சிவா, அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisment

இந்த மாநாட்டில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது, “நம்முடைய அடிப்படை கொள்கைகளான சமூக நீதி, சுயமரியாதை, மாநில சுயாட்சி மொழி உணர்வு, இன உணர்வு தான். மொழி உறவையும் இன உணர்வை எடுத்துகொண்டால், நம்முடைய தாய்மொழியான தமிழுக்கு பல்வேறு காலகட்டங்களில் ஆபத்து வந்தபோது கடுமையாக போராடி தடுத்திருக்கிறோம்.  ஆனாலும் மும்மொழி கொள்கை என்ற பெயரில் இந்தி மொழியை திணிக்கக்கூடிய ஆபத்து இன்றைக்கும் நம் தலைக்கு மேல தொங்கக்கூடிய கத்தி இருக்கிறது. மொழியை அழித்தால் நம்முடைய அடையாளத்தை அழித்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். அதை முறியடிக்க நீங்கள் வேண்டும். ஒரு காலத்தில் நமக்கெல்லாம் கல்வி எதற்கு என்று ஒதுக்கி வைத்திருந்தார்கள், வேலைகளில் நமக்கு இடம் இருக்காது, கிடைக்காது. அந்த அநீதியை இடஒதுக்கீட்டால் உடைத்து சமூக நீதியை நிலைநிறுத்தினோம். ஆனால், நீட் போன்ற தேர்வுகளை கொண்டு வந்து பழைய நிலைமையை உண்டாக்குகிறார்கள்.

Advertisment

இதை தடுக்க உண்மையான வலிமை உள்ள ஒரே இயக்கம் நம்முடைய இயக்கம் தான். அதற்கு தான் நீங்க வேண்டும். அடுத்து நம் உயிர் கொள்கை மாநில சுயாட்சி. மாநிலங்களுடைய கூட்டமைப்புக்குதான் இந்தியா. இந்தியா என்பது ஒரு கூட்டமைப்பு. கூட்டாட்சிக்கு எவ்வளவு மதிப்பு இருக்கிறது என்று நாம் தொடர்ந்து சொல்லிகொண்டிருந்தாலும், மாநிலங்களுக்கு அதிகாரங்களே இல்லாத நிலைமைதான் இருந்தது. மாநில முதலமைச்சர்களால் தேசிய கொடியை ஏற்ற முடியாத நிலைமைதான் இருந்தது. இன்னும் நிறைய பிரச்சனை இருந்தது. இதையெல்லாம் போராடி இந்த நிலைமைகளை மாற்றி ஓரளவுக்காவது அதிகாரங்கள் மாநில அரசுகளுக்கு கிடைக்கிற மாதிரி செய்தோம். அதனால் தான் மாநில கட்சிகளால் ஆட்சியை பிடிக்க முடியும் என்று இந்தியாவில் முதன் முதலில் ஆட்சி அமைத்து காட்டியது இந்த திமுக தான். தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவில் இருக்கும் அத்தனை மாநிலங்களுக்கும் நாம் உரிமைகளை பெற்று தந்திருக்கிறோம். ஆனால் இப்போது மீண்டும் மாநில அதிகாரங்களை ஒன்றியத்தில் கொண்டு போய் குவித்துகொண்டிருக்கிறார்கள். மாநிலங்களை மாநில கட்சிகளே இருக்க கூடாது என்று பாஜக செயல்படுகிறது. ஆனால் அவர்களால் தொட முடியாத ஒரே மாநிலம் தமிழ்நாடுதான்.

சுயமரியாதை, இடுப்பில் கட்டிருந்த துண்டு தோலுக்கு வந்த வரலாறு அது. தன்மானம் தான் உயிர்மூச்சு தமிழன் தலை நிமிர்ந்த வரலாறு. ஒவ்வொரு தனி மனிதருடைய சுயமரியாதை காப்பாற்றி தமிழ்நாடு தலைநிமிர்ந்து நின்றால் இப்போது அடிமைகளும் துரோகிகளும் எதிரிகளும் கூட சேர்ந்து ஒட்டுமொத்த மாநிலத்துடைய சுயமரியாதையை அடகு வைக்க முயற்சி செய்கிறார்கள். சுயமரியாதை விட்டு கொடுக்கும் கூட்டத்தை விழ்த்த நீங்கள் எல்லோரும் தேவை. உங்களை போன்ற உடன்பிறப்புக்கள் எண்ணிக்கை அதிகமானால் ஒரு நூற்றாண்டு மட்டுமல்ல இன்னும் பல நூற்றாண்டு காலத்திற்கு திராவிட முன்னேற்ற கழகத்தை எந்த கொம்பனாலும் தொட்டு கூட பார்க்க முடியாது. நாம் தான் 7வது முறையாகவும் ஆட்சி அமைக்க போகிறோம். நமது எதிரிகள் உட்பட இதில் யாருக்கும் சந்தேகம் கிடையாது. ஆனால் நாம் தான் வெற்றி போகிறோம் என்று மெத்தனமாக இருந்துவிடக்கூடாது. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் ஒரு அரசு ஐந்து ஆண்டுகளில் நாம் செய்திருக்கிற மாதிரி சாதனைகளை செய்த வரலாறு உண்டா? அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முன்னேறி இருக்கிறது.ஒன்றிய அரசு மாநிலங்களை ஒப்பிட்டு எந்த துறையில் விருதுகள் கொடுத்தாலும் அதை தமிழ்நாடு தான் வாங்குகிறது. இப்படி எல்லாவற்றிலும் நம்பர் ஒன்னாக இருந்தாலும் பட்ஜெட் என்று வந்துவிட்டால் நமக்கு ஒன்னும் கிடையாது. இந்த ஆண்டு தேர்தலை மனதில் வைத்தாவது செய்வார்கள் என்று எதிர்பார்த்தோம். கடைசியில் அதுவும் வழக்கம் போல் ஈரதுண்டுகள் தான். 

Advertisment

எங்களுக்கு நியாயமாக சேர வேண்டிய கல்வி நிதியை கொடுங்கள், மெட்ரோ நிதியை கொடுங்கள், பேரிடர் நிவாரண நிதியை கொடுங்கள், ஜல் ஜீவன் திட்டத்துக்காக நிதியை கொடுங்கள், புதிய ரயில் திட்டங்களை கொடுங்கள், ஓசூர் விமான நிலையத்துக்கு அனுமதி கொடுங்கள், வரி வருவாய் 50% கொடுங்கள், நீட்டில் இருந்து விலக்கு கொடுங்கள், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டி கொடுங்கள், தொகுதி மறுசீரமைப்பு மூலம் தமிழ்நாட்டினுடைய தொகுதி அளவு குறைக்கப்படாது என்று நாடாளுமன்றத்தில் வாக்கு கொடுங்கள், கீழடி அறிக்கை கொடுங்கள் இதெல்லாம் தான் நாங்கள் கேட்கிறோம். ஆனால் அவர்கள் நமக்கு கொடுத்தது வெறும் ஜீரோ, அப்போது நாமும் அவர்களுக்கு தேர்தலில் அதே தான் திருப்பி கொடுக்க வேண்டும். பா.ஜ.க மட்டுமல்லாமல் ஒட்டுமொத்தமாக என்.டி.ஏ கூட்டணிக்கு கொடுக்க வேண்டும். 2024 நாடாளுமன்றத் தேர்தலை போல சட்டமன்றத் தேர்தலிலும் ஜீரோ ஆக வேண்டும். தமிழ்நாட்டுக்கு ஜீரோ சொன்ன ஒன்றிய அரசை எதிர்த்து குரல் கொடுக்காமல் பா.ஜ.கவினுடைய கிளைச் செயலாளராக மாறி இருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி” என்று பேசினார்.