Chief Minister M.K. Stalin's response to the motion of thanks to the Governor's address
நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 20ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடரின் முதல் நாளில் கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசு தயாரித்த ஆளுநர் உரையை வாசிக்காமலேயே சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். அதனை தொடர்ந்து ஆளுநர் வாசிக்கவிருந்த தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை அவருக்கு பதிலாக சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.
கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான 21ஆம் தேதி மறைந்த எம்.எல்.ஏக்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது. அதனை கடந்த 2 நாட்களாக ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் மீது விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில், அதிமுக எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் துறை சார்ந்து பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதிலுரை கொடுத்தனர்.
இந்த நிலையில், கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று (24-01-26) ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலுரை அளித்தார். அப்போது அவர், “தமிழ்நாடு அனைத்து வகையிலும், அனைத்து துறையிலும் மிக மோசமான பின்னடைவை சந்தித்து மோசமான நிலையை அடைந்து இருந்தது. மேலும் நமக்கு மேல் இருக்கக்கூடிய ஒன்றிய அரசு ஒத்துழைக்காத ஒரு ஓரவஞ்சனை அரசாக இருந்தது. இந்த இரண்டு நெருக்கடிகளையும் எதிர்கொள்ளும் என்பது தான் எனது கவலைக்கு முக்கியமான காரணமாக அமைந்தது. இடியாப்ப சிக்கல் எனும் சிக்கலில் தான் நாங்கள் ஆட்சிக்கு வந்தோம். ஆனால் இந்த ஐந்த ஆண்டுகளில் நான் மிக மிகழ்ச்சியாக இருக்கிறேன். என்னுடைய மகிழ்ச்சிக்கு காரணம் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். என்னுடைய இலக்கில் நான் வென்றுவிட்டேன். திராவிட மாடல் அரசின் சாதனைகளால் தமிழ்நாடு தலை நிமிர்ந்துவிட்டது. மக்கள் மனநிறைவு அடையக்கூடிய வகையில் ஆட்சியை வழங்கிக் கொண்டிருக்கிறோம்.
இன்றைக்கு தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட அதிகம் வளர்ந்திருக்கிறது. இந்தியாவின் மற்ற மாநிலங்கள் எல்லாம், தமிழ்நாட்டை அண்ணாந்து பார்க்கிறார்கள். அதற்கு காரணம் நம்முடைய திட்டங்கள். அடுத்து இன்னும் பெருமையோடு உறுதியாக சொல்கிறேன் திராவிட மாடல் 2.0 ஆட்சியில் எங்கள் சாதனைகளை நாங்களே மிஞ்சும் அளவுக்கு இருக்கும். ஆட்சி செய்திருக்கூடிய ஐந்து ஆண்டுகள், வரப்போகிற ஒளிமயமான எதிர்காலத்தை உணர்த்துகிறது. ஆறாவது முறையாக ஆட்சி அமைந்த போது விடியல் ஆட்சியாக அமையும் என்று சொன்னோம். அந்த விடியலை ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறோம். கோடிக்கணக்கான மக்கள் மனங்களிலும் முகங்களிலும் மகிழ்ச்சியையும் மனநிறைவையும் நான் பார்க்கிறேன்.
நான் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு இன்றையோடு 1724 நாட்கள் ஆகிறது. இந்த நாட்களில் 8685 நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்றிருக்கிறேன். 15,117 அரசு கோப்புகளில் கையெழுத்து போட்டிருக்கிறேன். சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு 173 முறை பயணத்தை நான் மேற்கொண்டிருக்கிறேன். அதிலும், 71 மாவட்ட அரசு நலத்திட்ட விழாக்களில் பங்கேற்று 44 லட்சத்து 44,721 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி இருக்கிறேன். கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ன செய்தான் என்றால் ஒவ்வொரு நாளும் மக்களுக்காக வாழ்ந்தான், மக்களுக்காக திட்டங்களை தீட்டினான், மொத்தமாக தமிழ்நாட்டை வளர்த்தெடுத்தான். இதெல்லாம் வெறும் புகழ்ச்சி அல்ல, எல்லாமே உண்மை. இதை எதிர்க்கட்சிகளால் தாங்கிக் கொள்ள முடியாது என்பதை அவர்கள் வராத நிலையில் நாம் புரிந்துகொள்ள முடிகிறது. தமிழ்நாட்டினுடைய நலனுக்காக செயல்பட வேண்டிய ஆளுநர், தமிழ்நாட்டுக்கு எதிராக மக்களுக்கு பாடுபடக்கூடிய நமக்கு எதிராக தொடர்ந்து செயல்படுவது தான் நமக்கு உள்ளபடியே வேதனையா இருக்கிறது. ஆளுநர், தான் படிக்க வேண்டிய உரையை படிக்காமல் போவது வேடிக்கையாக இருக்கிறது.
அவர் வகிக்கிற பதவியை அவரே அவமானப்படுத்துகிறார். இந்திய அரசியலமைப்பு சட்டத்தையே ஒரு பொறுப்புள்ள பதவியில் இருந்துக் கொண்டு கேவலப்படுத்துகிற செயலாக இருக்கிறது. அதிலும் கடந்த மூன்று வருடமாக நம்முடைய ஆளுநர், ஒரே காரணத்தை திரும்ப திரும்ப சொல்லி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு தயாரித்து கொடுத்த உரையை படிக்காமல் வெளியேறுவதை மக்களாட்சிக்கு விடப்பட்ட சவாலாகவே இந்த பேரவை கருத வேண்டியுள்ளது. கோடிக்கணக்கான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இது. கோடிக்கணக்கான மக்களுடைய விருப்பங்களுக்கு ஏற்ற வகையில் செயல்படக்கூடிய அரசு இது. ஆளுநர் உரை தொடங்கும்போது தமிழ்தாய் வாழ்த்து பாடுவதும், முடியும்போது நாட்டுப்பண் பாடுவதும் தான் தமிழ்நாடு சட்டமன்றத்தினுடைய மரபு.
முதலிலேயே நாட்டுப்பண் பாடவில்லை என்பதையே திரும்ப திரும்ப குற்றச்சாட்டாக சொல்லி வருகிறார். இந்த நாட்டின் மீதும், நாட்டுப்பண் மீதும் அளவற்ற பெருமதிப்பை மரியாதை கொண்டுள்ளவர்கள் நாங்கள். தேசிய உரிமைப்பாட்டிலையும், நாட்டு பற்றிலும் யாருக்கு குறைந்தவர்கள் அல்ல நாங்கள் என்பதை இந்த பேரவையில் ஆளுநருக்கு அழுத்தம் திருத்தமாக நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். யாரும் எங்களுக்கு தேசபக்தி குறித்து பாடம் எடுக்கும் நிலையில் நாங்களும் இல்லை, தேசபக்தி பாடம் எடுக்கக்கூடிய அளவுக்கு இந்த தேசத்துக்காக அவர்கள் போராடியவர்களும் இல்லை. ஜனநாயக தேசத்தின் அரசியலமைப்பு மாண்பை, எதேச்சதிகார தன்மையோடு மாற்ற நினைப்பவர்கள் தான் இன்றைய காலகட்டத்தில் தேச விரோதிகள். அவர்கள் யார் என்று நாட்டுமக்களுக்கு நன்றாக தெரியும்.” என்று கூறினார்.
Follow Us