தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராங்கத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பரப்புரை கூட்டத் தொடக்க விழா இன்று (23-01-26) நடைபெறவுள்ளது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்து பங்கேற்க உள்ளார்.

Advertisment

பிரதமர் மோடி பங்கேற்கும் இவ்விழாவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பங்குபெறும் கட்சிகள் பங்குபெறவுள்ளன. அந்த வகையில் அதிமுக, அமமுக, இந்திய ஜனநாயகக் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழ் மாநில காங்கிரஸ், அன்புமணி தரப்பு பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் பங்குபெறவுள்ளன. பிற்பகல் 2 மணியளவில் தமிழகம் வரும் பிரதமர் மோடி, இங்கு வருவதற்கு முன்பே எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertisment

அதில் அவர், “தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இருக்கிறது. மதுராந்தகத்தில் இன்று பிற்பகலில் நடைபெறும் பேரணியில் நான் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுடன் கலந்துகொள்ளவிருக்கிறேன். ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் சாதனையும் பிராந்திய பெருவிருப்பங்கள் மீதான அதன் அர்ப்பணிப்பும் மாநில மக்கள் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், பிரதமர் மோடியின் பதிவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “தேசிய ஜனநாயகக் கூட்டணியின் துரோகங்களை தமிழ்நாடு எண்ணிப் பார்க்கிறது. தேர்தல் சீசன் வந்தால் மட்டும், தமிழ்நாடு பக்கம் அடிக்கடி வரும் பிரதமர் மோடி அவர்களே... தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய 3,458 கோடி ரூபாய் SamagraShiksha கல்வி நிதி எப்போது வரும்? தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) இல் தமிழ்நாட்டின் தொகுதிகள் குறைக்கப்படாது என்ற உறுதிமொழி உங்கள் வாயில் இருந்து எப்போது வரும்? பா.ஜ.க.வின் முகவர்போல் செயல்படும் ஆளுநரின் அராஜகம் எப்போது முடிவுக்கு வரும்? தமிழ்ப்பாசத்தில் தமிழர்களை மிஞ்சியதாய்க் காட்டிக்கொள்ளும் உங்கள் அரசிடம் இருந்து தமிழுக்குரிய நிதி ஒதுக்கீடு எப்போது வரும்?

Advertisment

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில், மாநிலங்கள் மீது நிதிச் சுமையை ஏற்றி ஊரக மக்களின் வாழ்வாதாரத்தை ஒழித்துக் கட்டும் விபி ஜிராம்ஜி (VBGRAMG) கைவிடப்படும் என வாக்குறுதி எப்போது வரும்? பத்தாண்டுகளாக ‘இன்ச் இன்ச்’சாக ஒன்றிய பா.ஜ.க. அரசு இழைத்து வரும் மதுரை எய்ம்ஸ் எனும் எட்டாவது உலக அதிசயம் எப்போது எங்கள் கண்முன் வரும்? இயற்கைப் பேரிடர்களுக்காக நாங்கள் கேட்ட நிவாரணத் தொகை எப்போதுதான் வரும்? ஓசூர் விமான நிலையம், கோவை & மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு எப்போது ஒப்புதல் வரும்? கீழடி அறிக்கை எப்போது வெளியே வரும்? ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் ஒருமனதான கோரிக்கையான நீட் விலக்கு எப்போது அமலுக்கு வரும்? தொடர்ந்து துரோகங்களை மட்டுமே செய்யும் பா.ஜ.க. கூட்டணிக்குத் தமிழ்நாடு எப்போதுமே தோல்வியைத்தான் தரும்” எனத் தெரிவித்துள்ளார்.