2026 ஆங்கிலப் புத்தாண்டு நாளை (01-01-26) உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில், திமுக தொண்டர்களுக்கு திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது, “திராவிடப் பொங்கல் விழாவுடன் மலரட்டும் புத்தாண்டு 2026. நம் உயிருடன் கலந்திருக்கும் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து மடல். உலக மக்கள் அனைவருமே ஒவ்வொரு புத்தாண்டுப் பிறப்பையும் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கின்றனர். தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கை மிகுந்த புத்தாண்டாக 2026-ஆம் ஆண்டு நிச்சயமாக அமையும் என்ற உறுதியினை வழங்கி, கழக உடன்பிறப்புகளுக்கும் பொதுமக்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.
இந்தப் புத்தாண்டு நம் கழக உடன்பிறப்புகளுக்கு வெற்றிக்கான புத்தாண்டு! திராவிட மாடல் அரசின் சாதனைகள் தொடர்கின்ற புத்தாண்டு! தமிழ்நாட்டு மக்களின் நலன் காக்கும் திட்டங்கள் தொடர்ந்திடும் புத்தாண்டு. 2021-ஆம் ஆண்டு மே 2-ஆம் நாள் தமிழ்நாட்டு மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம் 6-ஆவது முறையாக ஆட்சி அமைப்பதற்கான வெற்றியைத் தந்த நேரத்தில், கொளத்தூர் தொகுதியின் வெற்றிச் சான்றிதழை நம் உயிர்நிகர் கலைஞர் ஓய்வுகொள்ளும் நினைவிடத்தில் காணிக்கையாக்கியபின், செய்தியாளர்களிடம் உங்களில் ஒருவனான நான் சொன்ன சொற்களை, நானும் மறக்கவில்லை, நீங்களும் மறந்திடவில்லை, தமிழ்நாட்டு மக்களும் மறந்திருக்க மாட்டார்கள். “எங்களுக்கு வாக்களித்தவர்கள் சரியாகத்தான் வாக்களித்திருக்கிறோம் என்று மகிழ்ச்சி அடையக்கூடிய வகையிலும், வாக்களிக்காதவர்கள் இவர்களுக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோமே என்று நினைக்கக்கூடிய அளவிலும் தி.மு.க.வின் ஆட்சி இருக்கும்”, இதுதான் உங்களில் ஒருவனான நான் அன்று அளித்த வாக்குறுதி. இதைத்தான், ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்கிற திராவிட மாடல் ஆட்சியின் இலக்கணமாகக் கொண்டு நமது அரசு செயல்பட்டு வருகிறது.
உங்களில் ஒருவனான நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற நாள் முதல் மக்கள் நலனுக்கான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறேன். இந்திய மாநிலங்களில் கல்வி, சுகாதாரம் உள்பட பல இலக்குகளில் தமிழ்நாடு முதன்மையாகத் திகழ்கிறது என்பதை நாம் சொல்லவில்லை, ஒன்றிய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையும், ஒன்றிய அரசின் துறைகள் சார்ந்த அறிக்கைகளும் தெரிவிக்கின்றன. இந்திய அளவில் புகழ்பெற்ற பத்திரிகைகள், ஆய்வு நிறுவனங்கள், உலகளாவிய பொருளாதார இதழ்கள் தமிழ்நாட்டின் அனைவருக்குமான ஒருங்கிணைந்த, அனைத்துப் பகுதிகளுக்கும் பரவலாக்கப்பட்ட வளர்ச்சி குறித்து, தரவுகளுடனான செய்திகளை வெளியிட்டுள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக, திராவிட மாடல் அரசின் திட்டங்களால் பயன்பெற்று வரும் தமிழ்நாட்டு மக்கள் இந்தச் சாதனைத் திட்டங்கள் பற்றி மனம் மகிழ்ந்து சொல்கிறார்கள்.
இதற்கு முன்பு வரை, அரசு நிகழ்ச்சிகள் என்றால் முதலமைச்சரும் அமைச்சர்களும் அதிகாரிகளும் மேடையில் இருப்பார்கள். திட்டங்களால் பயன் பெறப்போகும் மக்கள் எதிரில் அமர்ந்திருப்பார்கள். இப்போது அது முற்றிலும் மாறியிருக்கிறது. கல்வியில் சிறந்த தமிழ்நாடு, வெல்லும் தமிழ்ப் பெண்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் முதலமைச்சரும் அமைச்சர்களும் அதிகாரிகளும் பார்வையாளர்களாக உட்கார்ந்திருந்தோம். அரசின் திட்டங்களால் பயன்பெற்றவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றத்தை, மேடையில் நின்று உள்ளத்து உணர்வுடன் விளக்கினார்கள். இந்த மாற்றம் தான் திராவிட மாடல் ஆட்சியின் மகத்தான சாதனை. உங்களில் ஒருவனான நான், 2026-ஆம் ஆண்டிலும் இந்தச் சாதனைகள் தொடர வேண்டும் என்றும், மேலும் ஐந்தாண்டுகள் புதிய புதிய சாதனைத் திட்டங்கள் நிறைவேற வேண்டும் என்றும் உறுதி ஏற்றிருக்கிறேன். கழகத்தின் அன்பு உடன்பிறப்புகளான உங்கள் மீதுள்ள நம்பிக்கைதான் என்னுடைய உறுதிக்குக் காரணம். தமிழ்நாட்டின் தொடர்ச்சியான முன்னேற்றப் பாதையில் நாம் செல்லவேண்டிய தூரம் இன்னும் அதிகமாக உள்ளது. நிறைவேற்றிய திட்டங்கள் உரிய பலனைத் தருகிற அதேநேரத்தில், நிறைவேற்ற வேண்டிய கடமைகள் நிறைய உள்ளன.
பத்தாண்டுகாலம் தமிழ்நாட்டை படுகுழியில் தள்ளிய முந்தைய அ.தி.மு.க ஆட்சியின் சீரழிவிலிருந்து, தமிழ்நாட்டை மீட்பதற்கே இந்த ஐந்தாண்டுகள் பெரும்பாடு பட்டிருக்கிறோம், தமிழ்நாட்டை மீட்டிருக்கிறோம். அதனால்தான் நம் மீது தமிழ்நாட்டின் அனைத்துத்தரப்பு மக்களுக்கும் நம்பிக்கை உள்ளது. உரிமையுடன் தங்கள் கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள். தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள். நமக்குள்ள பொறுப்பை உங்களில் ஒருவனான நான் ஒருபோதும் தட்டிக் கழிப்பதில்லை. கொடுத்த வாக்குறுதியிலிருந்தும் நிறைவேற்றவேண்டிய கடமையிலிருந்தும் ஒருபோதும் பின்வாங்க மாட்டேன். எந்தக் கோரிக்கையாக இருந்தாலும் அதனைக் கவனத்தில் கொண்டு பரிசீலித்து நிறைவேற்றுவதற்கான காலம் நிச்சயம் கனியும். ஆளுங்கட்சி நிம்மதியாகத் தனது பணிகளைக் கவனிப்பதும், எதிர்க்கட்சி களத்தில் நின்று போராடுவதும்தான் அரசியலின் இயல்பு. ஆனால், தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி சரணாகதி அடைந்து சாய்ந்து கிடக்கிறது. ஆளுங்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம்தான் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசுடன் தொடர்ந்து உறுதியாகப் போராடிக் கொண்டிருக்கிறது. கடந்த 5 ஆண்டுகால ஆட்சியும் நமக்கு உரிமைப் போராட்டம்தான்.
ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் மகாத்மா காந்தி பெயரிலான 100 நாள் வேலைத் திட்டத்தை பெயர் மாற்றமும் உருமாற்றமும் செய்து, திட்டத்தையே முடக்குகின்ற ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து களமிறங்கிப் போராடிக் கொண்டிருப்பது தி.மு.க.வும் அதன் தோழமைக் கட்சிகளும்தான். தேசியக் கல்விக் கொள்கை வழியாகத் தமிழ்நாட்டின் மீது இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிக்கும் நோக்கத்தை எதிர்த்து, பேரறிஞர் பெருந்தகை அண்ணா வகுத்துத் தந்த இருமொழிக் கொள்கையில் உறுதியாக நாம் நிற்பதால், தமிழ்நாட்டிற்குரிய கல்வி நிதியை வழங்காமல் வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசை எதிர்த்துப் போராடுவதும் தி.மு.கழகம்தான். தமிழ்நாட்டின் நிதி உரிமை, வரி உரிமை, சட்ட உரிமை என அனைத்திற்கும் போராடுவது நாம்தான். எல்லாவற்றுக்கும் மேலாக, இந்திய மக்களின் ஜனநாயக உரிமையான வாக்குரிமையைப் பறிக்கும் எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையை எதிர்த்து சட்டரீதியான போராட்டத்தை நடத்துவதும், களத்தில் நின்று ஒவ்வொரு வாக்குச்சாவடிக்குட்பட்ட வாக்காளரின் உரிமையைக் காப்பதும் திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும்தான். இந்திய ஜனநாயகத்தின் பாதுகாவலனாக தி.மு.க. முன்னிற்கிறது. நம் தோழமைக் கட்சிகள் துணை நிற்கின்றன.
ஒரு கையில் வாளை ஏந்தி, உரிமைப் போர்க்களத்தில் நிற்கிறோம். மறுகையில் கேடயத்தை ஏந்தி, மக்கள் நலனைப் பாதுகாக்கிறோம். போர்க்களத்தில் வென்றிட வேண்டும். மக்கள் நலன் காக்கும் திட்டங்களைத் தொடர்ந்திட வேண்டும். தமிழ்நாட்டின் மக்கள் படை நமக்கு ஆதரவாக உள்ளது. அதைச் சிதறடிக்க வேண்டும் என எதிரிகளும் உதிரிகளும் வகுக்கும் வியூகங்களைத் தகர்த்தெறிந்து, ஜனநாயகப் போர்க்களத்தில் நாம் செயலாற்றிடுவோம். கொள்கையில் மாறுபட்டிருந்தாலும், அரசியலில் வேறுபட்டிருந்தாலும் தமிழ்நாட்டின் உயர்வுக்காகப் பங்களிப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை மதிக்க வேண்டும் என்கிற உயர்ந்த பண்பாட்டை நமக்கு கற்றுத் தந்தவர் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர். தன் வாழ்நாளில், அரசியல் கருத்துமாறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அதை நிறைவேற்றிக் காட்டியவரும் அவர்தான்.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் வழியில், தமிழரின் பண்பாட்டு அடையாளமான பொங்கல் நன்னாளைக் கழகத்தின் சார்பில், 2026 புத்தாண்டு தொடக்கத்திலிருந்தே ‘திராவிடப் பொங்கல்’ விழாவை, சமூகநீதிக்கான கொண்டாட்டமாக உடன்பிறப்புகள் முன்னெடுக்க வேண்டும் என உங்களில் ஒருவன் என்ற உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன். கழக நிர்வாகிகள் தங்களுடன் பணியாற்றும் உடன்பிறப்புகளுக்குப் பொங்கல் பரிசுகள் வழங்கி மகிழ்வதுடன், தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் பங்கேற்றிடும் வகையில் கலை, இலக்கிய நிகழ்வுகளை நடத்திட வேண்டும். குறிப்பாக, இளைய தலைமுறை ஆண்களும் பெண்களும் கலந்துகொள்ளும் விளையாட்டுப் போட்டிகளைச் செம்மையாக நடத்தி, வெற்றியாளர்களுக்கும் பங்கேற்பாளர்களுக்கும் பரிசுகளை வழங்கிட வேண்டும். மாநிலம் முழுவதும் கழகத்தின் சார்பில் மூன்று கட்டங்களாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட வேண்டும். கபடி, கிரிக்கெட், வாலிபால், கால்பந்தாட்டம், ஓட்டப்பந்தயம், மிதிவண்டிப் போட்டி, கோ-கோ என ஆண்-பெண் இருபாலருக்கும் தனித்தனியாக விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் வகையில் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். ஒவ்வொரு பிரிவினருக்கும் குறைந்தபட்சம் 3 விளையாட்டுப் போட்டிகளை, ஒருங்கிணைந்த ஒன்றியம், ஒருங்கிணைந்த நகரம், ஒருங்கிணைந்த பகுதி (மண்டல) அளவில் ஜனவரி 3-ஆம் நாள் முதல் ஜனவரி 9 வரை நடத்திட வேண்டும்.
இதில் வெற்றிபெற்ற அணிகளைக் கொண்டு ஜனவரி 10-ஆம் நாள் முதல் பொங்கல் திருநாள் வரை கழக மாவட்ட அளவிலான போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்கிட வேண்டும். கழக மாவட்ட அளவில் வெற்றி பெறும் அணிகளைக் கொண்டு பிப்ரவரி மாதத்தில் மாநில அளவிலான பிரம்மாண்ட போட்டிகள் நடைபெறும். ஜனவரி 14-15 ஆகிய நாட்களில் தமிழ்நாடு முழுவதும் ஊராட்சிகள்-வார்டுகள் அளவில் மகளிரைத் திரட்டி சாதி, மத ஏற்றத்தாழ்வற்ற ‘திராவிடப் பொங்கல்’ வைத்துக் கொண்டாட வேண்டும். அனைத்து வீடுகள் முன்பும், ‘சமத்துவம் பொங்கட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!’ என்ற முழக்கங்களுடன் ‘திராவிடப் பொங்கல்’ கோலமிட்டு, பெண்களும் குழந்தைகளும் பங்கேற்கும் வகையிலான சிறுசிறு போட்டிகளை நடத்திப் பரிசளிக்க வேண்டும். ஜனவரி 16-17 ஆகிய இரு நாட்களும் ஊரின் பொதுவான இடத்தில் தமிழர் பெருமை சொல்லும் கலை - இலக்கிய விழாக்களை நடத்துவதுடன், திரை அமைத்து, திராவிட மாடல் அரசின் பொங்கல் சிறப்புச் செய்தியை அனைவரும் காணும்படி செய்யவேண்டும். இந்த நிகழ்வுகளை ஒன்றிய-நகர-பகுதிக் கழகச் செயலாளர்களும் சார்பு அணி நிர்வாகிகளும் இணைந்து எழுச்சியுடன் நடத்துவதற்கான முழு விவரங்களும் தலைமைக் கழகத்தால் மாவட்டக் கழகங்களுக்குத் தெரிவிக்கப்படும். அந்த வழிகாட்டுதல்களின்படி, திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை விளக்கிடும் வகையிலும், தமிழர்கள் அனைவரும் பங்கேற்றிடும் வகையிலான கலை, இலக்கிய, விளையாட்டுப் போட்டிகளுடன் திராவிடப் பொங்கல் விழாவை ஊர்தோறும் சிறப்பாக நடத்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன். பிறக்கின்ற புத்தாண்டு 2026 - அது, திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்திடும் ஆண்டு! இருளில் பிறக்கும் புத்தாண்டை விடியச் செய்யும் உதயசூரியன் போல, தமிழ்நாட்டின் விடியல் வெளிச்சமாகக் கழக ஆட்சி தொடர்ந்திடும். அனைவருக்கும் மீண்டும், உங்களில் ஒருவனான என்னுடைய இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/31/mkkalla-2025-12-31-07-58-53.jpg)