அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்த மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை நாளான 23ஆம் தேதி முதல் முப்பெரும் அரசு விழாவாக ராஜேந்திர சோழனால் வடிவமைக்கப்பட்ட சோழிஸ்வரர் ஆலய வளாகத்தில் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு ராஜேந்திர சோழனின் 1000வது பிறந்த நாளான முப்பெரும் விழாவின் கடைசி நாளான நேற்று (27.07.2025) பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இதில் பிரதமர் மோடி, ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தையும் வெளியிட்டார்.
இதற்கிடையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியாக பிரதமர் மோடியிடம் கோரிக்கைகளை அளித்திருந்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததால் அமைச்சர் தங்கம் தென்னரசு மூலமாக கோரிக்கை கடிதத்தை பிரதமரிடம் வழங்கினார். அதில்,
தமிழ்நாட்டு மாணவர்களின் கல்விக்கான நிதி விவகாரத்தில் 2024-25ஆம் ஆண்டுக்கான நிலுவையில் உள்ள ரூ. 2151.59 கோடியையும், 2025-26 ஆம் ஆண்டுக்கான முதல் தவணை நிதியையும் விரைவாக வழங்கிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திண்டிவனம் செஞ்சி திருவண்ணாமலை ஈரோடு பழனி, அருப்புக்கோட்டை வழியாக மதுரை, தூத்துக்குடி, மாமல்லவரம் வழியாக சென்னை, கடலூர் ரயில் பாதை திட்டங்கள் உள்ளிட்ட ரயில்வே துறை சார்ந்த திட்டங்களை செயல்படுத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் எதிர்கொள்ளும் கைது, படகு பறிமுதல் போன்ற பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காணவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. உருக்காலை மிகை நிலங்களை பாதுகாப்பு தொழிற் பூங்காவிற்கு விழங்கிடவும் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதே போன்று, பிரதமர் மோடியை சந்தித்த எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் மூன்று முக்கிய கோரிக்கைகளை
முன்வைத்துள்ளார். அதில், விவசாயிகளுக்கான சிபில் ஸ்கோர் நடைமுறையில் இருந்து விலக்களிக்க வேண்டும். சென்னை, கோவை, ஓசூர், சேலம், திருச்சியை இணைக்கும் வகையில் தமிழகத்தில் ராணுவ தளவாட வழித்தடத்தை அமைக்க வேண்டும். கோதாவரி, காவேரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.