Chief Minister M.K. Stalin's criticism The unity government is acting with narrow political objectives
சென்னையில் ஒன்றிய - மாநில உறவுகள் குறித்த தேசிய கருத்தரங்கு இன்று (23-08-25) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், “ஐநா மன்றத்தின் மானுட மேம்பாட்டு குறியீடுகளான தனிநபர் வருமானம், கல்வி, பொது சுகாதாரம், பெண்ணுரிமை, சுற்றுசூழல் பாதுகாப்பு போன்ற குறியீடுகளில் இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு பல துறைகளில் முதன்மை மாநிலமாக தொடர்ந்து திகழ்ந்து வருகிறது. ஒன்றிய அரசு விதிக்கிற நேர்முக வரிகளிலையும், ஜிஎஸ்டி வரிகளிலையும், ஒன்றிய அரசுக்கு அதிக வருமானத்தை ஈட்டி தரும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. ஆனால் மாநிலம் அளிக்கிற வரி வருமானத்துக்கு ஏற்ப ஒன்றிய அரசு, தமிழ்நாட்டு அரசுக்கு உரிய நிதிப் பங்கை வழங்காமல் குறுகிய அரசியல் நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது. பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் காட்டிய வழியில் சிறந்த பல சமூக பொருளாதார திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றி கடந்த நான்கரை வருடமாக திராவிட மாடல் ஆட்சியை தமிழ்நாட்டு மக்களுக்கு நாம் கொடுத்து வருகிறோம். பல்வேறு நெருக்கடிகளை மீறி போராடி தமிழ்நாட்டை உயர்த்தி வருகிறோம்.
1967ல் பேரறிஞர் அண்ணா ஆட்சி பொறுப்பேற்றதும் தன்னுடைய சட்டமன்ற உரையில் மாநிலங்கள் உரிமை பெற அரசியல் சட்டமைப்பு சட்டத்தில் மறுஆய்வு தேவையானது என்று குறிப்பிட்டார். 1969ஆம் ஆண்டு கலைஞர், நீதியரசர் ராஜமன்னார் தலைமையில் ஒரு குழுவை அமைத்தார். ஒன்றிய மாநில உரிமைகளை சீராய்வு செய்து 1971 மே 27ல் ராஜமன்னார் குழு தனது வரலாற்று சிறப்புமிக்க அறிக்கையை தமிழ்நாடு அரசிடம் அளித்தது. அந்த அறிக்கையை அடிப்படையாக வைத்து 1974 ஏப்ரல் 14ஆம் நாள் மாநில சுயாட்சி தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில நிறைவேற்றினார் முதலமைச்சராக இருந்த கலைஞர். அப்போதைய பிரதமர் இந்திரா காந்திக்கு ஒரு மடல் எழுதி மாநில சுயாட்சி தீர்மானத்தையும் இணைத்து ஒன்றிய அரசு உரிய நடவடிக்கையில் மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார். இன்றைக்கும் ராஜமன்னார் குழு அறிக்கையில் குறிப்பிட்டுள்ள பல்வேறு பரிந்துரைகள் மிகவும் போற்றத்தக்கதாகவும் நடைமுறைப்படுத்த வேண்டிய நிலையிலும் இருக்கிறது.
தமிழ்நாடு, மேற்குவங்கம், கர்நாடகம், கேரளம், ஆந்திரா, தெலுங்கானா, பஞ்சாப், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க அல்லாத கட்சிகளோட தலைமையில் ஆட்சி நடக்கிறது. இந்த பட்டியலில் காஷ்மீரும் ஒரு மாநிலமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் ஒன்றிய அரசு, அரசமைப்புச் சட்ட விதிகளை மீறி தன்னிச்சையாக காஷ்மீரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு ஆளுநருனுடைய ஆட்சி காலத்தில் காஷ்மீர் மாநிலத்தை ஒன்றிய அரசினுடைய நேரடியான ஆட்சிக்கு உட்பட்ட ஒரு பகுதியாக மாற்றி அறிவித்தார்கள். இத்தகைய ஜனநாயக விரோத கூட்டாட்சிக்கு எதிரான நடவடிக்கையை திமுகவும், எங்களோடு இணைந்திருக்கக்கூடிய காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியன் முஸ்லிம் லீக் இப்படி எல்லா கட்சிகளும் சேர்ந்து கண்டித்தோம். இதுபோன்ற நிலை தொடரக்கூடாது, மாநிலங்களுடைய உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்படக்கூடாது என்ற உணர்வில் தான் மீண்டும் 50 ஆண்டுகளில் கூட்டாட்சிக்கு எதிராக நடைபெற்ற நிகழ்வுகளை ஆய்ந்து உரிய அரசமைப்பு சட்டத்தை அந்த திருத்தத்தை மேற்கொள்வதற்கு உச்ச நீதிமன்றத்தினுடைய முன்னாள் நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில் ஒரு உயர்நிலை குழுவை நியமித்திருக்கிறோம்.
1983ல் கர்நாடக மாநிலத்தில் நடந்த தென்னிந்திய மாநிலங்களுடைய முதல்வர்கள் மாநாட்டை தொடர்ந்து அன்றைய ஒன்றிய அரசு, உச்சநீதிமன்ற மேனாள் நீதியரசர் சர்காரியா தலைமையில் 1983ல் ஒரு குழு அமைத்தது. நீதியரசர் சர்காரியா குழு, 1988ல் தன்னுடைய அறிக்கையை வெளியிட்டது. இந்த ஆணையத்தினுடைய அறிக்கையில ஒரே ஒரு இடத்தில் மாநிலங்களுக்கு ஆதரவாக என்ன சொல்லி இருக்கிறார்கள் என்றால் இந்தியாவில் பெருமளவில் அதிகார குறுக்கீடு நடைபெற்று வருகிறது. இதை தடுப்பதற்கு பயனுள்ள வகையிலும், மனசாட்சியுடனும் எல்லா நேரங்களிலும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அளவுக்கு மீறிய அதிகார குவியல்களால் ஒன்றிய அரசுக்கு ரத்த கொதிப்பும், மாநில அரசுகளுக்கு ரத்த சோகையும் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவு என்னவெனில் நோயற்ற தன்மையும் திறமையின்மையும் தான் இதனுடைய வெளிப்பாடாக உள்ளது. உண்மையில் அதிகார குவியல் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பதிலாக அதிகப்படுத்துகிறது என்று அந்த அறிக்கையில் இருக்கிறது. சர்க்காரியா ஆணையம் குறிப்பிட்ட இந்த கருத்துக்களுக்கு ஏற்ப மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்கும் வகையில் இந்த ஆணையம் அரசமைப்பு சட்ட திருத்தங்களை மேற்கொள்வதற்காக உரிய பரிந்துரைகளை செய்யவில்லை என்பதையும் நான் இங்கே குறிப்பிட்டு ஆக வேண்டும். சர்க்காரியா ஆணையத்தின் அறிக்கை வெளிவந்த பிறகும், நாடாளுமன்றத்தில் பல சட்டங்களின் வழியாகவும், அரசியலமைப்பு சட்ட திருத்தங்கள் வழியாகவும் ஒன்றிய அரசு பல அதிகாரங்களை தொடர்ந்து பறிக்கப்பட்டு வருகிறது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், மாநிலங்களின் உரிமைகளை நிலைநிறுத்த ஆய்வுக்குள் அமைக்கும் என்று திமுக வலியுறுத்தியதை தொடர்ந்து 2007ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தினுடைய முன்னாள் தலைமை நீதியரசர் புஞ்சி தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணயத்தினுடைய பரிந்துரையில், கட்சி சார்பற்ற முறையில் நடுநிலையாக செயல்படக்கூடிய சிறந்தவர்களாக தேர்ந்தெடுத்த அந்த மாநில முதலமைச்சரை கலந்து ஆலோசித்து ஆளுநரை ஒன்றிய அரசு நியமனம் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. இந்த ஆலோசனையை கூட ஒன்றிய அரசு இன்றுவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
இதுபோன்ற எண்ணற்ற சட்ட குறிக்கீடுகள் வழியாகவும், நிர்வாக குறிக்கீடுகள் வழியாகவும் பாஜக அல்லாத எதிர்கட்சி ஆளக்கூடிய மாநில அரசுகளுக்கு தொடர்ந்து தொல்லை தரக்கூடிய வகையில் பல தடைகளை ஒன்றிய அரசு ஏற்படுத்தி வருகிறது. நிதி ஆணையங்கள் சுதந்திரமாக செயல்படுவதையும் ஒன்றிய அரசு தடுக்கிறது. மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய உரிய நியாயமான நிதி பங்கீட்ட மறுக்கிறது. இதையெல்லாம் மீறி கடந்த நான்கு ஆண்டுகளாக திராவிட மாடல் அரசு பல சிறந்த திட்டங்களை வகுத்து நிறைவேற்றி வருகிறது. நிதிப்பற்றாக்குறை இருந்தும் கூட சிறந்த முறையில் நிதி மேலாண்மை செய்து 2024- 25ஆம் ஆண்டில் 11.19 விழுக்காடு எனும் இரட்டை இலக்க வளர்ச்சியை 14 ஆண்டுகளுக்கு பிறகு நாம் அடைந்திருக்கிறோம். நடுநிலை தவறாத நல்லெண்ணம் கொண்ட பல அறிஞர்களும் பொதுநல நோக்கர்களும் திராவிட மாடல் அரசோட சமூக நீதி திட்டங்களை பாராட்டி வரவேற்கிறார்கள். இந்தி மொழியை திணிப்பதில் ஒன்றிய அரசு தீவிரம் காட்டி வருகிறது. பல்வேறு மொழி போராட்டங்களை எதிர்கொண்டு இந்தி திணிப்பை தமிழ்நாடு முறியடித்துள்ளது. ஏராளமான அரசியல் தலைவர்கள், தமிழ் உணர்வாளர்கள், மாணவர்கள் போராடி கட்டாய இந்தியை தடுத்தார்கள். அதனால் தான் 1968லேயே இருமொழி கொள்கையை முதலமைச்சராக இருந்த பேரறிஞர் அண்ணா சட்டமன்றத்தில் தீர்மானமாகவே நிறைவேற்றினார். தமிழ்நாட்டிலிருந்து எழுப்பப்படக்கூடிய இந்தி எதிர்ப்பு மாநில உரிமை முழக்கத்தை இப்போ இந்தியாவின் பல மாநிலங்களில் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலைக்கு வந்ருக்கிறார்கள்.
கர்நாடகா, மேற்குவங்க மாநிலங்களில் இருமொழிக் கொள்கையை ஆதரித்து குரல் எழுப்புறார்கள். 2025ல் மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரே - ராஜ் தாக்கரெ இணைந்து இந்தி எதிர்ப்பு பேரணியை நடத்தியதும் முதலமைச்சர் பட்னாவிஸ் மகாரஷ்டிரா மாநிலத்தில் இந்தி கட்டாயம் கிடையாது என்று அறிவித்தார். இது இந்திய அளவிலே நடந்து இருக்கக்கூடிய மிகப்பெரிய மாபெரும் மாற்றம். மாநில உரிமைகளுக்காக தொடர்ந்து தமிழ்நாடு போராடி வருகிறது. திமுக, மக்கள் மன்றத்திலும் சட்டமன்றத்திலும் மாநில உரிமைகளை வென்றெடுக்க எல்லா விதமான ஆக்கபூர்வமான ஜனநாயக நடவடிக்கையை தொடர்ந்து எடுத்து வருகிறது. மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற கொள்கை திட்டம் தான் இந்தியாவினுடைய பண்முகத்தன்மையும், இந்தியாவினுடைய ஒருமைப்பாட்டையும் மேலும் வலிமைப்படுத்தக்கூடும். அதற்கு நம்முடைய உயர்நிலை குழு சிறந்த முறையில் பணியாற்றி வருகிறது. இந்த குழு அளிக்கக்கூடிய பரிந்துரைகள், மாநிலங்கள் தன்னிறவை பெற்று ஒரு புதிய வலிமையான இந்தியா உருவாக வழிவகுக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன். தன்னிறைவை பெற்ற மாநிலங்களின் முயற்சியால் தான் ஒன்றுபட்ட இந்தியா வலிமை பெறும். பலவீனமான மாநிலங்களால் இந்தியாவை உயர்த்த முடியாது. எனவே இந்திய உரிமைப்பாட்டில உண்மையான அக்கறை கொண்ட எல்லாரும் மாநில சுயாட்சி கொள்கைக்கு குரல் கொடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கிறேன். தமிழ்நாடு அரசு அமைத்திருக்கக் கூடிய குழு போல் இந்தியாவில் இருக்கக்கூடிய எல்லா மாநிலங்களும் குழு அமைத்து மாநில முழக்கத்தை முன்னெடுக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்” என்று கூறினார்.