Chief Minister M.K. Stalin wishes Comrade Nallakannu's 101st birthday
சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர் நல்லக்கண்ணு இன்று (26-12-25) தனது 101வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராகவும், விவசாயத் தொழிலாளர் சங்கத் தலைவராகவும் இருந்த இவர், விவசாயிகள் போராட்டம், தீண்டாமைக்கு எதிரான போராட்டம், கணிமவளக் கொள்ளைக்கு எதிரான போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்களை செய்து தனது வாழ்நாளில் பெரும்பகுதியை போராட்டம், சிறை வாழ்க்கை என வாழ்ந்துள்ளார்.
தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியாவின் மூத்த அரசியல் தலைவரான இவரின் 101வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை ஒட்டி, அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் உட்பட பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‘தியாகத்தின் பெருவாழ்வு, தோழர் நல்லகண்ணு ஐயா 101-ஆவது பிறந்தநாள். விடுதலைப் போராட்ட வீரராகவும், விவசாயத் தொழிலாளர்களுக்கான போராளியாகவும் திகழ்ந்து, இன்றளவும் நமக்கு வழிகாட்டும் நூற்றாண்டு நாயகர், இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் முதுபெரும் தலைவர் ஐயா நல்லகண்ணு அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். தன்னலம் கருதா உழைப்புக்கு வாழும் சாட்சியான, எண்ணற்ற இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டான தாங்கள் - நல்ல உடல்நலத்துடன் நீண்டநாட்கள் நிறைவாழ்வு வாழ்ந்திட விழைகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த தோழர் நல்லகண்ணு, மருத்துவர்கள் ஆலோசனைப்படி அவர் மருத்துவக் கண்காணிப்பில் வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். அதனால் அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவரை நேரில் சந்திப்பதை தவிர்க்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கோரிக்கை விடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us