Chief Minister M.K. Stalin says We have work to do until the election results are announced
தர்மபுரி மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் பழனியப்பனின் இல்லத் திருமண விழா இன்று (14-12-25) நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அதில் அவர், “நம்முடைய மகளிருக்கு கலைஞர் பெயரால் வழங்கப்படக்கூடிய கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை மாத மாதம் நாம் வழங்கிக் கொண்டிருக்கிறோம். நேற்று முன்தினம் நம்முடைய மகளிருக்கான திராவிட மாடல் அரசின் சார்பில் தீட்டப்பட்டிருக்கும் திட்டங்கள் மூலமாக கிடைத்துக் கொண்டிருக்கூடிய சாதனைகளை அடிப்படையாக கொண்டு ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ என்ற தலைப்பில் ஒரு மாபெரும் நிகழ்ச்சியை நடத்தினோம். அந்த நிகழ்ச்சியில் கூடுதலாக 17 லட்சம் சகோதரிகளுக்கு ரூ.1000 வழங்குகிற நிகழ்ச்சியை தொடங்கி வைத்திருக்கிறேன்.
ஏற்கெனவே, 1 கோடியே 13 லட்சம் பேருக்கு அந்த மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால், அந்த நிகழ்ச்சி மூலமாக மேலும் கூடுதலாக 17 லட்சம் சகோதரிகளுக்கு அதாவது 1 கோடியே 30 லட்சம் பேருக்கு வழங்கக்கூடிய நிலையை உருவாக்கியிருக்கிறோம். இன்னும் சில சகோதரிகள் விடுபட்டிருந்தால் அவர்கள் கோரிக்கை வைத்தால் நிச்சயமாக அவர்களுக்கு அந்த தொகை வழங்கப்படும் எனச் சொல்லிருக்கிறேன். அதுமட்டுமல்லாமல் அந்த தொகை இன்னும் உயரும் கூட சொல்லி இருக்கிறேன். அதே நாளில் ஒரு மாநிலத்தின் முன்னேற்றத்திற்கான அறிகுறியாக இருக்கக்கூடிய ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு நம்பர் 1 மாநிலமாக இன்றைக்கு உருவாக்கியிருக்கிறது. இது நாங்கள் வெளியிட்ட அறிக்கை அல்ல, ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கை. எவ்வளவோ தடங்கல்கள், எவ்வளவோ சோதனைகளை எல்லாம் தாண்டி சாதனை படைத்திருக்கும் ஆட்சி தான் தமிழ்நாட்டில் நடைபெறும் திராவிட மாடல் ஆட்சி.
மற்றொருபுறம் எஸ்.ஐ.ஆர் என்ற ஒரு சட்டத்தை கொண்டு வந்து அந்த பணி வேறு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எஸ்.ஐ.ஆர் பணியில் நம்முடைய தோழர்கள் பம்பரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நமது வாக்குரிமையை நாம் காப்பாற்றி ஆக வேண்டும். ஆனால், அதே நேரத்தில் பாதி வேலை தான் முடிந்திருக்கிறது, இன்னும் பாதி வேலை இருக்கிறது. தேர்தலில் இருந்து வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் அறிவிக்கும் வரைக்கும் நமக்கு வேலை இருக்கிறது. நம்முடைய சாதனைகளை, திட்டங்களை நாம் ஆற்றக்கூடிய பணிகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லி அவைகளை எல்லாம் வாக்குகளாக மாற்ற வேண்டும். ஏழாவது முறையாக திராவிட மாடல் ஆட்சி உருவாகி இருக்கிறது என்ற பெருமை நமக்கு வந்தாக வேண்டும். தமிழ்நாட்டினுடைய வளர்ச்சி தொடர வேண்டும், அதில் உங்கள் எல்லாருடைய பங்கும் நிச்சயமாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.
Follow Us