சென்னையின் குடிநீர் தேவைக்காக புதிய நீர்த்தேக்கத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (19-01-26) அடிக்கல் நாட்டினார். மாமல்லபுரம் அருகே நெம்மேலியில் ரூ.342.6 கோடியில் ‘மாமல்லன் நீர்த்தேக்கம்’ அமைக்க முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
அதனை தொடர்ந்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “காற்றும் நீரும் இந்த பூமியில் இருக்கிற காரணத்தால் தான், மனிதர்களும் மற்ற உயிரினங்களும் உருவாகி வாழுகிறோம். நீர் நிலைகளை சுற்றி குடியிருப்புகள் அமைவது பழந்தமிழுடைய மரபு. எல்லா வகையிலும் இயற்கையோடு இணைந்ததுதான் தமிழருடைய வாழ்வு. அதன் தொடர்ச்சியாக தான் நம்முடைய திராவிட மாடல் அரசு நடைபெற்று வருகிறது. அதற்கு அடையாளமாக இந்த மாமல்லன் நீர்த்தேக்கத்தினுடைய அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
சென்னையில் வளர்ந்து வரக்கூடிய பகுதிகளுக்காக நம் அரசு செய்த முக்கியமான பணிகளில், வரலாற்றில் இந்த நிகழ்வு நினைவுக் கூறப்படும். பொதுவாக சிலர் உண்மை தெரிந்தும் பலர் உண்மை தெரியாமலும் நம்முடைய கழக ஆட்சியில் அணைகள் கட்டவில்லை என்று ஒரு பெரிய பொய்யை சொல்வார்கள். ஆனால், நம்முடைய முத்தமிழிலும் கரைகண்ட தலைவர் கலைஞர், தமிழ்நாட்டினுடைய நீர்நிலைகளை காக்கக்கூடிய செயல்பாடுகளை நிறைய செய்திருக்கிறார். 1967ஆம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து 2011 வரை நம்முடைய தமிழ்நாட்டில 43 அணைகள் கட்டப்பட்டிருக்கிறது. அதை பட்டியலோடு பெயர்களோடு சொல்ல வேண்டும் என்றால் உப்பாறு, சிற்றாறு ஒன்று, சிற்றாறு இரண்டு, பெருவாரிப்பள்ளம்,சோளையாறு, பொன்னியாறு, கருப்பாநதி, ராமநதி, பரப்பலாறு, மேல் நீராறு, பிளவக்க கோவிலாறு, பிளவக்க பெரியாறு, குடகனாறு, பாலாறு, பாலாறு பொருந்தலாறு, குண்டேரி பள்ளம், வரதமாநதி, வட்டமலைக்கரை ஓடை, மருதாநதி, வரட்டு பள்ளம், கீழாறு, குண்டாறு, குதிரையாறு, ஆணைக்குட்டம், ராஜதோப்பு, சோத்துப்பாறை, மோர்தானா நீர்தேக்கம், அடவி நயனார், பொய்கையாறு, வடக்கு பச்சையாறு, சாஸ்தா கோவில் கடனாநதி, நம்பியாறு, சண்முகாநதி, மிருகண்டா நதி, கமண்டல நதி, வண்டல் ஓலை, ஆண்டியப்பனூர், நல்லதங்கால், நங்கஞ்சியாறு, சிறுமலையாறு, இருக்கக்கங்குடி, குப்பநத்தம், மாம்பழத்துறையாறு இப்படி 43 நீர்த்தேக்கங்களை உருவாக்கினவர்தான் நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர்.
நமது திராவிட மாடல் ஆட்சி அமைந்து நீர்வலம் பெருக்க பல நடவடிக்கைகளை நாம் தொடர்ந்து எடுத்து வருகிறோம். கடந்த 5 வருடமாக, மேட்டூர் முழு கொள்ளளவை எட்டி குறித்த நேரத்தில் திறந்து வைத்திருக்கிறோம். 2021இல் 2025 வரை ஆகிய ஐந்து ஆண்டுகளில் காவிரி டெல்டா பகுதிகளில் தூர்வாரக்கூடிய பணிகள் 459 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்றிருக்கிறது. 24,833 கி.மீ நீளத்துக்கு சிறந்த முறையில் இவை செயல்பட்டிருக்கிறது. மாநிலம் முழுக்க புதிதாக, 121 தடுப்பணைகள் அமைக்கக்கூடிய பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. 63 அணைக்கட்டுகள் அமைக்கக்கூடிய பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதில் மிக மிக முக்கியமானது தாமிரப்பரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்பு கால்வாய் திட்டம். ஐந்து ஆண்டுகளில் 9 டிஎம்சி நீர் வறட்சி பகுதியான திசையன்விளைக்கு மற்றும் சாத்தான்குளம் வரை கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. ஊரக வளர்ச்சி துறை மூலமாக தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் 47920 ஏரிகள் மற்றும் 1,33,967 கிலோமீட்டர் கால்வாய்களைதூர்வாரக்கூடிய பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த வரிசையில் தான் சென்னை மாநகரத்தினுடைய பெருகி வரக்கூடிய குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு மற்றுமொரு புதிய நீர்த்தேக்கமாக நம் திராவிட மாடல் அரசு இதை அமைத்திருக்கிறது” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/19/mkch-2026-01-19-12-46-26.jpg)