Chief Minister M.K. Stalin says The enemy is getting fed up with Periyar
தந்தை பெரியாரின் 52வது நினைவு நாள், இன்று (24-12-25) அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தை ஒட்டி தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள பெரியார் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள பெரியார் புகைப்படத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதனை தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “வளைந்து நின்ற முதுகுகள் தலைநிமிர்ந்து தன்மானம் காக்க, தன்னையே இந்த மண்ணுக்குத் தந்த தந்தை பெரியாருக்குப் புகழ் வணக்கம். தமிழர்கள் தலைகுனியாமல், ஆதிக்கத்துக்கு அடிபணியாமல், பகுத்தறிவுச் சிந்தனையோடு சக மனிதரை நேசித்துச் சமத்துவத்தைப் பேணுவதே, இனமானமே பெரிதென அவர் உழைத்த உழைப்புக்கு நாம் செலுத்தும் நன்றி.
பெரியார் எனும் பெருஞ்சூரியனைத் திருடவும் முடியாமல் தின்று செரிக்கவும் முடியாமல் திண்டாடும் பகைவர் கூட்டத்தின் வஞ்சக எண்ணங்களை வீழ்த்திட ஒற்றுமை உணர்வோடு ஓரணியில் தமிழ்நாடு நின்றால், என்றும் வெற்றி நமதே” எனப் பதிவிட்டுள்ளார்.
Follow Us