தி.மு.க. இளைஞரணியின் தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நாளை (07-02-26) விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சி கலைஞர் திடலில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் சுமார் ஒரு லட்சம் இளைஞரணி நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். 

Advertisment

இந்த நிலையில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “விருதுநகரில் நடக்கும் தென்மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கும் இளைஞர்களுக்காக இந்த வீடியோவை வெளியிடுகிறேன். 1980இல் நாங்கள் இளைஞர்களாக இருந்தபோது தொடங்கப்பட்ட அணி இளைஞரணி. 1949இல் இளைஞர்களால் தொடங்கப்பட்ட திமுக என்ற இந்த பேரியக்கத்துடைய அடுத்த தலைமுறையாக மீண்டும் இளைஞர்களிடம் நம்ம திமுகவை கொண்டு சேர்க்க இந்த அணியை தொடங்கினோம். அன்றைக்கு என்கூட களத்தில் நின்று கழகத்தை வளர்த்த இளைஞர்கள் தான் இன்றைக்கு உங்கள் முன்னாடி அமைச்சர்களாக, எம்.எல்.ஏக்களாக, எம்.பிக்களாக, மாவட்ட கழக செயலாளர்களாக பல்வேறு பொறுப்புகளில் இருக்கிறார்கள்.

Advertisment

எங்களுக்கு அடுத்தப்படியாக இப்போது இந்த இயக்கத்தை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை, கடமையை தம்பி உதயநிதி சிறப்பாக செய்து வருகிறார். திமுக மேல் எப்போதும் வன்மத்துடன் இருக்கிற எதிரிகள், இளைஞர்கள் இனி திமுகவுக்கு வருவார்களா என்ற சந்தேகம் எழுப்புகிற மாதிரி தன்னுடைய ஆசைகளை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அதையெல்லாம் உடைத்து தம்பி உதயநிதி, இளைஞரணிக்கு இன்றைக்கு தமிழ்நாடு முழுக்க 5 லட்சம் நிர்வாகிகளை நியமித்து சாதனை செய்திருக்கிறார். இது போதாது என்று மண்டல அளவில் இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நடத்த வேண்டும் என்று மாநாடுகளை நடத்துகிறார். ஏற்கெனவே திருவண்ணாமலையில் ஒன்றரை லட்சம் நிர்வாகிகளை கூட்டி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு மாநாட்டை நடத்தினார். ரொம்ப சரியாக நடந்த அந்த மாநாட்டை பார்த்து எதிர்க்கட்சியில் இருக்கிற பலருக்கும் தூக்கம் போய்விட்டது. 5 லட்சம் நிர்வாகிகள் ஒரு கட்சியினுடைய துணை அமைப்பில் நியமித்து வேலை செய்வதை பார்த்து மற்ற கட்சிகள் எல்லாம் பின்பற்றுகிற ப்ளூ பிரிண்ட்டை திமுக இளைஞரணி தான் கொடுக்க போகுது என்று நினைக்கிறேன்.

இளைஞரணியின் ஒன்றிய நகர பேரூர் அமைப்பாளர்களாக இருக்கக்கூடிய 12,000க்கும் அதிகமாக நிர்வாகிகளுடன் சேர்த்து கிளை, வார்டு அளவிலும் 5 லட்சம் நிர்வாகிகளை நியமிக்க வேண்டும் என்று இளைஞரணி செயலாளர் உதயநிதி மெஷின் மோடில் வேலை செய்திருக்கிறார். அதுவும் இதை அவர் செய்து காட்டிய செயல்முறை மலைப்பை ஏற்படுத்துகிறது. தமிழ்நாடு முழுக்க விருப்ப மனுக்கள் பெற்று அந்த தகவல்களை டிஜிட்டைஸ் செய்து அவர்களை எல்லாம் அன்பகத்துக்கே நேரில் அழைத்து வெரிஃபை செய்து இருக்கிறார். 35 வயதுக்கும் குறைவாக இருக்கிறவர்களை போட்டு அந்த பட்டியலை முறசொலியில் முறையில் தொடர்ந்து வெளியிட்டார்கள். 78 கழக மாவட்டங்களையும் சோசியல் மீடியாவுக்கு என்று தனியாக துணை அமைப்பாளர்களை நியமித்திருக்கி்றார்கள். இதன் தொடர்ச்சியாக மண்டல வாரியாக இந்த நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெறுகிறது. 5 லட்சம் பேருக்கும் போட்டோ, ஐடி கார்டு என்று ராணுவ படை போன்ற உறுதியான கட்டமைப்பு, கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குடன் இது நடக்கிறது.

Advertisment

அதனால் தான் பிப்ரவரி 7ஆம் நாள் விருதுநகர் கூட்டம் என்று சொன்னதும் எனக்குள் புது உற்சாகம் உண்டானது. இந்த விருதுநகர் மாநாட்டில், எதற்காக திமுக தொடர்ந்து இயங்க வேண்டும்? இளைஞர்களான நீங்கள் எப்படி கொள்கையோடு செயல்பட வேண்டும்? எதற்காக திமுக ஆட்சி  தமிழ்நாட்டில் தொடர வேண்டும் என்பது பற்றியெல்லாம் உங்களிடம் பகிர போகிறேன். பிப்ரவரி 7இல் விருதுநகரில் சந்திப்போம், வெல்வோம் ஒன்றாக” என்று பேசினார்.