திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் பழனியாண்டி இல்லத் திருமண விழாவின் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கலந்து கொண்டார். மணமக்களை வாழ்த்தி பேசிய முதல்வர், “நமக்கு எதிரிகளாக இருப்பவர்கள், நம்மை தாக்குவதற்கு, அழிப்பதற்கு, ஒழிப்பதற்கு புது புது உக்திகளோடு புது புது முயற்சிகளை எல்லாம் எடுத்திருக்கிறார்கள். வருமான வரித்துறையை ஏவிவிட்டார்கள், அதற்கு பிறகு பல்வேறு குற்றப்பிரிவு புலனாய்வு மூலம் பல பல ஆயுதங்களை எடுத்து நம்மை விரட்டி பார்த்தார்கள். இப்போது எஸ்.ஐ.ஆர் என்ற ஆயுதத்தை எடுத்து திமுகவை இதன் மூலமாக தான் அழிக்க முடியும் என்று முடிவு செய்திருக்கிறார்கள். இது வேறு மாநிலங்களில் எடுபடலாமே தவிர திமுகவை பொறுத்தவரை தமிழ்நாட்டில் ஒரு காலும் எடுபடாது, முடியாது என்பதை அழுத்த திருத்தமாக நான் சொல்கிறேன்.
நான் திருச்சிக்கு வந்த உடனே ஒரு செய்தி கிடைத்தது. எஸ்.ஐ.ஆர் குறித்து நாம் நீதிமன்றத்திற்கு சென்றிருக்கிறோம். 11 ஆம் தேதி நாளைய தினம் நாம் நடத்த இருக்கக்கூடிய ஆர்ப்பாட்டம் அன்றைக்கு உச்ச நீதிமன்றத்தில் அந்த பிரச்சனை வர இருக்கிறது. இந்த சூழ்நிலையில் நேற்று , திடீரென்று அதிமுகவின் சார்பில் உச்சநீதிமன்றத்துக்கு சென்று திமுக போட்டிருக்கும் வழக்கில் எங்களை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று திடீர் மனுதாக்கல் செய்திருக்கிறார்கள். உங்களுக்கு உள்ளபடியே அக்கறை இருந்தால் நீங்கள் முன்கூட்டியே எதிர்ப்பு தெரிவித்து மனுதாக்கல் செய்திருக்க வேண்டும். எஸ்.ஐ.ஆரை அதிமுக ஆதரித்துக் கொண்டிருக்கிறது. இன்றைக்கு பா.ஜ.கவோ, தேர்தல் ஆணையமோ எதை சொன்னாலும் ஆதரிக்கிற நிலையில் தான் அதிமுக இருக்கிறது.
அடிமையாக இருந்து கொண்டிருக்கிறார்களே தவிர அவர்களுக்கு அதை எதிர்ப்பதற்கு துணிச்சல் இல்லை. ஆனால், நாம் தொடுத்திருக்கும் வழக்கில் இணைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் ஒரு கபட நாடகத்தை நடத்துவதற்காக திட்டுமிட்டிருக்கிறார்கள். பி.எல்.ஓ என்பது அரசு உடைகளை வைத்துக் கொண்டு அந்த பணிகளை செய்வது. பி.எல்.ஏ என்பது கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள் மூலமாக நியமிக்கிறவர்கள். அவர்கள் அந்த பணிகளுக்கு துணை நிற்பார்கள் . அவர்கள், அதிகாரிகளுக்கு துணை நின்று பணியாற்றுவார்கள். இதுதான் பிஎல்ஏவின் வேலை. அதை திமுக சார்பில் முறையாக நாம் அவர்களுக்கு பயிற்சி கொடுத்து கொடுத்திருக்கிறோம்.
அப்படி நியமிக்கப்பட்டிருக்க கூடியவர்கள் தவறு, அதை நீக்க வேண்டும் என்று சொல்லி அதிமுகவின் சார்பில் நீதிமன்றத்தில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் , அது எடுபடாது என்பதை இந்த நேரத்திலே நான் எடுத்துச் சொல்கிறேன். டெல்லியில் இருக்கக்கூடிய பிக் பாஸுக்கு , நம்முடைய பழனிச்சாமி ஆமாம் சாமி போட்டு தான் ஆக வேண்டும். ஆனால் அதையும் தாண்டி, இன்னொரு காமெடி இன்றைக்கு பண்ணிருக்கிறார். இதையெல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/10/stalintrichy-2025-11-10-17-52-05.jpg)