சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில் ‘ஏரோடெஃப்கான் 25’ (AeroDefCon 25) கண்காட்சி மற்றும் கருத்தரங்க நிகழ்ச்சி இன்று (07-10-25) நடைபெற்றது. மூன்று நாட்கள் நடைபெறக்கூடிய இந்நிகழ்ச்சியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
அதன் பின்னர் அவர் பேசுகையில், “தமிழ்நாடு அனைத்து வகையான தொழில்களையும் தடம்பதித்து வருகிறது. தமிழ்நாடு உற்பத்தி துறையில் லீடராக மாறி வருகிறது. ஏற்றுமதி செய்யப்படுகிற மொத்த தானியாங்கி வாகனங்களில் தமிழ்நாட்டோட பங்கு மட்டும் 40 விழுக்காடு. மூன்றில் இரண்டு பங்கு இருசக்கர மின் வாகனங்கள் இங்கு தான் உற்பத்தி செய்யப்படுகிறது. 24- 25ஆம் ஆண்டில் 14.6 6 பில்லியன் டாலர் மதிப்புடைய மின்னணு பொருட்களை ஏற்றுமதி செய்து நாம் தான் முதலிடம் பிடித்திருக்கிறோம். 45,000க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் இருக்கிறது. இந்தியாவில் அதிகபட்சமாக தமிழ்நாட்டில் மொத்த ஜிடிபியில் உற்பத்தி துறை 20 விழுக்காடு பங்கு வகிக்கிறது. உலகளாவிய பொருளாதாரத்தில் தமிழ்நாடு முன்னணி 50 இடங்களில் இருக்கிறது.
இந்தியாவிலேயே 11.19 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியுடன் இரட்டை இலக்கை எட்டிப்பிடித்திருக்கக்கூடிய ஒரே மாநிலம் தமிழ்நாடு தான். எதை செய்தாலும் ஆல் ரவுண்டாகவும் பெஸ்டாக செய்வதால் தான் இது சாத்தியமாகி இருக்கிறது. தமிழ்நாடு பாதுகாப்பு தொழில் வழித்தடம் திட்டம், இந்த துறை சார்ந்த வளர்ச்சிக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்திருக்கிறது. இந்த துறையில், இந்தியாவின் உற்பத்தி மையமாக தமிழ்நாடு மாற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
சென்னை என்பது ஆராய்ச்சி மற்றும் கடற்படை அமைப்புகளுக்கான மையமாகவும், கோயம்புத்தூர் நுண்பொறியல் திறனுக்கான மையமாகவும், ஓசூர் வான்வெளி மற்றும் மின்னணு தொழில்நுட்ப மையமாகவும், திருச்சி கனரக இயந்திர உற்பத்தி மையமாகவும் இருக்கிறது. இவையெல்லாம் ஒன்றாக சேர்த்தால், தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியும் முதலீட்டுக்கு உகர்ந்த இடமாக விளங்குவதை காட்டுகிறது. தமிழ்நாட்டில் உங்களை கவரும் தொழில் சூழல் இருக்கிறது. திறமையான இளைஞர்கள், ஏராளமாக இருக்கிறார்கள். தமிழ்நாட்டில பெரிய தொழில் நிறுவனங்களில் பங்களிப்பு மட்டுமில்லாமல் எம்.எஸ்.எம்.இ (MSME) நிறுவனங்களின் பங்கும் பெரிய அளவில் இருக்கிறது. அதில், 700க்கும் மேற்பட்டவை வான்வழி மற்றும் பாதுகாப்பு துறையில் செயல்படுகிறது. பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய காத்திருக்க வேண்டிய இல்லை. தமிழ்நாடு இப்பவே ரெடியாக இருக்கிறது. பாதுகாப்பு அமைச்சகம், டிஆர்டிஓ மற்றும் பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள் தங்களுடைய தொழில்நுட்பம் திறன் மற்றும் ஒத்துழைப்பை வழங்கி இந்த பயணத்தில் எங்களோடு இணைந்து செயல்படுகிறார்கள்” என்று கூறினார்.