Chief Minister M.K. Stalin presents award to Minister Duraimurugan on Thiruvalluvar Day
மனிதன் அறநெறியோடு வாழ 1330 திருக்குறளை எழுதிய திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக ‘திருவள்ளுவர் தினம்’ ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் தை இரண்டாம் நாளான இன்று (16-01-26) திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த தினத்தை முன்னிட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து தமிழக அமைச்சர்கள், திமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் சென்னை மேயர் பிரியா ஆகியோர் திருவள்ளுவர் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
அதனை தொடர்ந்து, இந்த நிகழ்ச்சியின் போது திருவள்ளுவர் விருது மற்றும் தமிழக அரசின் விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அந்த வகையில், அமைச்சர் துரைமுருகனுக்கு பேரறிஞர் அண்ணா விருதும், மு.பெ.சக்திவேல் முருகானருக்கு திருவள்ளுவர் விருதும், விசிக எம்.எல்.ஏ சிந்தனைச்செல்வனுக்கு அம்பேத்கர் விருதும், வழக்கறிஞர் அருள்மொழிக்கு தந்தை பெரியார் விருதையும் முதல்வர் வழங்கினார். அதே போல், எஸ்.எம். இதயத்துல்லாவுக்கு காமராஜர் விருதும், கவிஞர் நெல்லை ஜெயந்தாவுக்கு பாரதியார் விருதும், பாடலாசிரியர் யுகபாரதிக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருதும், வெ.இறையன்பு ஐ.ஏ.எஸுக்கு தமிழ்த்தென்றல் திரு.வி.க விருதும் வழங்கினார்.
இலக்கிய மாமணி விருதை மரபுத்தமிழ் பிரிவில் இலக்கிய சுடர் த.இராமலிங்கத்திற்கும், ஆய்வுத்தமிழ் பிரிவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரனுக்கும், படைப்புத்தமிழ் பிரிவில் விருதுநகர் இரா.நரேந்திரகுமாருக்கும் வழங்கினார். விருது பெறும் விருதாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுத் தொகையாக ரூ.5 லட்சத்துக்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கத்தையும் வழங்கினார்.
Follow Us