Chief Minister M.K. Stalin paid floral tributes to the portraits of language martyrs
தமிழ்நாட்டில் இந்தி திணிப்பை எதிர்த்து 1937 முதல் 1965களில் நடைபெற்ற மொழி போராட்டங்களில் தமிழ் மொழி காக்க இன்னுயிரை நீத்த தியாகிகளை நினைவு கூறும் நாளாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதி மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்க நாள் கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று (25-01-26) மொழிப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
இந்த தினத்தை முன்னிட்டு, சென்னை மூலக்கொத்தளத்தில் மொழிப்போரில் உயிர் நீத்த தியாகிகளான தாளமுத்து, நடராசன் ஆகிய இருவரின் திருவுருவ படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். தமிழ் மொழிக்காக தன்னுடைய உயிரை நீத்த மொழிப்போர் தியாகிகளான தாளமுத்து மற்றும் நடராசன் ஆகியோரது நினைவிடம் மூலக்கொத்தளத்தில் அமைந்துள்ளது. மொழிப்போர் தியாகிகளின் நினைவு நாளை அனுசரிக்கும் விதமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், உள்ளிட்ட மாணவரணி திமுகவினர் கருப்பு சட்டை அணிந்து ஊர்வலமாக சென்றனர்.
அதனை தொடர்ந்து தாளமுத்து மற்றும் நடராசன் ஆகியோரது திருவுருவ படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த தினத்தையொட்டி இன்று மாலை காஞ்சிபுரத்தில் நடக்கவிருக்கும் மொழிப்போர் தியாகிகளுக்கான பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள இருக்கிறார்.
Follow Us