தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 621 காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் 129 தீயணைப்பு அதிகாரிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா இன்று (03-01-26) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தேர்வு செய்யப்பட்ட அதிகாரிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

Advertisment

அதனை தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “போலீஸ் வேலையில் சேர வேண்டும் என்ற உங்களுடைய கனவும், அதற்கான முயற்சியும் உழைப்பும் சேர்ந்து தான் உங்களை இந்த நிலையில் கொண்டு வந்திருக்கிறது. இனி தான் உங்களுக்கு பொறுப்பும் சமூக கடமையும் அதிகமாகிறது. போலீஸ் நம்மை பாதுகாப்பார்கள் என்ற நம்பிக்கையில் தான் மக்கள் சுதந்திரமாக வெளியில் நடமாடுகிறார்கள். நள்ளிரவு, அதிகாலை என எல்லா நேரத்திலும் வேலைக்கு போயிட்டு வருகிறார்கள். தமிழ்நாடு பாதுகாப்பான மாநிலம், அமைதி பூங்கா என்று இந்திய அளவில் எல்லோரும் சொல்கிறார்கள்.

Advertisment

முதலீடுகளை மேற்கொள்ளக்கூடிய சிறந்த இடம் என்று உலக அளவிலான நிறுவனங்கள் நம்முடைய தமிழ்நாட்டை தேடி வருகிறார்கள் என்றால் அந்த நம்பிக்கையை புதிதாக பணியில் சேர்ந்திருக்கும் நீங்கள் காப்பாற்ற வேண்டும். தமிழ்நாட்டின் எதிர்காலமே உங்கள் கையில் தான் இருக்கிறது என்ற பொறுப்புணர்வு உங்கள் ஒவ்வொருத்தருக்கும் இருக்க வேண்டும். உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தை மக்களுக்கு முறையாக பயன்படுத்த வேண்டும். ஒரு காவலர் நல்லது செய்கிற செய்தி மீடியாக்களில் வரும் போது ஒட்டுமொத்தமாக அந்த துறைக்கே பெருமையை தேடி தந்தது. காவல் பணி மனிதநேயத்துடன் இணைந்தது. வீரத்தின் அடித்தளமே அன்பு தான். அது போல், எங்கேயோ ஒரு காவலர் தவறு செய்தாலும் ஒட்டுமொத்த துறை மீது மக்கள் வைத்திருக்கக்கூடிய நம்பிக்கையை அது பாதிக்கும். அதை உணர்ந்து கவனமாக செயல்பட வேண்டும்.

காவல்துறை பொதுமக்களின் நண்பன் என்று சொல்வது வெறும் வார்த்தையாக இல்லாமல் நீங்கள் அதை நிரூபிக்க வேண்டும். மக்களிடம் கனிவாக நடந்துகொள்ள வேண்டும். குற்றத்தை தடுக்க இரும்பு கரத்தை பயன்படுத்த வேண்டும். புகார் கொடுக்க வருபவர்களிடம் மரியாதை, புன்னகை, அக்கறை இவைகள் எல்லாம் இருக்க வேண்டும். குறிப்பாக பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் போது மிக மிக ஜாக்கிரதையாக கையாள வேண்டும். இந்த துறைக்கு பொறுப்பு வகிக்கிற முதலமைச்சராக இது என்னுடைய கோரிக்கை மட்டும் அல்ல,100% நீங்கள் கடைபிடிக்க வேண்டிய உத்தரவு” என்று பேசினார். 

Advertisment