Chief Minister M.K. Stalin ordered maximum punishment for the culprits for Coimbatore misbehaviour incident
கோவை விமான நிலையம் அருகே, பீளமேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் (02.11.2025) இரவு ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த தனியார் கல்லூரி மாணவியை 3 பேர் கொண்ட மர்ம கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியையும் அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து 7 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்த போலீசார், துடியலூரில் உள்ள காட்டுப் பகுதியில் தலைமறைவாக இருந்த 3 பேரை சுட்டுப் பிடித்துள்ளனர். அவர்கள் தற்போது கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், அந்த 3 பேரும் குணா (30), சதீஷ் (20) மற்றும் கார்த்திக் (21) என்பது தெரியவந்தது.
மேலும், இவர்கள் கடந்த சில வருடங்களாக கோவை இருவூர் பகுதியில் வீடு எடுத்து தங்கி கட்டிட வேலைக்குச் சென்று வந்த இவர்கள் சம்பவ தினத்தன்று மது அருந்திவிட்டு பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் என்பதும், ஏற்கெனவே இந்த மூன்று பேர் மீது காவல் நிலையங்களில் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க உத்தரவிட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “கோவையில் இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த துயரம் மனிதத்தன்மையற்றது. இத்தகைய கொடூர குற்றச் செயல்களைக் கண்டிக்க எந்தக் கடுஞ்சொல்லும் போதாது. இதில் ஈடுபட்ட குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்து, அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை விரைந்து பெற்றுத் தர, காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன்.
மேலும் மேலும் நம் மகளிர் அனைத்துத் துறைகளிலும் அடையும் முன்னேற்றம்தான் இத்தகைய வக்கிர மிருகங்களின் ஆணாதிக்க மனநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும். முழுமையான முற்போக்குச் சமூகமாக நாம் மாறுவதற்கு வழிவகுக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
  
 Follow Us