திராவிட  முன்னேற்றக் கழக அரசு ஐந்தாண்டுகளை பூர்த்தி செய்து அடுத்த தேர்தலை எதிர்நோக்கி உள்ள நிலையில், அரசு சார்பில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், நலத்திட்ட உதவிகளை விரைவாக செயல்படுத்துவதில் தீவிரமாக உள்ளது.

Advertisment

அதன் ஒரு பகுதியாக எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், அறிவுத்தளத்தில் இயங்கக்கூடிய ஆளுமைகளை கௌரவப்படுத்தும் வகையில் பல்வேறு முன்மாதிரியான  செயல்பாடுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார். 2021 ல் திமுக ஆட்சி அமைந்ததும் ஒன்றிய அரசின் சாகித்திய அகாடமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்களுக்கு, அவர்கள் விரும்புகிற இடத்தில் சொந்தமாக வீடு வழங்கப்படும் என, ‘கனவு இல்லம்’ என்ற பெயரில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்தத் திட்டத்தின் அடிப்படையில் தமிழ் எழுத்தாளர்கள் சிற்பி பாலசுப்பிரமணியம், நாஞ்சில்நாடன், பூமணி, எஸ்.ராமகிருஷ்ணன், உட்பட இதுவரை 25 தமிழ் அறிஞர்கள் அரசு வழங்கிய வீட்டை பெற்றுள்ளார்கள்.

Advertisment

இரண்டு வருடங்களுக்கு முன்பு சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் ஈரோட்டைச் சேர்ந்த தேவிபாரதிக்கு, சென்ற வருடம் சென்னையில் முதல்வர் வீடு வழங்கினார். இதற்கான முயற்சியை நக்கீரன் முன் நின்று நடத்தியது. அதேபோல் தற்போது முதுபெரும் எழுத்தாளர் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பொன்னீலனுக்கு சென்னையில் தமிழக அரசு வீடு வழங்கியுள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்பு பொன்னீலன் எழுதிய, ‘புதிய தரிசனங்கள்’ என்ற நாவலுக்கு தான் 1994 ல் சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டது. விருது பெற்று 30 வருடங்களுக்குப் பிறகு எழுத்தாளரை பெருமைப்படுத்தும் வகையில் திமுக அரசு தற்போது வீடு வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான முழு முயற்சியையும் நக்கீரன் சார்பில் முன் நின்று செய்தோம்.

சாகித்திய அகாடமி விருது பெறுகிற எழுத்தாளர்களுக்கு ஒன்றிய அரசு ஒரு லட்சம் ரூபாய் பரிசும், பாராட்டு பத்திரமும் வழங்கி அனுப்பி விடுகிறது. ஆனால், தமிழக அரசு ஏறக்குறைய ஒன்னரை கோடி ரூபாய் மதிப்பில் அவர்கள் ஒவ்வொருவருக்கும் சொந்தமாக வீடு வழங்கி உயர்ந்த பெருமையை கொடுக்கிறது. எழுத்தாளர் பொன்னீலனுக்கு தமிழக அரசின், ‘கனவு இல்ல’ வீடு வழங்கும் செயல்பாட்டில் செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் விரைவாக பணியாற்றினார்கள். கடந்த 4 ந் தேதி காலை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வீடு வழங்கும் அரசானையை பொன்னீலனுக்கு வழங்கினார்.

Advertisment

இந்தியாவில் 1975 ல் அப்போதைய அரசால்  அமல்படுத்தப்பட்ட எமர்ஜென்சி (அவசரநிலை) காலத்தை அதில்  ஏற்பட்ட நெருக்கடி, பாதிப்புக்களை மையமாக வைத்து, ‘புதிய தரிசனங்கள்’ எனும் பெயரில் நாவலாக, படைப்பிலக்கியமாக கொடுத்து வரலாற்று பதிவு செய்தார் பொன்னீலன். அதே எமர்ஜென்சி காலத்தில், மிசா சட்டத்தில் கைதாகி ஓராண்டுக்கு மேல் சிறையில் கடும் சித்திரவதைகளை அனுபவித்து, அந்த கொடிய நெருக்கடியில் இருந்து மீண்டு வந்தவர் தற்போதைய நமது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். கொடுமையான காலத்தை அதன் வலிகளை உயிரோட்டமான பாத்திரங்களுடன் நாவலாக வரலாற்றில் பதிவு செய்தவருக்கு அந்த கொடுமைகளை நேரடியாக அனுபவித்து தற்போதும் எமர்ஜென்சி கொடுமை காலத்திற்கு சாட்சியாக உள்ள  முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசின் சார்பில் பொன்னீலனுக்கு வீடு வழங்கி சிறப்பு செய்துள்ளது வரலாற்று பதிவாகும். முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஒவ்வொரு செயல்பாடுகளும் கடந்து வந்த நமது வரலாற்றை திரும்ப பேச வைக்கிறது, பதியவைக்கிறது..!