Chief Minister M.K. Stalin is unwavering despite the heavy rain and he attened Welfare assistance in Tenkasi
வடகிழக்கு பருவக்காற்றின் அடைமழை, மனிதர்களை முடக்குகிற ஐப்பசி மாத வாடைக் காற்றுக்கு இடையில், இரண்டு நாள் பயணமாக மக்களுக்கு உதவும் வகையிலான நிகழ்ச்சிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுகவிற்கு உட்பட்ட கோவில்பட்டி நகர கழகம் அமைந்துள்ள கட்சி அலுவலகக் கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சி மற்றும் தென்காசி மாவட்டத்தில் 2.44 லட்சம் பேருக்கான நல திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி ஆகிய நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 24 மற்றும் 25 தேதிகளில் நடைபெறுவதாக இருந்தது. அந்த நிகழ்ச்சிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க வருவதாக இருந்தது. ஆனால், அந்த நிகழ்ச்சிகள் பின்னர் அக்டோபர் 28 மற்றும் 29 மற்றம் செய்யப்பட்டது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/10/30/m5-2025-10-30-17-15-48.jpg)
இதற்காக அக்டோபர் 28ஆம் தேதியன்று மாலை சென்னையிலிருந்து விமானம் மூலம் இரவு 7.40 மணிக்கு மதுரை வந்திறங்கிய முதல்வர், அங்கிருந்து சாலை மார்க்கமாக இரவு 8.50க்கு கோவில்பட்டி வந்தடைந்தார். தி.மு.க.வினர் பொதுமக்கள் மற்றும் அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள் என்று திரண்டு வந்து தாரை தப்பட்டை முழங்க முதல்வரை வரவேற்றனர். எம்.பி கனிமொழி , அமைச்சர் கீதா ஜீவன் உள்ளிட்ட நகர நிர்வாகிகள் உடன்வர கோவில்பட்டி இளையரசனேந்தல் ரோட்டில் கோவில்பட்டி நகர கழகத்தினர் தங்களுக்கான அலுவலகமாக அமைத்திருந்த ‘கலைஞர் அறிவகம்’ என்கிற அம்சமான கட்டிடத்தையும் அதன் முகப்பில் 8 அடி உயர பீடத்தில் 8 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட கலைஞரின் வெண்கலச் சிலையையும் திறந்து வைத்த முதல்வர் அந்த அமைப்பினைக் கண்டு வியந்தார்.
தரைத்தளத்தின் மேலே இரண்டு தளங்கள் அமைக்கப்பட்ட அலுவலகக் கட்டிடத்தின் உள்ளே பெரிய மீட்டிங் ஹால், மற்றொரு பகுதியில் மாணவ மாணவிகள், பொதுமக்கள் பயன் பெறுகிற வகையில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தையும் திறந்து வைத்து பார்வையிட்ட முதல்வர், நிர்வாகிகளைப் பாராட்டினார். கனிமொழி எம்.பி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான கீதா ஜீவன் ஆகியோர் முதல்வருக்கு வெள்ளி செங்கோல் வழங்கினர். தொடர்ந்து முதன்முதலாக அங்குள்ள பார்வையாளர் பதிவேட்டில் தனது கையெழுத்தைப் பதிவிட்ட முதல்வர், இந்த நகர கழக அலுவலகம் கட்டுவதற்கான இடத்தை இலவசமாக வழங்கிய கே.ஆர். கல்வி நிறுவனத்தின் தாளாளர் அருணாச்சலத்தின் மகன் நிதிஷ்குமாருக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டினார். அங்கிருந்து கிளம்பும் நேரத்தில், ‘இந்தக் கட்டிடம் அமைப்பு, வரைபட அனுமதி, பிளான் அப்ரூவல் பெறப்பட்டு சொத்துவரி ஆகியவைகள் நகராட்சியில் கட்டப்பட்டு முறையான அனுமதி பெறப்பட்டுள்ளதா?’ என்று முதல்வர், அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் நகர கழக நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘ஐயா எல்லாம் முறையான அனுமதி பெறப்பட்டு அமைக்கப்பட்டிருக்கு’ என்று தெரிவித்திருக்கிறார்கள். இத்தனை நெருக்கடியான பணியிலும் முதல்வரின் இந்த உஷார் கவனம் பற்றிய விசாரிப்புகள் நகர கழகத்தினரை வியக்க வைத்திருக்கிறது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/10/30/m6-2025-10-30-17-17-40.jpg)
கோவில்பட்டி நகர தி.மு.க.வினருக்கு, இத்தனை பெரிய நகரத்தில் கட்சிக்கென்று ஒரு அலுவலகம் சொந்தமாகக் கட்ட வேண்டுமென்று நீண்ட கால கனவு. அதற்கான முயற்சிகளை அவர்கள் மேற்கொண்டபோது, கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையிலுள்ள மதிப்பு மிக்க மூன்று சென்ட் நிலத்தை அங்குள்ள கே.ஆர். கல்வி நிறுவனத்தின் தாளாளர் இலவசமாக அளித்திருக்கிறார். பெருங்கொண்டவர்களின் நிதியளிப்பு, நகர கழக நிர்வாகிகள் மற்றும் கட்சியினர், பொதுவான நன்கொடையாளர்கள் என்று அனைத்து தரப்பினரின் நிதிப் பங்களிப்பு உதவியோடு 1.75 கோடி மதிப்பீட்டில் தரைத்தளத்துடன் கூடிய மேல் இரண்டு தளங்கள், கலைஞரின் உயரமான வெண்கலச் சிலை என்று ‘கலைஞர் அறிவகம்’ எனப் பெயரிடப்பட்ட தங்களுக்கான நகர கட்சி அலுவலகத்தை அமைத்து விட்டனர். மேலும் கட்டுமான நிலம், மற்றும் சொத்தும் கட்சித் தலைமையான தி.மு.க.வின் பொதுச் செயலாளர் பெயரிலேயே ஆவணப்படுத்தப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கட்சியினர் சிலாகிக்கின்றனர்.
கோவில்பட்டி நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு கிளம்பிய முதல்வர் மு.கஸ்டாலின், மறுநாள் தென்காசி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நெல்லை வழியாக முக்கூடல் பகுதியின் அரியநாயகிபுரத்திலிருக்கும் தனது மருமகன் சபரீசனின் இல்லத்தில் தங்கினார். தென்காசி மாவட்டத்தில் 147.60 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற பணிகளைத் திறந்து வைக்கவும், புதிய பணிகளுக்கான அடிக்கல் நாட்டுவதோடு அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் தேர்வான மாவட்டத்தின் 2.44 லட்சம் பேருக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/10/30/m7-2025-10-30-17-19-16.jpg)
இந்த நிகழ்ச்சிக்காக தென்காசியின் இலத்தூர் விலக்கு ஆய்க்குடி சாலையின் கீழ்புறப் பகுதியில், ஜாஸ் ஸ்மார்ட்சிட்டி மைதானத்தில் மாநிலத்திலேயே முதன்முதலாக ஜெர்மன் நாட்டுத் தொழில் நுட்பத்தில் 350 அகலத்தில், 550 அடி நீளத்தில் அனைத்தையும் தாங்கக்கூடிய வகையிலான பிரம்மாண்டமான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 22 ஆயிரம் பயனாளிகள் அமர்வதற்கு ஏற்றாற் போன்று ஏற்பாடுகள் செய்யப்பட்டதில் மழை வந்தாலும் பாதிக்காத அளவிற்கு ராட்சத மேற் கூரைகள் அமைக்கப்பட்டது. 350 அடி அகல மத்திப் பகுதியில் தென்மாவட்டங்களில் முதன்முறையாக 170 அடி அகலத்திற்கு தூண்களே இல்லாமல் பந்தல் அமைக்கப்பட்டிருப்பது வியப்பானது. இதற்கான மொத்த அமைப்புச் செலவுகளும் வருவாய் துறை அமைச்சரான கே.கே.எஸ்.எஸ்.ஆரின் பொறுப்பில் விடப்பட்டுள்ளதாம். முதல்வரின் நிகழ்ச்சியின் பொருட்டு தென்காசி நகரம் மட்டுமல்லாது நிகழ்ச்சி நடக்கிற மைதானம் வரை கொடிகளாலும், அலங்காரத்தாலும் போர்த்தியிருந்தார்கள். நிகழ்விற்காக காலை அரியநாயகிபுரத்திலிருந்து தென்காசிக்குப் புறப்பட்ட முதல்வரை நெல்லை ஆலங்குளம் தென்காசி வழிச்சாலைகளில் கட்சியினரும் பொதுமக்களும் வழிநெடுக ஆரவாரத்துடன் திரண்டு வந்து வரவேற்றனர். தென்காசி வந்த முதல்வர், மேடையை அடுத்துள்ள ஆய்க்குடி நகருக்குள் சென்றுஅங்கு நடைபெறுகிற கலைஞர் கனவு இல்லத்திட்டத்தில் கட்டப்படும் வீடுகளை ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து அதிகாரிகளிடம் பேசினார். அப்போது கழுநீர்க்குளத்திலுள்ள மாணவி பிரேமாவிற்கு ‘நான் முதல்வன்’ திட்டத்தில் அவருக்கு ஒதுக்கப்பட்ட வீட்டின் கட்டுமானப் பணிகள் பற்றியவைகளை அந்த மாணவிக்கு போனில் தெரிவித்தார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/10/30/m4-2025-10-30-17-18-02.jpg)
அது சமயம் அங்குள்ள மாணவ மாணவிகள் சிலம்பம் ஆடி முதல்வரை வரவேற்ற போது திடீரென்று காரிலிருந்து இறங்கிய முதல்வர், அவர்களிடமிருந்து கம்பு ஒன்றை வாங்கி அசத்தலாக கம்பு சுற்றியது அந்த மாணவ மாணவியர்களை உற்சாகப் படுத்தியது. மேலும் அவர்களிடம் சிலம்பம் சுற்றும் போது கம்பினை எப்படிப் பிடிக்க வேண்டும் என்று சொல்லிக் காட்டினார் முதல்வர். அரசுத்துறைகளின் நலத்திட்ட உதவிகளைப் பெறுகிற மாவட்டத்தின் நகர, ஒன்றியக் கிராமப்புற பகுதிகளின் பயனாளிகள் அழைத்து வரப்பட்டனர். அவர்களுடன் பொதுமக்கள் என்று கூட்டம் அரங்கத்தை நிரப்பியிருந்தது. விழாவிற்கு முதல்வர் வந்தபோது, அரங்கம் அதிர வரவேற்பு. நிகழ்ச்சியில் 587.39 கோடியில் 2.44 லட்சம் பயனாளிகளுக்கான நலத்திட்ட உதவி ஒதுக்கப்பட்டது. 147.60 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட 117 பணிகளைத் திறந்துவைத்த முதல்வர், 291.19 கோடி மதிப்பீட்டில் 83 புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டினார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/10/30/m2-2025-10-30-17-18-29.jpg)
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்பு, பரபரப்பாகவே தனது உரையை ஆரம்பித்த முதல்வர், “தற்போது நெல்கொள்முதல், ஈரப்பதம் உள்ளிட்டவைகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கிளப்பியவைகளுக்குப் பதிலடியாக நெல் கொள்முதல் பற்றி தினமும் நான் விசாரித்துக்கொண்டுதான் வருகிறேன். தமிழகத்தின் அனைத்துக் கொள்முதல் நிலையங்களிலும் அன்றாடம் ஆயிரம் மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யப்படுகின்றன. நெல்லின் ஈரப்பதத்தை 22 சமவிகிதமாக உயர்த்த மத்திய அரசை வலியுறுத்தி வருகிறேன். அ.தி.மு.க. ஆட்சியைவிட கடந்த 4 ஆண்டுகளில் 1,70,45,545 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் பாடுபட்டு தயாரிக்கும் ஒரு நெல்மணி கூட வீணாக விடமாட்டோம். விரக்தியின் உச்சியிலிருக்கும் இ.பி.எஸ். அவதூறு பரப்புகிறார். மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்துப் பேசியவர் இ.பி.எஸ். எனக் காட்டமாகப் பேசினார். அதனை தொடர்ந்து முதல்வர், “பேரிடர் நிதியைக் கூட மத்திய அரசு இன்னமும் தரவில்லை. மக்களைக் காக்க தி.மு.க. அரசுக்கு சொல்லித்தர வேண்டியதில்லை. சிறப்பு தீவிர திருத்தம் நடவடிக்கை என்ற பெயரில் நமது வாக்குரிமையைப் பறிக்க முயற்சிக்கிறார்கள். வாக்குரிமை பறிப்பை எந்த நிலையிலும் நடக்கவிட மாட்டோம். ஜனநாயகத்தின் அடித்தளமே வாக்குரிமை. அதை எந்த நிலையிலும் விட்டுத்தர மாட்டோம்” என்று ஓங்கிய குரலில் சொன்னபோது அரங்கத்தில் ஆரவாரக் கைத்தட்டல்கள்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/10/30/m8-2025-10-30-17-19-41.jpg)
நிகழ்ச்சி முடிந்து மதுரை புறப்படுவதற்காக ஓய்வின் பொருட்டு குற்றாலம் சர்க்யூட் ஹவுஸ் வந்த முதல்வர், நிர்வாகிகளை அழைத்திருக்கிறார். குறிப்பிட்ட நிர்வாகிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். உள்ளே செல்ல முயன்ற பொறுப்பாளரான ஆவுடையப்பன் தடுக்கப்பட்டார். போலீஸுக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் சற்று நேரம் கழித்து அவர் உள்ளே அனுமதிக்கப்பட்டாராம். வந்த நிர்வாகிகளிடம் பேசிய முதல்வர், வரவிருக்கிற தேர்தலில் அனைவரும் ஒருங்கிணைந்து தீவிரமாகப் பணியாற்ற வேண்டும். தொய்வு கூடாது. என்று எச்சரிக்கையாகவே தெரிவித்திருக்கிறாராம்.
Follow Us