தூத்துக்குடி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வின்ஃபாஸ்ட் எனும் மின்சார கார் உற்பத்தி ஆலையை தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின் இன்று (04-08-25) திறந்து வைத்தார். வியட்னாம் நாட்டைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட் என்ற நிறுவனம் சுமார் ரூ.16,000 கோடி மதிப்பில் சுமார் 1 லட்சத்து 50,000 கார்களை ஆண்டுக்கு உற்பத்தி செய்யும் வகையில் தூத்துக்குடியில் மின்சார் கார் உற்பத்தி ஆலை அமைக்கப்படும் என தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருந்தது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்தாண்டு நடைபெற்றது.

அதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் முதற்கட்டமாக சுமார் ரூ.1,119.67 கோடி மதிப்பில் 114 ஏக்கர் பரப்பளவில் தூத்துக்குடியில் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு பணிமலைகள், இரண்டு கிடங்குகள் மற்றும் கார் பரிசோதனை மையம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த தொழிற்சாலையில் முதற்கட்டமாக, VF-6, VF-7 உள்ளிட்ட இரண்டு வகையான கார்கள் முழுமையாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அதனுடைய விற்பனையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார். தொழிற்சாலையை திறந்து வைத்த பிறகு தொழிற்சாலை முழுவதும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்று ஆய்வு செய்து பார்வையிட்டார். இந்த நிகழ்வில், கார் நிறுவனத்தைச் சேர்ந்த முன்னணி நிர்வாகிகள், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தூத்துக்குடி எம்.பி கனிமொழி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  

இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “தெற்காசியாவின் மிகப்பெரிய குழுமங்களில் ஒன்றாக வின்ஃபாஸ்ட் நிறுவனம் உள்ளது. இந்தியாவுடைய மொத்த மின்வாகன உற்பத்தியில் 40% தமிழ்நாட்டில் இருந்து தான் உற்பத்தியாகிறது. தமிழ்நாடு தான் இந்தியாவுடைய வாகன உற்பத்தி மற்றும் மின் வாகன உற்பத்தியினுடைய கேப்பிடல் என்று நெஞ்சு நிமிர்த்தி நான் சொல்வேன். திருபெரும்பதூரில் எப்படி முதல் கார் உற்பத்தி திட்டம் தொடங்கப்பட்டதோ, அதே மாதிரி இன்றைக்கு தூத்துக்குடியில் முதல் மின்வாகன உற்பத்தி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டுக்கும் வியட்னாமுக்கும் இடையேயான வர்த்தக மற்றும் பொருளாதார வளர்ச்சி மேன்படும்

கடந்த 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த உலக முதலீட்டாளர்மாநாட்டின் போது ரூ.16,000 கோடி உறுதியளிக்கப்பட்ட முதலீடு மற்றும் 3,500 நபர்களுக்கு உறுதி அளிக்கப்பட்ட வேலைவாய்ப்பு என்ற வகையில் இந்த உற்பத்தி திட்டத்திற்கான புரிந்தணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அடுத்த மாதமே, சிப்கார்ட் தொழிற்பேட்டையில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இன்றை க்கு தொடக்க விழா நடக்கிறது. இதனால் தூத்துக்குடி மட்டுமல்ல தமிழ்நாட்டினுடைய தென்மாவட்டங்கள் மிகப்பெரிய தொழில் பகுதியாக வளர்ச்சி அடையும்” எனப் பேசினார்.