கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் சில இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக கனமழை பொழிந்து வருகிறது. அதன்படி, தமிழ்நாட்டில் மிக முக்கியமான பருவ காலமான வடகிழக்கு பருவமழை கூடிய விரைவில் தொடங்கவுள்ளது. இந்த வடகிழக்கு பருவமழை, அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் வரை இருக்கும். வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரை, அக்டோபர் மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து தமிழகத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், இயல்பை விட 15% அதிகமாக மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

Advertisment

இந்த நிலையில், வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (06-10-25) ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தலைமை செயலாளர் முருகானந்தம் , வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர். அதில், கடலோர மாவட்டங்கள் அல்லது அதிக அளவில் மழைக்கான வாய்ப்பு இருக்கக்கூடிய மாவட்டங்கள் என்னென்ன? அங்கு செய்யப்பட்டிருக்கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன என்பது குறித்து முதல்வர் ஆலோசனை நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

அக்டோபர் மாதத்தில் இயல்பை விட 15% அதிகமாக மழை பெய்யும் என்று அறிவுறுத்திக்கூடிய நிலையில், அது தொடர்பாகவும் முதல்வர் விரிவான ஆலோசனை நடத்தினார். கடந்த முறை தண்ணீர் தேங்கிய இடங்கள், தண்ணீர் தேங்கினால் உடனடியாக அதை அப்புறப்படுத்தக்கூடிய நடவடிக்கைகள், தாழ்வான மற்றும் கரையோர பகுதிகளில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.