Chief Minister M.K. Stalin harshly criticized admk and bjp in Coimbatore dmk event
கோவையில் தி.மு.க. மேற்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாடு இன்று (27-02-26) பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது, “தமிழர் விரோதிகளும், தமிழினத் துரோகிகளும் வைத்துள்ள இந்தக் கூட்டணியை மக்கள் முன் அம்பலப்படுத்தி அவர்களுக்கு தோல்வியைப் நாம் பரிசாக தந்தாக வேண்டும். இதுதான் நம் முன் இருக்கும் முதல் கடமை. பொதுவாக, தேர்தல் கூட்டணிகளின் ஆயுட்காலம் மிகவும் குறைவு. ஆனால், தி.மு.க. தலைமையிலான நம்முடைய கூட்டணி அதை உடைத்திருக்கிறோம். பாசிச பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் என்ற ஜனநாயக நோக்கத்துடன், 2019 தேர்தலுக்கு முன்பு தொடங்கப்பட்ட நம்முடைய கூட்டணி, தொடர்ந்து நடந்த 2021 சட்டமன்றத் தேர்தல், இடையில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல், இப்போது 2026 சட்டமன்றத் தேர்தல் வரையிலும் கொள்கை உறுதியுடன் தொடர்கிறது. எனக்கு தெரிந்து தமிழ்நாட்டின் தேர்தல் வரலாற்றிலேயே, இவ்வளவு நீண்ட காலம் ஒற்றுமையுடன் ஒரு கூட்டணி தொடர்வது இதுதான் முதன்முறை. வளர்ச்சியிலும் சாதனைத் திட்டங்களிலும் மட்டுமல்ல, கூட்டணியிலும் நாம் வரலாறு படைத்திருக்கிறோம். ‘வெல்வோம் ஒன்றாக’ என்று ஒவ்வொரு கூட்டத்திலும் ஏன் சொல்கிறேன் என்றால், கொள்கையில் வெல்வோம் ஒன்றாக என்ற பொருளையும் சேர்த்துதான் அப்படி சொல்கிறேன்.
அண்மையில், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி என்ன பேசினார் என்று பார்த்தீர்களா? தேர்தலுக்காகத்தான் அவர்கள் கூட்டணியை அமைத்திருக்கிறார்களாம். சர்க்கஸ் முடிந்ததும் எவ்வாறு கூடாரத்தை பிரித்துவிடுவார்களோ, அதேபோன்று தேர்தல் முடிந்ததும் இவர்கள் மறுபடியும் ஆளுக்கொரு பக்கமாக பிரிந்து தங்களுடைய நாடகத்தை தொடர்வார்கள். இப்படிப்பட்ட என்.டி.ஏ சர்க்கஸின் ரிங் மாஸ்டர்தான், பா.ஜ.க. அவர்கள் சொன்னபடி தமிழ்நாட்டு மக்கள் முன் வித்தை காட்டுபவர்தான் பழனிசாமி. பழனிசாமி தான் என்ன பேசுகிறோம் என்று தெரிந்துதான் பேசுகிறாரா என்று எனக்கு புரியவில்லை. அவர் லேபராக சேர்ந்திருக்கும் ஓனரின் தலைமையிலான கூட்டணி, கொள்கை இல்லாத கூட்டணி, சந்தர்ப்பவாத கூட்டணி, அதை அவரே மக்களிடம் ஒப்புதல் வாக்குமூலமாக கொடுத்திருக்கிறார். பத்து தோல்வி பழனிசாமி அவர்களே, நீங்கள் மைண்ட் வாய்ஸ் என்று நினைத்து சத்தமாக பேசிவிட்டீர்கள். என்.டி.ஏ கூட்டணி தேர்தலுக்காக அமைக்கப்பட்ட கூட்டணி மட்டுமல்ல, வழக்குகளில் இருந்து தன்னையும் சொந்தகாரர்களையும் காப்பாற்றிக் கொள்ள பழனிசாமி சுயநலத்துடன் இணைந்திருக்கும் கூட்டணி. எப்போது எல்லாம் தனக்கு பிரச்சினை வருகிறதோ, அப்போது எல்லாம் டெல்லிக்கு காரில் மாறி மாறிச் சென்று சரணாகதி அடைவது அவருக்கு பழக்கமானதுதான். ஆனால், நாம் அப்படியா? ஒரு கொள்கையில் உறுதியாக நின்று போராடுகிறோம்.
இப்போது கூட பாருங்கள், டெல்லி முதலமைச்சராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்தார்கள். நேர்மையாக நேர் வழியில் தேர்தலை எதிர்கொள்ள துணிச்சல் இல்லாமல் கோழைத்தனமாக நடந்து கொண்டார்கள். இன்றைக்கு அந்த வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை என்று சொல்லி நீதிமன்றமே சொல்லிவிட்டது. அரவிந்த் கெஜ்ரிவாலும், அவர் கட்சியைச் சேர்ந்த மனீஷ் சிசோடியாவும் சிறையில் கழித்த நாட்களை பா.ஜ.க.வால் திரும்பத் தர முடியுமா? மீண்டும் டெல்லியில் தேர்தல் நடத்த முடியுமா? இதே ஃபார்முலாவை தமிழ்நாட்டிலும் செய்ய நினைக்கிறார்கள். தங்களின் ஏவல் அமைப்புகளை வைத்து நம்மை மிரட்டப் பார்க்கிறார்கள். உங்களின் அரட்டல் மிரட்டலுக்கு பயப்பட நாங்கள் அடிமையும் இல்லை, கோழையும் இல்லை. தைரியமாக உங்களை எதிர்கொள்வோம். அதனால்தான், மக்கள் மட்டுமல்லாமல் பல கட்சிகளும் நம் மீது நம்பிக்கை வைத்து நம்முடைய கூட்டணியில் இணைகிறார்கள்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/27/m-2026-02-27-19-24-28.jpg)
தேர்தலுக்கு தேர்தல் கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் எண்ணிக்கை குறைவதைத்தான் பார்த்திருக்கிறோம். அந்த வழக்கத்திற்கு மாறாக நம்முடைய கூட்டணியின் பலம் மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே போகிறது. தி.மு.க. மட்டும் வெற்றி பெற்றால் போதும் என்று நினைக்கவில்லை. யாரெல்லாம் பா.ஜ.க.வின் தமிழ் விரோத அரசியலை எதிர்க்கிறார்களோ அவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறேன். திராவிடம், காந்தியம், மார்க்சியம், அம்பேத்கரியம், சிறுபான்மையினர் நலன், பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன் என்று அனைத்து குரல்களையும் கொண்ட மதச்சார்பற்ற ஜனநாயக சக்தியாக இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக நம்முடைய கூட்டணி இருக்கிறது. கூட்டணிக் கட்சிகள் மக்களுக்காக வைக்கும் கோரிக்கைகளை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றி கொடுக்கும் அரசாக நாம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
அதனால்தான் நம்மை நாடி இத்தனை பேர் வருகிறார்கள். ஒரு ஆரோக்கியமான ஜனநாயகம் என்பது அனைத்து தரப்பு குரல்களுக்கும் இடம் கொடுக்க கூடியதாக இருக்க வேண்டும். அப்படித்தான் நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி இருக்கிறது. இங்கு இருக்கும் அனைவருக்கும் தெளிவாக சொல்றேன்... புரிந்து கொள்ளுங்கள். நாம் போராடுவது, நம்முடைய கழக வெற்றிக்கும், கூட்டணி வெற்றிக்கும் மட்டும் அல்ல, தமிழ்நாட்டின் வெற்றிக்காக. பா.ஜ.க.வின் டப்பா இஞ்சின் முன்னாடி, தமிழ்நாட்டோட சூப்பர் பாஸ்ட் இஞ்சின் ஒருபோதும் தலைகுனியாது. அதனால்தான், இந்தத் தேர்தலில் வெற்றி பெற வேண்டியது, ‘இது தமிழ்நாடு அணி வெர்சஸ் டெல்லி அணியா?’ என்று சொல்லி பரப்புரை செய்கிறேன். இதில் வெற்றி பெறப்போவது நம்முடைய மதச்சார்ப்பற்ற முற்போக்கு கூட்டணியின் தமிழ்நாடு அணிதான்! களத்தில் உழைப்போம்! மீண்டும் வெல்வோம்! மீண்டும் மீண்டும் வெல்வோம்! வெல்வோம் ஒன்றாக” எனப் பேசினார்.
Follow Us