Chief Minister mk stalin criticized edappadi palaniswami
தி.மு.க. இளைஞரணியின் தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு இன்று (07-02-26) விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சி கலைஞர் திடலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் சுமார் ஒரு லட்சம் இளைஞரணி நிர்வாகிகள் பங்கேற்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டை, திமுக இளைஞரணிச் செயலாளரும் தமிழக துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் நடத்தினார். இந்த மாநாட்டில் கனிமொழி எம்.பி, திருச்சி சிவா, அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது, “எடப்பாடி பழனிசாமி இப்போது என்.டி.ஏ பழனிசாமியாக மாறி இருக்கிறார். நானும் ரவுடி தான் நானும் ரவுடி தான் என்று சொல்கிற மாதிரி மைக் முன்னாடி நின்றுகொண்டு நான் தான் கூட்டணிக்கு தலைமை, நான் தான் கூட்டணிக்கு தலைமை என்று சொல்லி கொண்டிருக்கிறார், புலம்பிட்டுட்டு இருக்கிறார். இந்த நிலையில் ஒரு வித்தியாசமான போராட்டத்தை அவர் அறிவித்திருக்கிறார். பா.ஜ.க அரசு கொண்டு வந்திருக்கக்கூடிய 125 நாள் வேலை திட்டத்தை நாம் தடுத்தோம் என்று கூறி போராட்டம் நடத்த இருக்கிறார். அவர் அந்த சட்டத்தை பற்றி எதாவது படித்தாரா? அந்த சட்டத்துடைய பெயரை அவரால் சொல்ல முடியுமா?. அப்படி இருந்தால் அவருடைய அறிக்கையில் அதை ஏன் குறிப்பிடவில்லை. 100 நாள் வேலை என்பது முழுமையாக இருந்த போது 50 நாள் கூட பா.ஜ.க அரசு வேலை தரவில்லை. இப்போது 125 நாள் வேலை கொடுப்பார்கள்?. இதுதவிர மாநில அரசு 40 சதவீதம் கொடுக்க வேண்டும் என்று மாற்றி இருக்கிறார்கள்.
இதெல்லாம் பழனிசாமிக்கு தெரியுமா தெரியாதா?. என்ன சட்டம், என்ன திருத்தம் செய்திருக்கிறார்கள் என்று ஒன்றுமே தெரியாமல் இவர் வந்தால் 150 நாட்களுக்கு உயர்த்துவோம் என்று அறிவித்திருக்கிறார். ஓனரை மிஞ்சிய லேபராக பழனிசாமி இருக்கிறார். அவர்கள் கூட்டணியில் இருக்கும் டிசைனை பாருங்கள். ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு சசிகலாவை முதலமைச்சராக்க நினைத்தார்கள். அது முடியாமல் போன காரணத்தில் தான் கூவத்தூரில் வைத்து பழனிசாமியை கொண்டு வந்தார்கள். தனக்கு பதவி கொடுத்தவர்களையே கட்சியில் இருந்து நீக்கினார் பழனிசாமி. போன தேர்தலில் எல்லாரும் பிரிந்து நின்றார்கள், இப்போது பாதி பேர் பா.ஜ.க கூடவே திரும்ப வந்து இணைந்துவிட்டார்கள். இவர்கள் மக்கள் நலனுக்காக கூட்டணி வைக்கவில்லை. இவர்களுக்குள் ஒரு மியூசிக்கல் சேர் தான் விளையாடி கொண்டிருக்கிறார்கள்.
நடக்கப்போகிற தேர்தல் தமிழ்நாடுக்கும் என்.டி.ஏவுக்கும் தான். இதில் நாம் தமிழ்நாட்டை ஜெயிக்க வைக்க வேண்டும். தமிழ்நாட்டில் தோல்வி என்பது பா.ஜ.கவுக்கு புதிது அல்ல. தினமும் காலையில் சூரியன் உதிப்பதை போல அவர்களுக்கு வழக்கமான ஒன்று தான். ஆனால் இதுவரை அடைந்த தோல்வியை விட மிகப்பெரிய தோல்வியை பா.ஜ.கவுக்கும் சுயநலத்துக்காக சுயமரியாதையை விட்டு டெல்லிக்கு சேவகம் செய்யக்கூடிய அடிமை அதிமுக தோல்வியடைய போகிறது. இதுவரை அடைந்த வெற்றிகளைவிட மிகப்பெரிய வெற்றியை திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டம் அடையப்போகிறது” என்று கூறினார்.
Follow Us