திண்டுக்கல் மாவட்டத்தில் 7 துறைகளின் சார்பில் ரூ.174 கோடியில் உருவாக்கப்பட்ட 212 புதிய திட்டங்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (07-01-26) அடிக்கல் நாட்டினார். மேலும், ரூ.1,595 கோடியில் 111 முடிவற்றப் பணிகளைத் திறந்து வைத்து மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Advertisment

இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “உங்களைப் பார்க்கும் போது இங்கு நடப்பது அரசு விழாவா? இல்லை மாநாடா? என்று வியப்பாக இருக்கிறது. நகரங்களுக்கு இணையாக, கிராமங்களுடைய உட்கட்டமைப்பு வளர வேண்டும் என்ற சமச்சீரான கொள்கை தான் திராவிட மாடல் அரசினுடைய இலக்கணம். அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் செய்யப்பட்டதை விட திமுக ஆட்சியில் அதிக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.  அரசு ஊழியர்களின் பல கால கோரிக்கையான பழைய ஓய்வு திட்டத்தை தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வு திட்டம் என்ற பெயரில் செயல்படுத்த நான் ஆணையிட்டுருக்கிறேன். இதன் மூலமா நிச்சயமற்ற  எதிர்காலம் என்ற நிலையிலிருந்து நம்பிக்கை  அளிக்கிற எதிர்காலத்தை நாம உருவாக்கி இருக்கிறோம். இன்னொரு பக்கம் நாட்டில் சாமானிய மக்கள் ஒருத்தர் கூட நிம்மதியா இருக்க கூடாதுன்னு நினைக்கிற ஒரு கூட்டம், இந்த  திட்டத்தை எல்லாம் செய்யவே முடியாது என்று சொன்னார்கள். ஆனால், நாம் செய்து காட்டிருக்கிறோம். 20 லட்சம் மாணவர்களுக்கு  லேப்டாப் வழங்கக்கூடிய திட்டத்தை உலகம் உங்கள் கையில் என்கிற திட்டத்தை  நான் தொடங்கி வைத்தேன். 

Advertisment

ஆனால் கடந்த ஆட்சியில் 2019ஆம் ஆண்டு பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்தை நிறுத்திவிட்டார். 68 கோடி மதிப்பில் வாங்கப்பட்ட 55,00 லேப்டாப்களை வீணடித்துவிட்டார்கள் என்று சிஏஜி அறிக்கை வெளியிட்டது. இது பற்றி எடப்பாடி பழனிசாமி ஏதாவது சந்தேகம் இருந்தால் 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் அறிக்கையை எடுத்து பார்க்கலாம். மக்கள் நலனுக்காக நாம் செய்கிற திட்டங்களை குறை சொல்ல முடியாதவர்கள், இல்லாத பிரச்சினைகளை உருவாக்கி குளிர் காயலாம் என்று நினைக்கிறார்கள். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா  தமிழ்நாட்டுக்கு வந்தார். அவர் அமித் ஷா இல்லை, அவதூறு ஷாவா என்று சந்தேகம் வருகிறது. அந்த அளவுக்கு உண்மைக்கு புறம்பாக பேசி போயிருக்கிறார். தமிழ்நாட்டில் இந்து சமய நம்பிக்கை வழிபாட்டு உரிமைகளுக்கு முடிவு கட்டும் வகையில் தமிழ்நாடு செயல்படுகிறது என்று பேசியிருக்கிறார். இதற்காக என்னுடைய கடுமையான கண்டனத்தை உங்கள் மூலமாக இந்த விழாவின் நான் தெரிவிக்கிறேன்.

தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்று அவருக்கு தெரியவில்லை. நம் அரசு பொறுப்பேற்றதில் இருந்து இதுவரைக்கும் சுமார் 4,000 கோயில்களில் குடமுழுக்க நடத்திருக்கிறோம். இப்படி ஒரு சாதனையை நீங்கள் ஆளுகிற பாஜக மாநிலங்களில் செய்திருக்கிறீர்களா? கண்டிப்பாக இருக்காது. உண்மையான பக்தர்கள் நம் அரசை பாராட்டுகிறார்கள். பக்தர்கள் விரும்பக்கூடிய ஆட்சியாக தான் திராவிட மாடல் ஆட்சி இருக்கிறது. ஆன்மீக பெரியவர்கள் விரும்பும் ஆட்சியாக இருக்கிறது. அனைத்து சமயத்துவர்களின் நம்பிக்கைக்கு மதிப்பளித்து அவர்களின் மத உரிமைகளை காப்பாற்றி ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறோம். இப்படிபட்ட தமிழ்நாட்டில் இந்துக்களுடைய உரிமைகள் பறிக்கப்படுகிறது என்று துளியும் உண்மையில்லாத குற்றச்சாட்டை அமித் ஷா சொல்வது அவருடைய பதவிக்கு கண்ணியம் அல்ல. கலவரம் செய்யவும் குழப்பத்தை நினைக்கிற எண்ணம் தமிழ்நாட்டில் ஈடேறவில்லை. இனியும் அது நடக்காது, நடக்க விடமாட்டோம். இந்த ஸ்டாலின் இருக்கிற வரைக்கும் அது நடக்கவே நடக்காது.

Advertisment

ஒரு சிலர் இப்படி பேசி வட மாநிலங்களில் வெறுப்பு பிரச்சாரம் செய்யலாமா என்பது தான் அவர்களுடைய என்ணம். அமித் ஷா தமிழ்நாட்டுக்கு வந்து அவதூறை மட்டும் பரப்பிட்டு போகவில்லை, ஒரு நல்ல காரியத்தை செய்து போயிருக்கிறார். நம்முடைய வேலையை அவர் ஈசியாக்கி விட்டார். அதற்காக நான் நன்றி தெரிவிக்கிறேன். தமிழ்நாட்டில் மோடி ஆட்சி அமைய வேண்டுமா வேண்டாமா என்று மக்களை பார்த்து அமித் ஷ கேட்டார். ஐயா இதையேதான் நாங்களும் சொல்றோம். 2026 தேர்தல் என்பது தமிழ்நாட்டை நாங்கள் ஆள வேண்டுமா? இல்லை எங்கேயோ டெல்லியில் இருந்து நமக்கு சம்பந்தம் இல்லாதவன் ஆளவேண்டுமா என்று முடிவு செய்வது தான் இந்த தேர்தல். இது தமிழர்களின் சுயமரியாதைக்கு விடப்பட்டுள்ள சவால். அதிமுக கூட்டணிக்கு வாக்களித்தால் பா.ஜ.க தான் தமிழ்நாட்டை ஆளுகிறது என்று நாங்கள் சொல்ல தேவையில்லை. அமித் ஷா நேரடியாகவே ஒப்புதல் வாக்கு தந்திருக்கிறார்.

நீட்டை விடாப்பிடியாக திணிக்கிற, தமிழ்நாட்டுக்கான கல்வி விடுவிக்காமல் தேசிய கல்வி கொள்கையை திணிக்கிற, தொகுதி மறுசீரமைப்பு என்கிற பேரில் தமிழ்நாட்டின் ஜனநாயக வலிமையை சூறையாடுகின்றம், வடமாநிலங்களில் தமிழர்களை கொச்சைப்படுத்துகிற பா.ஜ.க ஆட்சி அமைய வேண்டும் என பழனிசாமி பாடுபடுகிறார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகி தமிழ்நாட்டில் பா.ஜ.கவின் பிராக்ஸி ஆட்சி நடந்தது. கடந்த 5 ஆண்டுகளாக தான் அதிலிருந்து தமிழ்நாடு மீண்டு தலைநிமிர ஆரம்பித்திருக்கிறோம். இப்போது நேரடியாக பா.ஜ.க ஆட்சி என சொல்லி வருகிறார்கள். 11 ஆண்டுகளாக ஒன்றியத்தில் நடக்கக்கூடிய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் தமிழ்நாட்டுக்காக ஒரு துரும்பை கூட கிள்ளிப்போடாத உங்களை தமிழ்நாட்டு மக்கள் நம்ப தயாராக இல்லை.  2019,  2021, 2024 என்று  கடந்த மூன்று தேர்தல்களிலும் தமிழர்கள் கொடுத்த பரிசு உங்களுக்கு புரியவில்லையா?. தமிழ்நாட்டுக்கு ஓரவஞ்சனை செய்வதை நீங்கள் மாற்றிக்கொள்ளாத போது  தமிழர்கள் மட்டும் தங்களுடைய முடிவை  மட்டும் எப்படி மாற்றிக்கொள்வார்கள்? மக்கள் எப்போதும் நம் அரசு பக்கம் தான் இருக்கிறார்கள். திரும்பவும் நாங்கள் தான் வருவோம்” என்று கூறினார்.