பீகார் மாநிலத்தில் நாளை (06-11-25) முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், மகாராஷ்டிரா, கர்நாடகா போல் ஹரியானா மாநிலத்திலும் தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டு முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது குறித்து டெல்லி காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ராகுல் காந்தி, முக்கிய ஆதாரங்களை வெளியிட்டார்.
கடந்தாண்டு நடைபெற்ற ஹரியானா சட்டமன்றத் தேர்தலில், 2 கோடி வாக்காளர்களில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டதாகவும், அதில் பதிவான வாக்கில் 8இல் ஒரு வாக்கு கள்ள வாக்கு என்றும் குற்றம்சாட்டி ஆதாரங்களை வெளியிட்டார். மேலும், 1.24 வாக்காளர்களுக்கு போலி புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், பிரேசில் மாடல் ஒருவரின் புகைப்படத்துடன் பல பெயர்களில் 22 வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஒரே தொகுதியில் ஒரே பெண் படத்துடன் 100 வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இரு வாக்குச் சாவடிகளில் ஒரே படத்துடன் 223 பேர் வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆதாரங்களை வெளியிட்டார். சிசிடிவி கேமரா காட்சிகளை வெளியிடாமல் பா.ஜ.கவுக்கு தேர்தல் ஆணையம் உதவுவதாகவும், பீகாரிலும் ஆட்சியை திருட பா.ஜ.க சதி செய்வதாகவும் ராகுல் காந்தி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இந்த விவகாரம் நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தி பேசிய வீடியோவை பகிர்ந்து தேர்தல் ஆணையத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பதிவில், “திருடப்படும் மக்கள் தீர்ப்பு, வாய்திறக்காத தேர்தல் ஆணையம்! அண்மைக்காலமாக பா.ஜ.க. பெற்று வரும் தேர்தல் வெற்றிகளின் உண்மைத்தன்மை குறித்து மீண்டுமொரு முறை பெரும் ஐயம் எழுகிறது. ஹரியானாவில் நடைபெற்றுள்ள வாக்குத் திருட்டு குறித்து எனது சகோதரரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ‘பச்சையான ஆதாரங்கள்’ அதிர்ச்சியூட்டுகின்றன.
வெறுப்பினை மூட்டி, பொய் வாக்குறுதிகளைக் கூறி 2014-இல் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க.வின் பிளவுவாத அரசியலை மக்கள் இனியும் நம்பத் தயாராக இல்லை என்ற நிலை எப்போதோ ஏற்பட்டுவிட்டது. ஆகையால் தேர்தலில் முறைகேடுகள் என்பதையெல்லாம் தாண்டி, வாக்காளர் பட்டியலிலேயே அப்பட்டமான அட்டூழியத்தை அரங்கேற்றி, மக்களின் ஜனநாயகத் தீர்ப்பைக் களவாண்டு, இன்று அம்பலப்பட்டு நிற்கிறது. இதன் அடுத்தகட்டம்தான் எஸ்.ஐ.ஆர் என்ற பெயரில் மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சதி என்பதற்கு பீகாரும், இன்று வெளியாகியுள்ள #HaryanaFiles-உமே சான்று. இவை அனைத்துக்கும் பொறுப்பான தேர்தல் ஆணையம் இத்தனை குற்றச்சாட்டுகள், அடுக்கடுக்கான ஆதாரங்களோடு முன்வைக்கப்பட்டும் எந்த ஒரு முறையான விளக்கமும் அளிக்காமல் இருப்பது வேதனையளிக்கிறது. மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் தேர்தல் ஆணையம், மக்கள் மன்றத்தில் உரிய பதில் சொல்லி, இந்தியாவில் மக்களாட்சி முழுவதும் குழிதோண்டிப் புதைக்கப்படவில்லை என நம்பிக்கையைத் துளிர்க்க வைக்குமா?” எனப் பதிவிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/05/rahulmkst-2025-11-05-18-29-26.jpg)