நாடாளுமன்றத்தில் 2026-27 ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை கடந்த 1ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில், பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின. ஆனால், தமிழ்நாட்டிற்கு என எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றும் மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.
இந்த நிலையில், மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து இன்று (12-02-26) தமிழ்நாடு முழுவதும் திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தின. அந்த வகையில் சென்னை சின்னமலை பகுதியில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மத்திய பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தின. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். திமுக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் பங்கேற்று மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின.
இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை சுட்டிக்காட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஜீரோ கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “பட்ஜெட்டில் ‘ஜீரோ கொடுத்தால் கைகட்டி வேடிக்கை பார்ப்போம் என்று நினைத்தார்களா? தமிழ்நாட்டுக்கு வஞ்சனை செய்வதை மட்டுமே எண்ணமாகக் கொண்டு செயல்படும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் திரண்டு தமிழ்நாட்டு மக்களின் குரலாகக் கேள்வி கேட்டுள்ளது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி. தமிழ்நாட்டுக்கான நிதிகளை மறுத்து அநீதியை இழைக்கும் என்.டி.ஏ கூட்டணிக்கு ‘ஜீரோ’-வைத் திருப்பியளிப்போம். தமிழ்நாடு Vs என்.டி.ஏ எனும் இந்த ஜனநாயகப் போரில் தமிழ்நாடு தலைகுனியாது, தமிழ்நாடு வெல்லட்டும், வெல்வோம் ஒன்றாக” எனப் பதிவிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/12/mkstalinoriginal2-2026-02-12-23-09-39.jpg)