Chief Minister M.K. Stalin chairs a consultative meeting regarding the road show of political parties
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
இதற்கிடையில், அரசியல் கட்சிகளின் ரோட் ஷோ-க்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கக் கோரும், அதுவரை எந்த கட்சிகளுக்கும் ரோட் ஷோ-க்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில் குமார், அரசியல் கட்சிகளின் ரோட் ஷோக்களுக்கு தமிழக அரசு வழிமுறைகளை வகுக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து, அரசியல் கட்சிகளுடைய கூட்டங்களுக்கு விதிமுறைகளை ஒதுக்கக்கூடிய வழக்கு விசாரணை கடந்த அக்டோபர் 27ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அப்போது நீதிபதிகள், ‘விதிமுறைகளை விரைவில் வகுக்க வேண்டும், விதிமுறைகளை வகுக்காவிட்டால் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும்’ எனத் தெரிவித்தனர். அதற்கு ‘காவல்துறை, மாநகராட்சி மற்றும் மருத்துவ நல்வாழ்வுத்துறை ஆகிய துறைகளோடு இணைந்து கலந்து ஆலோசித்த பிறகு தான் விதிமுறைகளை வகுக்க முடியும். எனவே அதற்குரிய கால அவகாசம் வழங்க வேண்டும்’ என்று தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், 10 நாட்களுக்குள் விதிமுறைகளை சமர்பிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு இந்த வழக்கை வரும் நவம்பர் 11ஆம் தேதி தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (01-11-25) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் முருகானந்தம் மற்றும் பொதுத்துறை செயலாளர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். அதில், ரோடு ஷோ நடக்கும் பகுதியில் போதுமான அளவுக்கு குடிநீர் வசதி இருக்க வேண்டும், ஆம்புலன்ஸ் வாகனங்கள் வந்து செல்வதற்கான இட வசதி இருக்க வேண்டும், பொது போக்குவரத்திற்கு பாதிப்பு இல்லாமல் இருக்கக்கூடிய இடங்களை அரசியல் கட்சியினர் தேர்வு செய்ய வேண்டும், தீயணைப்பு மற்றும் மீட்பு வாகனங்கள் நிறுத்துவதற்கான இடவசதி் இருக்க வேண்டும் என்பன போன்ற விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் ஓரிரு தினங்களில் இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow Us